குமரி முத்து மீது நடவடிக்கை; விஷாலுக்கு சலுகை! பின்னணியில், 15 இளம் நடிகர்களா?
நடிகர் குமரிமுத்துவை, சங்கத்திலிருந்து நீக்கிய நடிகர் சங்கம், நடிகர் விஷால் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது, உறுப்பினர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதை போல தோன்றுகிறது என, சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடிகர் விஷால் சங்கத்திலிருந்து நீக்கப்படாததன் பின்னணியில், 15 இளம் நடிகர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடப்பதாக, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் தொடர்பாக, சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, கடிதம் மூலம், நடிகர் குமரிமுத்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.
“கமலின், “விஸ்வரூபம் படம் பிரச்னையில் சிக்கிய போது, “நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என, நடிகர் விஷால், இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
நடிகர் சங்கத்தை குறை கூறிய இவர்களிடம், விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் மூலம், இருமுறை கடிதம் எழுதப்பட்டது. குமரிமுத்துவும், விஷாலும், விளக்க கடிதம் அனுப்பாமல் இருந்தனர். இரண்டு முறை செயற்குழு கூட்டப்பட்டு, இருவரின் பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிப்ரவரி மாதம் செயற்குழு கூட்டம் நடந்தபோது, குமரிமுத்து நேரில் ஆஜராகி, நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தார்.
அதே நேரத்தில், நடிகர் விஷால் நேரில் செல்லாமல், தான் அனுப்பிய விளக்க கடிதத்தில், “நடிகர் சங்கம் குறித்து, மற்ற உறுப்பினர்கள் பேசியதையே நானும் தெரிவித்திருந்தேன். சங்கம் குறித்து தவறாக கருத்து ஏதும் சொல்லவில்லை. என் போன்ற நடிகர்களை சங்கடப்படுத்தாதீர்கள். நான் நடித்த,”சமர் படப் பிரச்னையில், சங்கம் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என, குறை கூறியிருந்தார்.
நடிகர் விஷாலிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் அனுப்பிய கடிதம், அவர் விளக்கம் அளிக்க, நேரில் ஆஜராகாதது, பிற நடிகர், நடிகைகளுக்கு தெரிய வர, தமிழ்ச் சினிமாவில், முன்னணியில் உள்ள, 15 இளம் நடிகர்களும், சில நடிகைகளும் மொபைல் போனில், விஷாலை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
அப்போது, “உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், சங்க செயல்பாடு குறித்து, நாங்கள் அடுத்தடுத்து பிரச்னையை கிளப்புவோம கவலைப்படாதீர்கள். இக்கடிதத்திற்கு, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டாம். சங்கத்தின் அடுத்த நடவடிக்கை என்னவென்று பார்ப்போம் என பேசி, ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.
இத்துடன், சங்க செயல்பாடு குறித்து மூத்த நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கவலை தெரிவித்து இருந்தார். கமலின்,”விஸ்வரூபம் படப் பிரச்னையில், “நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என்பதை, வேறு சில நடிர்களும் இணை தளம் மூலம் கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் தெரிவித்த தகவல்கள் பத்திரிகைகளிலும் வெளியாகின.
இந்த சூழ்நிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில், நடிகர் விஷால் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமரிமுத்துவை நீக்கினால், அவருக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுத்தால், அவருக்கு ஆதரவாக இளம் நடிகர்கள், 15 பேர் வரை களமிறங்கலாம் என்ற தகவல் தெரிய வந்தால், விஷால் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மாதம், 30ம் தேதி, நடிகர் விஷால், நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று , நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது, சங்க நிர்வாகிகள், “உங்கள் மீது எந்த நடவடிக்கை இல்லை என, கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, ஓரவஞ்சகம் போல உள்ளது என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Average Rating