நிலக்கரி அறிக்கையை பிரதமர் அலுவலக அதிகாரி, சட்ட அமைச்சர், அட்டர்னி ஜெனரல் திருத்தம் செய்தனர்- சி.பி.ஐ.!!
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அறிக்கை, பிரதமர் அலுவலுலக அதிகாரி ,சட்ட அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றியமைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் விதிமுறை மீறப்பட்டு இருப்பதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.நிலக்கரி ஊழல் சுரங்க ஒதுக்கீடு நடந்த காலத்தில் நிலக்கரி அமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன்சிங் கூடுதலாக கவனித்து வந்தார். இதனால் இந்த ஊழலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த விசாரணை நிலை அறிக்கையை சி.பி.ஐ. தயாரித்தது. அப்படி தயாரித்த சி.பி.ஐ.யின் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும் முன்பாக மத்திய சட்ட மந்திரி அஸ்வினி குமார் திருத்தம் செய்தார் என்று புகார் எழுந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அஸ்வினி குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் அவர் ராஜினாமா செய்ய தேவையில்லை என்று காங்கிரஸ் உயர் மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. 9 பக்கம் கொண்ட அந்த பிரமாணப் பத்திரத்தை சி.பி.ஐ. இயக்குனர் தாக்கல் செய்தார்.அதில் பிரதமர் அலுவலகம், அட்டர்னி ஜெனரல், மத்திய சட்ட மந்திரி அஸ்வினி குமார், ஆகியோரின் அறிவுரையின் பேரில்தான் வரைவு அறிக்கை திருத்தம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அந்த புதிய பிரமாணப் பத்திரத்தில்,”மத்திய சட்ட மந்திரியுடனான கூட்டம் மார்ச் 6-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த இணை செயலாளர் சத்ருகன் சிங், நிலக்கரி அமைச்சக இணை செயலாளர் ஏ.கே. பாலியா, சி.பி.ஐ. இணை இயக்குனர் கல்கோத்ரா, முன்னாள் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சட்ட மந்திரி, பிரதமர் அலுவலக அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் வரைவு அறிக்கையை பார்த்ததோடு மட்டு மல்லாமல் அதில் திருத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தினார்கள். அதன்படி வரைவு அறிக்கை திருத்தம் செய்யப்பட்டது. விசாரணை நிலை அறிக்கை எதுவும் திருத்தப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு பெயரும் அறிக்கையில் இருந்து நீக்கப்படவில்லை. வரைவு அறிக்கையில் செய்யப்பட்ட நீக்கங்கள் மற்றும் திருத்தங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெறும் என்பதை உறுதியளிக்கின்றன.”என்று சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
இவ்வாறு பிரதமர் அலுவலகம், சட்ட மந்திரி அறிவுரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ தெரிவித்து இருப்பதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சட்டமந்திரி அஸ்வினிகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறும் போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்போம் என்றார்.
Average Rating