இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்விபை வழங்குவதற்கு இதுவே சரியான தருணம்-இந்தியப் பிரதமர்..!
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும். இதற்கான நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். முகாம்களில் தொடர்ந்தும் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி அதனை முன்னெடுப்பது தொடர்பிலும் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புதுடில்லியிலுள்ள இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையேயும் இணக்கம் காணப்பட்ட விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நிர்மாணித்து முடித்துவிடலாம் என்று இத்திட்டத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் இப்பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர் களிடமும் தெரிவித்துள்ளனர். இதன்போது இத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் தமது கவனத்தை செலுத்தினர். இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் பாராட்டியுள்ளார். இதேவேளை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ளமையினால் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க இதுவே சரியான தருணமாகும். யுதத்தத்தினால் இடம்பெயர்ந்து இன்னமும் அகதிமுகாம்களில் வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மன்மோகன்சிங் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார். இச்சந்திப்பையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் விசேட பகலுணவு விருந்துபசாரமும் வழங்கியுள்ளார். இந்தச் சந்திப்பில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், ராஜ்ய எதிர்க்கட்சித் தலைவர் அரோஜ் ஜெட்லி ஆகியோர் இந்தியத் தரப்பிலும் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் வெளிநாட்டு விடயங்களுக்கான இணைப்புச்செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன எம்.பி., ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க ஆகியோர் இலங்கைத் தரப்பிலும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணாவுடன் பீரிஸ் சந்திப்பு
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு குறித்தும் அரசியல் திர்வு ஒன்றின் அவசியம் தொடர்பில் இந்திய வெளி விவகார அமைச்சர் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளார்.
Average Rating