சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள்
சென்னையை சேர்ந்த கம்ப்ïட்டர் என்ஜினீயர் தம்பதிகளுக்கு கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. சோதனைக்குழாய் முறையில் கருத்தரித்து 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதுண்டு.ஆனால் இயற்கை முறையில் கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது அரிது. அதுமட்டுமல்லாமல் இயற்கையில் கரு உருவாகி ஒரே நஞ்சுக்கொடியில் 4 குழந்தைகள் பிறப்பது 7 லட்சத்தில் ஒன்றாகும்.
அதிலும் இயற்கையில் கருத்தரித்து ஒரே நஞ்சுக்கொடியில் 4 குழந்தைகள் உருவாகி அவை அனைத்தும் பெண்குழந்தைகளாக பிறப்பது 40 லட்சத்தில் ஒன்றாகும். இது மிக மிக அரிதாகும். இப்படி அரிதான பிரசவம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் விவேகானந்த். வயது 26. இவருடைய மனைவி ஸ்ருதி.(வயது 25). இவர்கள் 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் .இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்கள் ஆகின்றன. இயற்கை முறையில் ஸ்ருதி கருத்தரித்தார் .
அவருடைய கருப்பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது 4 குழந்தைகள் உருவாகி இருந்தன. அதுவும் ஒரே நஞ்சுக்கொடியில் 4 குழந்தைகள் உருவானதை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் 4 குழந்தைகள் பிறந்தால் குறைந்த எடையில் பிறக்கும். அவ்வாறு பிறந்தால் உயிர் பிழைக்க வைப்பது மிக சிரமம்.
ஆனால் மனம் தளர்ச்சி அடையாமல் விவேகானந்த்- ஸ்ருதி தம்பதியினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியை நாடினார்கள். அங்கு அவரை அப்பல்லோஆஸ்பத்திரியின் மகப்பேறு நிபுணர் டாக்டர் சாருமதி பரிசோதித்தார். அவரும் அவருடன் பணிபுரியும் டாக்டர்கள் மீனா தியாகராஜன், ஷியாமளா மற்றும் மருத்துவக்குழுவினர் எப்படியும் தாயையும் 4 குழந்தைகளையும் பிழைக்க வைக்க முடிவு செய்தனர்.
வழக்கமாக இப்படி அரிதான பிரசவத்தில் தாய்க்கு ரத்தசோகை, மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை வருவது சகஜம். குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, தொற்று நோய், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம் .எனவே தாய்க்கும் குழந்தைகளுக்கும் எந்தநோயும் வராமல் இருக்க தீவிரமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
நல்ல கவனமான சிகிச்சைக்குபிறகு ஸ்ருதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25 -ந் தேதி காலை 10-55 மணி, 10-55 மணி 30 வினாடி , 10-56 மணி, 10-56மணி 30 வினாடி ஆகிய நேரங்களில் 4 குழந்தைகள் பிறந்தன. அவை தலா 900 கிராம், 904 கிராம், 825 கிராம், 980 கிராம் ஆகிய எடைகள் இருந்தன.
ஒரே நஞ்சுகொடியில் பிறந்ததால் 4 குழந்தைகளும் ஒரே முக சாயலில் உள்ளன அடையாளம் தெரியாத அளவுக்கு ஒரே அச்சில் வார்த்தது போல இருக்கின்றன. குழந்தைகள் பிறந்ததும் தாயும் தந்தையும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளை மாறிமாறி தொட்டு முத்தமிட்டனர். குழந்தைகளுக்கு அதிதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது குழந்தைகள் பிறந்து 6 வாரங்கள் முடிந்து விட்டன. அவை வளர்ச்சி அடைந்து ஒருகிலோ 34 கிராம், ஒரு கிலோ 29 கிராம், ஒரு கிலோ 22 கிராம், ஒரு கிலோ 35 கிராம் ஆகிய எடைகள் கொண்டுள்ளன. 4 குழந்தைகளுடன் தாய் ஸ்ருதி நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.