நேபாள மன்னரின் அதிகாரங்கள் பறிப்பு பொம்மையாக்கப்பட்டார் ஞானேந்திரா
நேபாள மன்னரின் அதிகாரங்களை மொத்தமாக பறித்துவிட்டது நாடாளுமன்றம். மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளர். நேபாளத்தில் எல்லாம் நானே, என்னை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்று அதிகார மமதையில் திரிந்த மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளார். அவரது அதிகாரங்களை மொத்தமாக பறித்துவிட்டது அந்நாட்டு பாராளுமன்றம்.
நேபாளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் மன்னர் பீரேந்திரா இருந்ததுவரை எந்தப்பிரச்சனையும் இல்லை. அரசாங்கம் சுமூகமாக சென்றது. வானளாவிய அதிகாரங்கள் இருந்தாலும், அனைத்து தரப்பினரையும் அரவணைத்து சென்றார். அவர் ஆட்சியின் போது தீவிரவாதம் பரவினாலும் அது பெரிதாக தெரியவில்லை. இந்த நிலையில் துரதிருஷ்டவசமாக மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர் மன்னர் குடும்பத்தையே சுட்டுக்கொல்ல, நேபாளத்தின் நிலைமை மாறியது. பெண் விஷயத்தில் இளவரசர் துப்பாக்கியை எடுக்க ஒரே நிமிடத்தில் அத்தனையும் முடிந்துவிட்டது.
புதிதாக கிரீடம் சுட்டிக்கொண்ட தம்பி ஞானேந்திரா அண்ணன் காட்டிய வழியில் சென்றிருந்தால் மரியாதை,கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும். அவரோ, என்வழி, தனிவழி என்று கிளம்ப அத்தனை அதிகாரங்களும் பறி கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அதிகாரம் இருக்கிறதே என்று ஆடாத ஆட்டம் போட்டார் ஞானேந்திரா. மக்களாட்சியை டிஸ்மிஸ் செய்தவர், ஆட்சி பொறுப்பையும் கையெலடுத்துக்கொண்டார். பிப்ரவரி 2005_ல் அப்போதைய பிரமராக இருந்த ஷேர்பகதூர் தியூபாவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்த ஞானேந்திரா 14 மாதங்கள் அடக்குமுறையை கையாண்டார். ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்துவிட்டனர் நேபாள மக்கள். குட்டக்குட்ட குனிந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அல்ல என்பதை நிரூபித்தனர். ஏப்ரல் மாதம் தெருவுக்கு வந்து 14 நாட்கள் போராட்டம் நடத்தினர். ராணுவத்தை வைத்து அவர்களை மிரட்டிப்பார்த்தார். ஆனால் உயிரே போனாலும் போகட்டும் என்று மக்கள் தீவிரம் காட்ட எதிர்ப்பிற்கு பணிந்தார் ஞானேந்திரா.7 கட்சி கூட்டணியிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார். இந்தியாவும் மன்னருக்கு நெருக்கடி கொடுத்தது.
தொடர்ந்து ஜி.பி. கொய்ராலா தலைமையில் மக்களாட்சி மலர்ந்தது. புதிய அமைச்சரவை மன்னரின் அதிகாரங்களை பறிக்க முடிவெடுத்தது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மன்னருக்கு இருந்தது. அதற்கு முதலில் ஆப்பு வைக்கப்பட்டது. முப்படைகளின் தளபதி பதவியும் பறிக்கப்பட்டது. மன்னர் இஷ்டத்திற்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது என கட்டுப்பாடு போடப்பட்டது. தனது செலவு கணக்குகளையும் மன்னர் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த பின்னணியில் மன்னருக்கென்று இருந்த சில தனிப்பட்ட அதிகாரங்களையும் பாராளுமன்றம் நேற்று முன்தினம் பறித்தது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி இனி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்தால் போதும் சட்டங்களையோ, நிதி ஒப்புதலையோ பெறுவதற்கு மன்னரின் கையெழுத்து தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னருக்கிருக்கிற அத்தனை அதிகாரங்களையும் பறித்துவிட்டது நேபாள பாராளுமன்றம். ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுவிட்டார்.
மன்னரால் பதவிபிரமாணம் செய்து வைக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் ,அதிகாரிகள் ஆகியோர் மீண்டும ஒரு முறை சபாநாயகர் தலைமையிலான சிறப்பு கமிட்டி முன்பு பதவிபிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல பாராளுமன்றத்தில் நுழையவும் மன்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரண்மனையோடு மன்னர் இருந்தால் போதும். அனாவசியமாக எங்கும் வரகூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி அரசு நிர்வாகம், அமைச்சர்கள், மற்றும் எம்.பி.க்களிடம் தாந் இருக்கும். நாடாளுமன்றத்தின் இந்த புதிய முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.