யாழ். மண்கும்பானில் கொள்ளை – ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பு??!!
யாழ்.மண்கும்பான் பகுதியில் ஆயுதமுனையில் 20 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன், ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கின்றனர்.
கடந்த 14ம் திகதி மண்கும்பான் 5ம் வட்டாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு வாள், பொல்லுகளுடன் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தனித்திருந்த குமாரசூரியர் ஜெயலக்சுமி (வயது64), செல்லத்தம்பி தர்மலிங்கம் (வயது85) ஆகியோரை ஆயுத முனையில் அச்சுறுத்தி மேற்படி நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் வீட்டிற்கு அருகிலிருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வாள், பொல்லு, ரீசேட் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் வீட்டின் உரிமையாளர்கள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமக்கு ஒருவரில் சந்தேகம் இருப்பதாக ஒருவரை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
இதற்குள் கொள்ளை இடம்பெற்ற வீட்டிற்கருகில் மீட்கப்பட்ட வாள், பொல்லுகள், ரீசேட் ஆகியவற்றைக் கொண்டு மோப்ப நாய் மூலம் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது வீட்டின் உரிமையாளர்கள் சந்தேகம் தெரிவித்த நபரின் வீட்டிற்குச் சென்ற மோப்ப நாய் அந்த நபரின் காலைப் பிடித்து இழுத்துள்ளது.
எனினும் குறித்த நபர் ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினரும், பனை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான பசுபதி சீவரட்ணம் என்பவரின் மருமகன் சீ.டிலக்சன் (வயது23) என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இந்த விடயம் பின்னர் சீவரட்ணத்திற்கும் பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு சென்ற சீவரட்ணம் கொள்ளை நடந்த வீட்டிற்கும் சென்று பேசியுள்ளதுடன், பொலிஸாருடனும் பேரம் பேசியிருக்கின்றார். இந்நிலையில் கொள்ளை நடந்து 3 நாட்களாகின்றபோதும், கொள்ளையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவோ, கொள்ளையுடன் தொடர்புடைய ஏனையவர்கள் தேடப்படவோ இல்லை.
அதுமட்டுமின்றி, கொள்ளையிடப்பட்ட நகைகள் பொருட்கள் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் கொள்ளை உட்பட பல குற்றச் செயல்களுடன் தீவுப் பகுதியில் ஈ.பி.டி.பி தொடர்புபடும் விடயம் மீளவும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
Average Rating