தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி: 4-2 கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 32 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதுவரை உலக கோப்பையை கைப்பற்றிய அணிகளில் இடம் பெற்று இருந்த வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் 140 முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.
பிரேசில் கால்பந்து அணியின் பிதாமகனாக கருதப்படும் பீலேவும், ஜெர்மனியின் முன்னணி மாடல் அழகியுமான கிளாடியா ஷிபரும் சேர்ந்து உலக கோப்பையை முனிச் மைதானத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டு அதிபர் ஹோர்ஸ்ட் ஹோக்லர் போட்டியை தொடங்கி வைத்தார். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் பாட்டர் அப்போது உடன் இருந்தார். தொடக்க விழாவையொட்டி மெய்மறக்கச் செய்யும் விதத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 9.30 மணிக்கு இந்த உலக கோப்பையின் முதல் ஆட்டம் நடந்தது. இதில் போட்டியை நடத்தும் ஜெர்மனியும், கோஸ்டாரிகாவும் மோதின. சொந்த மண்ணில் ஆடியதால் ஜெர்மனி அணியினர் அதிக உற்சாகத்துடன் களம் புகுந்தனர். அதே நேரத்தில் கோஸ்டாரிகா அணியினரும் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைப்போல் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தின் தொடக்கமே விறுவிறுப்புடன் காணப்பட்டது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் முதல் கோலை ஜெர்மனி அணியினர் அடித்தனர். அந்த அணி வீரர் பிலிப் லாம் இந்த கோலை அபாரமாக அடித்து ஜெர்மனியை முன்னிலை பெறச் செய்தார்.
ஜெர்மனி முன்னிலை பெற்றதை தொடர்ந்து கோஸ்டாரிகா அணியினர் ஆட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரித்தனர். இதன் பயனாக 12-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா பதில் கோலை திருப்பியது. அந்த அணி வீரர் வான்சோப்பே இந்த கோலை அடித்து 1-1 என்று ஆட்டத்தை சமன்நிலை அடையச் செய்தார். ஆட்டம் சமன்நிலையை எட்டியதை தொடர்ந்து ஜெர்மனி அணியினர் சுதாரித்துக் கொண்டு ஆடினர். இதனால் 17-வது நிமிடத்தில் ஜெர்மனி 2-வது கோலை அடித்தது. தலையால் கோல் அடிப்பதில் கில்லாடியான மிரோஸ்லாவ் குளோஸ் இந்த கோலை அடித்தார். இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனியின் கையே ஓங்கி இருந்தது. பெரும்பாலும் அந்த அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. ஜெர்மனியின் நிலை இப்படி இருக்க மறுமுனையில் கோஸ்டாரிகா அணியினர் சோர்வுடன் காணப்பட்டனர். 61-வது நிமிடத்தில் ஜெர்மனி 3-வது கோலை அடித்தது. 2-வது கோலை அடித்த மிரோஸ்லாவ் குளேசே இந்த கோலையும் அடித்தார். இந்த கோலை அவர் தலையால் அடிக்க முயற்சிக்க கோஸ்டாரிகா கோல் கீப்பர் தடுத்தார். கீப்பரின் கை பட்டு கோல் கம்பத்தை விட்டு வெளியே வந்த பந்தை குளோஸ் மீண்டும் காலால் அடித்து கோலாக மாற்றினார்.
பின்னர் 73-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா 2-வது கோலை அடித்தது. முதல் கோலை அடித்த வான்சோப்பேதான் இந்த முறையும் கோல் அடித்தார். 2-வது கோலை அடித்த பின்னர் கோஸ்டாரிகா அணியினர் புத்துணர்ச்சியுடன் ஆடினர். ஆனால் ஜெர்மனி அணியினரின் அற்புதமான ஆட்டத்துக்கு முன்னால் கோஸ்டாரிகா அணியினரால் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஜெர்மனி அணி 87-வது நிமிடத்தில் 4-வது கோலை (அடித்தவர் பிரிங்க்ஸ்) அடித்து மேலும் வலுவான நிலையை எட்டியது. அதன்பின்னர் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காததால் இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.