பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கறிவேன்! -PLOTE சித்தார்த்தன் பேட்டி
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார் என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நேற்று யாழப்பாணத்தில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது.
எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்.
26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.
கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று மாகாணசபைக்கான அதிகாரங்களை தக்க வைக்க டெல்லியில் பலரையும் சந்திக்க வேண்டியிருக்கின்றது.
யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையெல்லாம் 13 பிளஸ் பற்றி கதைத்த மகிந்த இப்போது 13 ல் இருப்பவற்றையும் வெட்டுவதில் முன்னுக்கு நிற்கின்றார்.
சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே. அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.
ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே.
அத்துடன் தமிழர்கள் தற்போது பலவீனப்படுத்தப்பட்ட நிலையினிலேயே உள்ளனர்.
இந்தியாவை பொறுத்த வரையினில் தமிழ் மக்களிற்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டுமென்ற மனோ நிலையில் இப்போதிருப்பதாகவும் நான் கருதவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக பிரபாகரனுக்கும் எனக்குமிiடையே ஒத்த கருத்துக்கள் இல்லாத போதும் பிரபாகரனை நான் பிரமிப்புடன் மதிக்கின்றேன்.
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.
இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார்.
பிரபாகரனுக்கு அஞ்சிப் பதுங்கிய மஹிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கு அறிவேன்.
முள்ளிவாய்க்காலில் போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பதை தெரிந்திருந்தும் இறுதிக் கணங்களிலும் தற்கொலைப் போராளிகளாக வெடிக்கும் கரும்புலிகளை பிரபாகரனாலேயே உருவாக்க முடிந்திருந்தது.
அதிலும் இந்தியாவிலும் கொழும்பிலுமென அனைத்து வசதி வாய்ப்புக்களுடனும் வாழ்ந்து வந்திருந்த போதும் பிரபாகரனது ஒற்றை உத்தரவினையடுத்து வெடித்து சிதறும் கரும்புலிகளை அவர் உருவாக்கியிருந்தார்.
இத்தகைய இராணுவக் கட்டமைப்பு சார்ந்து ஈழத்தை உலகை திரும்ப்பிப் பார்க்க வைத்த வகையில் அவர் மதிப்பிற்குரியவரேயென சித்தார்த்தன் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.
இந்தியாவினில் 6 ஆயிரம் போராளிகளையும் களத்தில் 15 ஆயிரம் போராளிகளையும் 1983 களிலேயே தமது அமைப்பு (PLOTE) கொண்டிருந்த போதிலும் அவர்களை ஒருங்கிணைக்கவோ பேணவோ முடியாமல் போனமையாலேயே தாம் பின்னடைவை அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating