கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்..!
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனேடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் தீவிரவாதிகளல்லர்
“நாங்கள் தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறுகிறோம். மேலும் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகின்றோம்.” இரண்டாவதாக ‘சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்’ எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். “குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் வந்துள்ள நாம், முழுமையான அர்ப்பணிப்புடன் கனேடிய சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்.”
இவையே மே மாதம் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப்பட்டு கனடாவின் மேற்குக் கடற்கரையில் கடந்தவாரம் வந்திறங்கிய 492 அகதிகளின் முதலாவது வாக்குமூலங்களாக வெளிவந்துள்ளன. இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று நம்பப்படுகின்றது. மாநில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களைச் சந்தித்தவர்களின் தகவலின்படி, இவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் கர்ப்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 70 வயதைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்களும் உள்ளனர்.
இடையில் ஒருவர் மரணம்
37 வயதான ஆண் ஒருவர் சுகவீனமுற்று இடைவழியில் இறந்துள்ளார். அவர்களின் 59 மீட்டர் நீளமான சரக்குக் கப்பலின் தளத்தின் மேல் கொட்டகையிட்டு அதற்குக் கீழ் படுத்திருந்ததாகவும் ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தியதாகவும் தங்களுக்குள் லட்டு செய்து பரிமாறியதாகவும் மழைத்தண்ணீரில் தேநீர் செய்து அருந்தியதகாவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் குறிப்பிட்டனர். “என்னுடைய கணவரையும் மகனையும் விட்டுவிட்டு இந்த வேதனையை அனுபவித்துப் பயணம் செய்து, இலங்கையில் உள்ள நரக வாழ்வில் இருந்து தப்பி வந்தேன்” என அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் குறிப்பிட்டார். கனேடிய எல்லைச் சேவைகள் முகவம், வந்திறங்கியவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு அவர்களில் முன்னாள் தமிழ்ப் புலிப் போராளிகள் உள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்த முயல்கிறது. பொதுநல பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ், கப்பலில் முன்னாள் போராளிகள் வந்திருக்கின்றனர் என நம்பப்படலாம் என குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்பின் நிதி சேகரிப்பு நடவடிக்கையாகவே இந்த கப்பல் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாக நெஷனல் போஸ்ட் கடந்த கிழமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கப்பலில் வந்திறங்கியவர்களின் கடிதங்களின்படி இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு துன்பகரமான நிலையே நீடிக்கின்றது. அரச படைகளுக்கு தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் நடந்த மிக நீண்ட போரில் இருந்து இலங்கை தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.
“இலங்கை அரசு, நாட்டில் இனப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை” என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,
“தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப்படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகின்றன” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating