கொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல்

Read Time:5 Minute, 52 Second

ind.kalaignar_cartoonஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆணவப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் ஜனாதிபதியாக உள்ள ராஜபக்ஷ அமைச்சரவையில், தற்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு முனைகளில் இயற்கையாகவே பீறிட்டுக் கிளம்பிய எதிர்ப்புக்கிடையே, சில நாட்களுக்கு முன் சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷ அழையா விருந்தாளியாக இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையிலே உள்ள; கொலைக் குற்ற வழக்குப் பின்னணியைக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் கச்சத் தீவில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய பேச்சு ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

அவர், “இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து, தடை செய்யப்பட்ட “ரோலர் மடி வலை”களை வைத்து மீன் பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் இலங்கை கடற்பகுதியிலே உள்ள மீன்வளம் முற்றிலுமாக அழிந்து விடும். தமிழக மீனவர்கள் “ரோலர் மடி வலை”களை வைத்து, இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதைக் கண்டித்து, இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று ஆத்திரத்தோடும், ஆணவத்தோடும் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

உலகின் எந்த நாடுகளிலும் கடல்களின் நடுவே நடைபெறாத அளவிற்கு இலங்கைக் கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகத் தாக்கப்பட்டு வருவதும், தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும், இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும்.

இந்தச் செய்தி உலக நாடுகளுக்கும், உலக அமைப்புகள் பலவற்றுக்கும் தெரிந்த ஒன்றேயாகும். இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கே வருகை தந்து இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் ராஜபட்ச அரசின் இனவெறிக் கொடுங்கோன்மைச் செயல்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியாகத் தெரிகிறது.

மேலும் டக்ளஸ் தேவானந்தாவின் பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருப்பதை இந்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

கொலைக் குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் ஒருவர், மீனவர்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்டனத்திற்கு உரியதும் ஆகும். இலங்கை அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சைக் கருத்திலே கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.பி.க்கள் குழு பிரித்தானியாவிற்கு விஜயம்
Next post இன்றைய ராசிபலன்கள்: 25.02.2013