தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றத்தை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து முடிவு வழங்கியிருப்பதை எதிர்த்து அங்குள்ள பெண்ணுரிமைக் குழுக்கள் குரல்கொடுத்துள்ளன. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மாகாணச் சட்டத்தின் கீழ் இந்த முடிவு வழங்கப்பட்டுள்ளது.
தான் வேறொருவர் என்று ஏமாற்றி ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார் என்றால், அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்திருக்க வேண்டும், தவிர அந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவனாக என்று நடித்து உடலுறவு வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் மட்டுமே அந்த ஆண் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக அர்த்தம் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
நடந்தது என்ன?
நான்கு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பதினெட்டு வயது இளம்பெண் தனது காதலனுடன் படுக்கையில் இருந்த நேரத்தில் உறங்கிப்போனார்.
காதலன் அறைக்கு வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து வேறொரு ஆடவர் அறைக்குள் நுழைந்திருக்கிறார். தூங்கிப்போன பெண், உடலுறவு வைத்துக் கொள்கிற என்ற உணர்வு எழுந்து கண் விழித்தபோது ஒரே இருட்டாக இருந்திருக்கிறது.
சரி தனது காதலன்தான் உடலுறவில் ஈடுபடுகிறார் என நினைத்து அந்தப் பெண்ணும் தொடர்ந்து ஈடுபட்டிருந்துள்ளார். ஆனால் வீதியில் சென்ற ஒரு வாகனத்தின் வெளிச்சம் அறைக்குள் பாய்ந்த கன நேரத்தில்தான், தன்னுடன் உறவு வைத்துக்கொண்டிருப்பவர் காதலன் அல்ல, தனது சகோதரனின் நண்பர் ஜூலியோ மொராலெஸ் என்று தெரிந்து அந்தப் பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.
மொராலெஸ் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இந்தப் பெண் குற்றம்சாட்டினார்.
ஆனால் “மொராலெஸ்ஸின் தீண்டல்களுக்கும் முத்தங்களுக்கும் சாதகமாகச் சிணுங்கினார், அதனால் இந்தப் பெண் விரும்பிதான் தனது கட்சிக்காரருடன் உடலுறவு வைத்துக்கொண்டார்” என்பதாக மொராலெஸ்ஸின் சட்டத்தரணி வாதாடியிருந்தார்.
இருந்தாலும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் மொராலெஸ்ஸுக்கு குற்றத்தை உறுதிசெய்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றமோ “மொராலெஸ் அந்தப் பெண்ணின் கணவராக நடிக்கவில்லை, காதலனாக நடித்துதான் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார். ஆகவே நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் அவர் குற்றவாளி ஆகமாட்டார்” என்று தயக்கத்துடன் முடிவு தெரிவித்துள்ளது.
பழைய சட்டம்
ஒரு பெண்ணிடம் அவரது கணவராக நடித்து உடலுறவு கொண்டால்தான் அது குற்றம், காதலனாக நடித்து உடலுறவு கொண்டால் அது குற்றமல்ல என்று 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குறிப்பிட்ட சட்டம் கூறுகிறது.
இந்த தீர்ப்புக்கு பெண்ணுரிமைக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சட்டத்திலுள்ள ஓட்டையாகத் தெரியும் இந்த விஷயத்தை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மாகாண சட்ட மா அதிபர், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் வாக்குறுதி அளித்துள்ளனர்.
“நவீன யுகத்தில் வாகனங்கள் சீறிப் பாயும் அதிவேக நெடுஞ்சாலையை குதிரை வண்டிக்கான விதிகளை வைத்துக்கொண்டு நிர்வகிப்பதைப் போல இந்த விஷயம் இருக்கிறது. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும்” என மாகாண சட்டமன்ற பெண் உறுப்பினர் போனி லொவெண்தால் கூறியுள்ளார்.
Average Rating