காமக் களியாட்டங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் புங்கா பார்ட்டி அரங்கை பகிரங்கமாக்கினார் இத்தாலிய முன்னாள் பிரதமர் பேர்லுஸ்கோனி!!
இத்தாலிய முன்னாள் பிரதமரான சில்வியோ பேர்லுஸ்கோனி, தான் பாலியல் கேளிக்கை விருந்துகளை நடத்தியதாக கூறப்பட்ட தனது மாளிகையின் பிரத்தியேக அரங்கிற்குள் முதல் தடவையாக செய்தி நிறுவனங்களின் படப்பிடிப்பாளர்களை அனுமதித்துள்ளார். 77 வயதான சில்வியோ பேர்லுஸ்கோனி இத்தாலியின் மிகப்பொரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு சொந்தமாக ஊடக நிறுவனமொன்றும் உள்ளது. மூன்று தடவைகள் இத்தாலிய பிரதமராக பதவி வகித்தவர் அவர். 1994-2000, 2001,-2006, 2008 ஆகிய காலப்பகுதிகளில் அவர் பிரதமர் பதவியிலிருந்தார்.
அடிக்கடி ஆட்சி மாறுவது இத்தாலியில் வழக்கம். இந்நிலையில் இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னரான காலத்தில் நீண்டகாலம் பதவியிலிருந்த பிரதமர் எனும் பெருமையும் அவருக்குள்ளது. 590 கோடி அமெரிக்க டொலர் சொத்துக்களைக் கொண்ட பேர்லுஸ்கோனி உலகின் 169 ஆவது பெரும் செல்வந்தர் என போர்ப்ஸ் சஞ்சிகை 2012 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தது. விளையாட்டுக்களில் தீவிர ஈடுபாடு கொண்ட பேர்லுஸ்கோனி, இத்தாலியின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான ஏ.சி. மிலானின் உரிமையாளரும் ஆவார்.ஆனால், செக்ஸ் விளையாட்டுக்களிலும் பேர்லுஸ்கோனி அதிக ஈடுபாடு கொண்டிருந்தமை அவரின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இரு தடவை திருமணமாகி விவகாரத்தான சில்வியோ பேர்லுஸ்கோனி தனது மாளிகையில் விருந்துகள் என்ற பெயரில் காமக்களியாட்டங்களை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ‘புங்கா புங்கா பார்ட்டிகள்’ என இந்நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டன. அதேவேளை, மொரோக்கோவைச் சேர்ந்த இரவு விடுதி நடன மங்கையான கரீமா எல் மஹ்ரோவ் எனும் யுவதி 18 வயதை அடைவதற்கு முன் அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பேர்லுஸ்கோனி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2010 பெப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது கரீமா எல் மஹ்ஹேராக் 17 வயதானவராக இருந்தார்.
ரூபி ருபாகோகியோரி எனும் பெயரில் நடன நிகழ்ச்சிகளில் பங்குற்றிய கரீமா எல் மஹ்ரோவ்விடம் பாலியல் சேவைக்காக பணம் செலுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை சில்வியோ பேர்லுஸ்கோனி எதிர்கொண்டுள்ளார். கரீமா எல் மஹ்ரோவுடன் சில்வியோ பேர்லுஸ்கோனி சம்பந்தப்பட்டுள்ள விவகாரம் அம்பலமான கதை சுவாரஷ்யமானது. 2010 மே 27 ஆம் திகதி பல்லாயிரக்கணக்கான யூரோ பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இத்தாலிய மிலான் நகர பொலிஸாரால் எல் மெஹ்ரோவ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் எந்த அடையாள அட்டையோ வேறு ஆவணங்களோ இருக்கவில்லை. 18 வயதை அடையாதவர் ஆகையால் அவரை சிறார்களுக்கான இல்லமொன்றில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி ஒருவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அவரை பொலிஸார் விசாரிக்கத் தொடங்கிய சில மணித்தியாலங்களில் அப்போதைய பிரதமரான சில்வியோ பேர்லுஸ்கோனியிடமிருந்து மிலான் பொலிஸ் தலைமையகத்துக்கு தொலைபேசி அழைப்புபொன்று வந்தது.
அவ்வேளையில் பேர்லுஸ்கோனி பிரான்ஸுக்கு சுற்றுலா மேறகொண்டிருந்தார். கரீமா அல் மஹ்ரோவ் எனும் யுவதி எகிப்தை சேர்ந்தவர் எனவும் அப்போதைய எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் உறவினர் எனவும் பேர்லுஸ்கோனி கூறினார். ராஜதந்திர சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக அந்த யுவதியை விடுதலை செய்யுங்கள் எனவும் பொலிஸாருக்கு பேர்லுஸ்கோனி உத்தரவிட்டார். பேர்லுஸ்கோனியின் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளின் பின்னர் எல் மஹ்ரோவை பொலிஸார் விடுவித்தனர். எல் மஹ்ரோவ்வுடன் இத்தாலிய பிரதமர் பேர்லுஸ்கோனி பாலியல் உறவு கொண்டு அதற்காக பணம் வழங்கினார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை 2010 ஒக்டோபரில் செய்தி வெளியிட்டது.
இதை பேர்லுஸ்கோனி மறுத்தார். அதேவேளை, அப்போது 74 வயதானவராக இருந்த பிரதமருடன் தான் பாலியல் உறவு கொள்ளவில்லை எனவும் வெறுமனே இராப்போசன விருந்துபசாரமொன்றுக்காகவே அவரின் மாளிகைக்கு சென்றதாகவும் எல் மஹ்ரோவ் கூறினார். தான் பிரதமருக்கு அருகில் அமர்ந்திருந்தாகவும் பின்னர், அவர் தன்னை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று 7000 யூரோ (சுமார் 11 இலட்சம் இலங்கை ரூபா) பணமும் நகையும் வழங்கியதாகவும் இத்தாலிய பத்திரிகைகளிடம் கரீமா எல் மஹ்ரோவ் கூறினார்.
எனினும் 18 வயதை அடையாத பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டமை, பொலிஸாரின் விசாரணைகளில் கடுமையான தலையீடு செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேர்லுஸ்கோனி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அதிகார துஷ்பிரயோம், பாலியல் குற்றச்சாட்டு, வரி மோசடி குற்றச்சாட்டு ஆகியவற்றுடன் இத்தாலிய நிதி நெருக்கடியும் அதிகரித்த நிலையில் 2011 நவம்பர் மாதம் பிரதமர் பதவியிலிருந்து சில்வியோ பேர்லுஸ்கோனி விலகினார். கடந்த வருட இறுதியில் அவர் வரிமோசடி வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார். எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை. அவர் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.
இப்போது அவர் மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் விவரணப்படமொன்றுக்காகத்தான் அவர் தனது தொலைக்காட்சி நிறுவன தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களை அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் மீதான குற்றவியல் வழக்கில் வழக்குத்தொடுநர்கள் தமது இறுதிக்கட்ட வாதங்களை நேற்று முன்வைப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்படி விவரணப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
2010ஆம் ஆண்டு தனது 2ஆவது மனைவியை விவாரத்து செய்த சில்வியோ பேர்லுஸ்கோனிக்கு தற்போது 27 வயதான ஒரு காதலி உள்ளார். பிரான்செஸ்கா பஸ்கால் எனும் இப்பெண்ணும் கரீமா எல் மஹ்ரோவ்வை விடுதலை செய்வதற்கு பொலிஸார் மீது அழுத்தங்களை பிரயோகித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில்வியோ பேர்லுஸ்கோனிக்கு எதிரான தற்போதைய வழக்குகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 15 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது..
Average Rating