த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல -ஆனந்த சங்கரி

Read Time:7 Minute, 24 Second

tna.sam-sanதமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளா? என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என்றும் அக்கட்சிகள் கூட்டமைப்பில் அர்ப்பணிப்போடு செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். கூட்டமைப்பாக பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சிக்கு எண்ணமில்லை. அவர்கள் எம்மீது சவாரி செய்யவே பார்க்கின்றனர். கூட்டமைப்பு உடையாதிருப்பதற்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் என சம்பந்தர் கூறியிருந்த போதிலும், அவர் இரண்டு வருடங்களாக இதனையே தெரிவித்து வருகின்றார். ஆனால் நாம் சப்பரத்தில் வைத்து அவரை காவ வேண்டி உள்ளது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றன. முன்னர் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவர் வந்தாலும் நான் சந்திப்பது வழக்கம். ஆனால் தற்போது நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் என்னை அழைப்பதில்லை. அதனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த தூதுவரையோ இராஜதந்திரியையோ நான் சந்திக்கவில்லை. எனக்கு அரசியல் பேசத்தெரியாது என்கின்றனர் சிலர். ஆனால் பட்டினியில் மக்கள் இறந்தபோது நான் அதனை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அது மட்டுமல்ல. மக்களை காப்பாற்றுங்கள் என ஜனாதிபதிக்கும் பிரபாகரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அதனை கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான எம்மிடையே இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதே என மக்கள் கவலை வெளியிடுகின்றனர் எனக் கேட்டபோது அதற்கு பதிலளித்த சங்கரி, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் இவர்கள் ஏகபிரதிநிதிகளா ஆனால் சிலர் தேவையின் நிமித்தம் அந்த நிலைப்பாட்டை எடுத்தபோது நான் அதனை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும்போது அதனை சீர்குலைக்கக் கூடாது என்பதனால் நான் வாயை மூடிக்கொண்டுள்ளேன். எத்தனையோ அவமானங்களை தாங்கிக்கொண்டு இருப்பதற்கு காரணம் நல்லெண்ணமேயாகும். ஆனால் அந்த எண்ணத்துடன் தமிழரசுக் கட்சி செயற்படவில்லை. அவர்கள் அடுத்த வருட இருப்பை சீர்செய்வதற்கே செயற்படுகின்றனர். பொய்யிலேதான் இந்த கூட்டமைப்பு ஓடுகின்றது. உண்மையோ நேர்மையோ கிடையாது. எனவே இவர்களுடன் வேலை செய்வது கடினமானது. எனினும் நான் குழப்பமாட்டேன்’ என்று அவர் கூறினார்.

‘தமிழரசுக் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து பணம் சேர்த்தார்கள். ஆனால் அதில் என்ன செய்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் பணம் சேர்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்றே கூறப்படுகின்றது. ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சொல்லியிருந்தார் தான் மூன்று மாதம் வெளிநாட்டில் போய் வேலை செய்ததாக. தொடர்ந்து 3 கிழமைகள் நின்றதாக உறுதிப்படுத்தினால் அடிமைச் சுவடி எழுத்திக்கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எண்ணி மக்கள் ஏமாறுகின்றனர். அவர்களுடைய வாயில் இருந்து வருவதெல்லாம் 75 வீதம் பொய்யாகும். அதனை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். ஆனால் மக்களுடைய போராட்டத்தை பலவீனப்படுத்தக்கூடாது என்பதற்காக நாங்கள் சில விடயங்களை மறுக்காமல் மௌனம் சாதித்து வருகின்றோம்.

கிளிநொச்சிக்கு என்னுடன் வந்து பாருங்கள் எங்கு பசி இருக்கின்றது, எங்கு பட்டினி இருக்கின்றது என்பதை காட்டுகின்றேன். அத்துடன் எத்தனை பேர் கண், கால், கை இல்லாது என்னிடம் வந்து தமக்கு உதவி எதுவும் இல்லை பசிக்கின்றது என்று கூறுகின்றனர் என்பதை காண்பிக்கின்றேன். வருகின்ற 10 பேரில் 8 பேர் பொய் சொன்னாலும் கூட 2 பேர் அவ்வாறு உருவாகுவதற்கு காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தான். ஆனால் இவர்கள் எப்போதாவது மக்களுக்கு வீடில்லாததை பற்றியோ அல்லது அவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதைப்பற்றியோ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பெரிய பிரச்சினையை கிளப்பி இருக்கின்றனரா?’ எனவும் ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 26.03.2013
Next post சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதி தூக்கிட்டு தற்கொலை