நான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றேன் விடுதலையின் பின்:- தர்ஷானந்த்
‘அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு’ இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார். யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியினர் எம்மிடம் விசாரணைகள் நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் (13.02.13) விடுதலை செய்யப்பட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் (கலைப்பீடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் ஆவர்
இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு தொடர்பிலும், தாம் தடுத்துவைக்கப்பட்ட இரண்டு மாத காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கடந்த டிசம்பர் முதலாம் திகதி அதிகாலைவேளை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாம், வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டோம். அங்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் அலுவலகத்தில் 10 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோம்.
எம்மிடம் சி.ஐ.டியினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். ஆனால், நாம் அச்சமடையாமல் அவர்களிடம் தெளிவாகக் கூறியது என்னவெனில், ‘யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த எமது உறவுகளை மட்டும் நாம் நினைவுகூர்ந்து மாவீரர் நாளன்று விளக்கேற்றினோம்’ என்று தெரிவித்தோம்.
அத்துடன், மாணவர்கள் மீதான படையினரின் தாக்குதல்களைக் கண்டித்தே நாம் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் எனவும், வன்முறைகளைத் தூண்டிவிடும் விதத்தில் மாணவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை எனவும் கூறினோம்.
இதேவேளை, வெளிநாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கின்றதா எனவும், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி எடுத்தீர்களா எனவும் சி.ஐ.டியினர் எம்மிடம் விசாரித்தனர். அந்தக் கேள்விகளுக்கு ‘இல்லை’ என்றே பதிலளித்தோம்.
ஆனால், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான கருத்துகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது என்றோ அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்றோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இவ்வாறு நாம் கூறியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறான கேள்விகளை சி.ஐ.டியினர் எம்மிடம் கேட்கவே இல்லை.
இதேவேளை, சி.ஐ.டியினரின் விசாரணையின்போது நாம் எவ்வித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம். எம்மை பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியிலேயே அவர்கள் அணுகினார்கள். எமக்கு அவர்கள் அடிக்கவில்லை. உதைக்கவில்லை. சித்திரவதைப்படுத்தாமல் எம்மை விசாரித்தார்கள் என்பதுதான் உண்மை.
வவுனியாவில் 10 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த நாம் பின்னர் வெலிக்கந்தை முகாமுக்கு மாற்றப்பட்டோம். அங்கு எமக்கு புனர்வாழ்வு என்று கூறினார்கள்.
அங்கு இரண்டு மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த எமக்கு புனர்வாழ்வு என்று அரசு எதனைத் தந்தது என்று தெரியாது. அங்கிருந்த நாட்களில் சிங்களமொழியையே பெரும்பாலான நாட்களில் எமக்குக் கற்பித்தார்கள்.
அத்துடன், இடையிடையே வெலிக்கந்தையில் இருந்த முன்னாள் போராளிகளுக்கு அரசு வழங்கிய ‘கவுன்ஸிலிங்’கில் (உளநலப் போதனை) எம்மைக் கலந்துகொள்ளச் செய்தார்கள். இதைவிடுத்து பெரிதாக அவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்கவில்லை. அங்கிருந்த முன்னாள் போராளிகளுக்கு மட்டும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்றபடியால் படிப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்தார்கள். மேசைகள், கதிரைகள் தந்தார்கள். பெற்றோர் கொண்டுவந்து தந்த எமது பாடக் குறிப்புகளைக் கற்றோம்.
வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலும் நாம் எவ்வித சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம்.
நாம் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் பெற்றோரும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் வந்து எம்மைச் சந்தித்து சுகம் விசாரித்தார்கள். அப்போது எவ்வித இடையூறுமின்றி நாம் அவர்களுடன் கலந்துரையாடினோம்.
எமது விடுதலைக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அயராது குரல் கொடுத்து, கண்டனங்கள் வெளியிட்டு, போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார் தர்ஷானந்த்.
‘நான் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதால் அச்சமடையவில்லை. கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றேன். நான் இப்போது யாழ். பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன். எனது பல்கலைக்கழக கற்கைநெறி முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தக் காலப்பகுதிகளில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்வதில் நான் குறியாக இருக்கின்றேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Average Rating