30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மும்பை வைர வியாபாரியின் மகன் படுகொலை 2 வாலிபர்கள் சிக்கினர்!!
மும்பையில் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வைர வியாபாரியின் மகன் படுகொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக வியாபாரியின் உறவினர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.தெற்கு மும்பையின் கிர்காம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜிதேந்திரா ரங்கா, வைர வியாபாரி. இவரது இரண்டாவது மகன் ஆதித்யா ரங்கா (13).
அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்தான். ஜிதேந்திராவின் நெருங்கிய உறவினர் ஹிமான்சு ரங்கா, எம்பிஏ பட்டதாரி. நேற்று முன்தினம் மதியம், ஜிதேந்திரா வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு லேண்ட்லைனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஜிதேந்திரா மனைவி போனை எடுத்தார்.
அதில் பேசியவர், தான் ஜிதேந்திராவின் நெருங்கிய நண்பர் என்றும், அருகில் உள்ள கடைக்கு ஆதித்யாவை அனுப்பி வைக்குமாறும் கூறினார். அதை நம்பி மகனை அனுப்பி வைத்தார் அந்த தாய். அதன் பிறகு சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் ஆதித்யா பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜிதேந்திராவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ஆதித்யாவை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமானால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜிதேந்திரா, போலீசுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சிறுவனை தேடத் தொடங்கினர்.
இதற்கிடையில், ஜிதேந்திராவின் உறவினரான வாலிபர் ஹிமான்சு, தனது நண்பர் பிஜேஷூடன் (25) காரில் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
ஆதித்யாவை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம்‘ என ஜிதேந்திராவுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எதேச்சையாக ஹிமான்சு வந்த காரை பார்த்தபோது, அதில் ரத்த கறை இருந்தது. மேலும் ஆதித்யாவின் செருப்புகளும் காரில் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் ஆதித்யாவை கடத்தி கொன்றது தெரியவந்தது.
கிரிக்கெட்டில் பெட் கட்டியதில் ஹிமான்சுக்கு ரூ.7 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. அதை சரிகட்டுவதற்காக நண்பர் பிஜேஷுடன் சேர்ந்து ஜிதேந்திராவின் மகனை கடத்தி பணம் பறிக்க ஹிமான்சு திட்டமிட்டார். தங்கள் திட்டப்படி காரில் ஆதித்யாவை கடத்தினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜிதேந்திரா மிரட்டலுக்கு பணியாமல் போலீசுக்கு சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறுவனை காரில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுள்ளனர். பின்னர் மும்பை&புனே எக்ஸ்பிரஸ் சாலையில் உடலை எரித்து விட்டு வந்து ஆதித்யாவை தேடுவது போல நடித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் நாடகம் சிறிது நேரம் கூட நீடிக்காமல் சிக்கிக் கொண்டனர். நேற்று மாலை சிறுவன் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
Average Rating