வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் தள்ளுபடி

Read Time:3 Minute, 11 Second

jayalitha.jpgவருமான வரித்துறையினர் தொடர்ந்த 4 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் முதலாவது நீதிமன்றம். “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது விசாரணை நடத்தப் போதிய முகாந்திரம் உள்ளது. அதேபோல, அவர்கள் இருவரும் இதுவரை வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை’ என்று மாஜிஸ்திரேட் ஜே.வி.ராஜு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1991 முதல் 94-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்று கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் 4 வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை காலதாமதம் ஆனதால், வருமானவரித் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்கக் கேட்டு கொண்டது. அதன்படி, நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலையில் நடந்தது.

அப்போது மாஜிஸ்திரேட் ஜே.வி. ராஜு, இந்த வழக்கு மீதான விசாரணையை மாலை 5 மணிக்கு தள்ளிவைப்பதாகத் தெரிவித்தார். மாலையில் விசாரணை தொடங்கியபோது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுக்களை மாஜிஸ்திரேட் ராஜு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அப்போது, “வழக்கு தொடர்பான உத்தரவு நகலைப் படிக்க போதிய கால அவகாசம் தேவை. உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, 4 வாரங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக மாஜிஸ்திரேட் ஜே.வி.ராஜு உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நல்லுர் வீதி கச்சேரியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்
Next post ஜப்பானின் 111 வயது மூத்த குடிமகன் மரணம்