2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை!!
சலூன் கடை வைக்க பணம் கிடைக்காத விரக்தியில், சாப்பாடு மற்றும் மாம்பழத்தில் விஷம் வைத்தும் கழுத்தை நெரித்தும் 2 பெண் குழந்தைகளை கொன்றார் தந்தை. பின் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பூரை அடுத்த சூளையில் நடந்த இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புரசைவாக்கம் அடுத்த சூளை தட்டாங்குளம் ஷேக் மோகன்லால் சவுக்கார் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (38). முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி மலர்விழி (35). இவர்களுக்கு பவித்ரா (5), சந்தியா (3) என்ற மகள்கள் உள்ளனர். பார்த்திபன் தம்பி சீனிவாசன், சூளை ஏபி ரோட்டில் சலூன் கடை வைத்துள்ளார். அங்கு பார்த்திபன் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சொந்தமாக சலூன் கடை வைக்க வேண்டும் என்று பார்த்திபன் ஆசைப்பட்டார். அதற்கு தேவையான பணத்தை கடனாக தரவேண்டும் என்று சீனிவாசனிடம் அவர் கேட்டுள்ளார். சீனிவாசன் பணம் தர மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது. ஆனாலும் வழக்கம்போல் பார்த்திபன் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் காலை பார்த்திபன் வேலைக்கு சென்றார். குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வடபழனியில் உள்ள தங்கை வீட்டுக்கு மலர்விழி போனார். அப்போது குழந்தைகளிடம், ‘இரவு நான் வரமாட்டேன். நீங்கள் பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்குங்கள்’ என கூறியுள்ளார். ஆனால் குழந்தைகள் தாய் கூறியபடி பார்த்திபன் தாய் வீட்டுக்கு (பாட்டி வீட்டுக்கு) செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தனர். வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய பார்த்திபன், குழந்தைகளுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கியுள்ளார். அத்துடன் அருகில் உள்ள கடையில் மாம்பழமும் வாங்கியுள்ளார்.
வீட்டுக்கு வந்ததும் சாப்பாட்டிலும், மாம்பழத்திலும் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். பின்னர் பார்த்திபன் இரக்கமின்றி குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவர்கள் இறந்ததை உறுதி செய்து கொண்டதும் சிறிது நேரத்தில் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பார்த்திபனின் தாய் சந்திரா, அவர்களை தேடி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. படுக்கையில் குழந்தைகள் மயங்கிக் கிடந்தனர். ஒரு அறையில் பார்த்திபன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.இதை பார்த்தும் சந்திரா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மூன்று பேரையும் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்தனர்.
தொழில் தொடங்க தம்பி கடன் கொடுக்காத விரக்தியில் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்னையில் இந்த சம்பவம் நடந்ததா என்று மலர்விழியிடம் போலீசார் விசாரிக்கின்றனர். 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சூளையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating