மழை வெள்ளத்தால் இலங்கையில் 13 பேர் பலி..
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள். பல மாவாட்டங்களில் பெரும் பாதிப்புகள்… பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மாத்தளைப் பகுதியிலேயே அதிகமான அளவுக்கு மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் குருநாகல. ஆனால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மாத்தளை மாவட்டத்தில்தான். எனினும் மக்கட் தொகை அடிப்படையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது மட்டக்களப்பு மாவட்டமே என்றும் அரச அதிகாரி பிரதீப் கொடிப்பிலி கூறுகிறார்.
ஆட்கள் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சம்பவங்களைப் பொறுத்தவரை அநேகமானவை மண் சரிவினாலேயே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழிவதால் குளங்களின் வான் கதவுகளும் (மதகுகளும்) திறந்து விடப்பட்டதன் காரணமாகவே வீதிகளில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.
வீதிகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் வட கிழக்குப் பகுதிகளுக்கான ரயில் மற்றும் தரை வழிப் போக்குவரத்துச் சேவைகளும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. இம்மாவட்டத்தில் வாவியில் மீன் பிடித்துக் கொணடிருந்த இரண்டு மீனவர்கள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அடுத்து காணாமல் போயுள்ளனர்.
வீதிகளில் வெள்ள நிலைமை காரணமாக உள்ளுர் மற்றும் வெளியூர் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதால், நிவாரணப் பணியாளர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிவாரண நடவடிக்கைகள்
மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் சூழப்பட்ட வேற்றுச்சேனை மற்றும் மயிலவெட்டுவான் உட்பட சில கிராம மக்கள் படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9000 பேர் அரச முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி கூறுகிறார்.
அவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் ஊட்டச் சத்துள்ள பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பகுதியில் இராணுவத்தினரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating