கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி..!!
மறைந்த கவிஞர் வாலியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. ‘தமிழ் சினிமாவின் ஐந்து தலைமுறை கண்ட வாலி(ப) கவிஞர்’ என்று பெயர் எடுத்த வாலி இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமான வாலியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த கவிஞர் வாலிக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை நேரில் செலுத்தினர்.
கருணாநிதி : வாலியின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் பேர் இழப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூயுள்ளார்.
ரஜினி : கவிஞர் வாலிக்கு நடிகர் ரஜினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், வாலி அவர்களை பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும், அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், பா.ஜ.வின் இல.கணசேன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகினரை பொறுத்தமட்டில் ரஜினி, கமல், அஜீத் அவரது மனைவி ஷாலினி, சூர்யா, பிரபு, சிவக்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மிர்ச்சி சிவா, உதயநிதி ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்திரன், ரமேஷ்கண்ணா, குஷ்பு, சுகன்யா, டைரக்டர்கள் பாலசந்தர், பாண்டிராஜ், பாண்டியராஜன், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர், வசந்தபாலன், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஜி.சேகர், பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், வெங்கட்பிரபு, மாதேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், அனிருத், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ., பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், எடிட்டர் மோகன், சித்ரா லெட்சுமணன், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன், உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
வானமும் அழுதது : வாலியின் மறைவுக்கு வானமும், தனது கண்ணீரை மழையாய் சிந்தியது.
உடல் தகனம்: வாலியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வாலி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் வாலி(ப) பாடல்கள் பல தலைமுறைக்கும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
Average Rating