நெல்லையில் பயங்கரம்: குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியார் வெட்டிக் கொலை!!
மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள களக்குடி கிராமம் புதுக்குளம் தெருவைச் சேர்ந்தவர், பண்டார நாடார். அவருடைய முதல் மனைவி இறந்து விட்டார்.
அவர்களுக்கு 6 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மேலக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலம்மாள் (வயது 39) என்பவரை பண்டார நாடார் 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். வேலம்மாளும் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர்.
அவருக்கு முதல் கணவர் மூலம் ராதா, மீனா என்ற 2 மகள்கள் உள்ளனர். அனைவரும் சேர்ந்தே வசித்து வந்துள்ளனர். ராதாவுக்கும், பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அருள்ராஜ் (27) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ராதா களக்குடியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த பின்னர் சமாதானமாகி, கணவர் வீட்டுக்குச் சென்ற போதும் கணவன்-மனைவி தகராறு நீடித்தே வந்துள்ளது.
மீண்டும் தாயார் வீட்டுக்கு ராதா குழந்தைகளுடன் வந்துவிட்டார். பின்னர் இருவீட்டாரும் கலந்து பேசியும், அங்கு வாழப் பிடிக்காமல் ராதா களக்குடியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராதாவை அழைத்துச் செல்ல அருள்ராஜ் வந்துள்ளார். அப்போது அவருக்கும், மாமியார் வேலம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ராதாவை அவருடன் அனுப்பி வைக்க வேலம்மாள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேலம்மாள் மீது அருள்ராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று காலை 10 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் அருள்ராஜ் உள்பட 2 பேர் வேலம்மாள் வீட்டுக்கு வந்துள்ளனர். வேலம்மாள் வீட்டின் உள்ளே பீடி சுற்றிக் கொண்டு இருக்க, வெளியே அவருடைய கணவர் பண்டார நாடார், மகள்கள் ராதா, மீனா ஆகியோர் இருந்துள்ளனர்.
திடீரென அரிவாளுடன் அருள்ராஜ் வீட்டுக்குள் ஓடி, சரமாரியாக வேலம்மாளை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் வேலம்மாள் கீழே சாய்ந்ததும், அங்கிருந்து அருள்ராஜ் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்த நபரும் தப்பிச் சென்றுவிட்டார்.
பண்டார நாடார் உள்பட எல்லாரும் வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்த போது, வேலம்மாள் சம்பவ இடத்தில் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்ததும் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் கிரேசியஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.
வேலம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருள்ராஜ் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருள்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Average Rating