போர்குற்றம் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்க எம்.பி வலியுறுத்தல்..!
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் ஓராண்டுப் பூர்த்தியை இலங்கை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க எம்.பி. ஒருவர் நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் முடிவடைந்து ஓராண்டுப் பூர்த்தியை மே19 நினைவு கூருகின்றது. அத்துடன், இலங்கை யுத்தத்தின்போது இழக்கப்பட்ட பல உயிர்கள் தொடர்பாகவும் நினைவு கூரப்படுகிறது. போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு நான் அழைப்பு விடுக்கிறேன் என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் டான்னி கே டேவிஸ் தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவானது இந்த விசாரணைகள் தொடர்பாக தனியாக மட்டும் அழைப்பு விடுத்திருக்கவில்லை. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே சுயாதீன விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளன என்று டான்னி கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஏனைய அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பாகவும் அவை அழைப்பு விடுத்திருக்கின்றன என்று அமெரிக்க பாராளுமன்றத்தின் ஜனப்பிரதிநிதிகள் சபையில் டான்னி கூறியுள்ளார். தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் நீதி விசாரணைக்குப் புறம்பான துஷ்பிரயோகம், முன்னாள் போராளிகள் மற்றும் ஆயுதம் தரிக்காத பொதுமக்களைத் தடுத்து வைத்திருத்தல், சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துதல், பொதுமக்களுக்கு இம்சை செய்தல், சிறைப் பிடித்தவர்களை அல்லது சரணடைய வந்த போராளிகளைக் கொல்லுதல், தனிப்பட்டவர்கள் காணாமல்போதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமை என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் டான்னி கூறியுள்ளார். மனித உரிமைகளை மீறிய சகல தரப்பினரும் பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பது அவசியமென்றும் தெரிவித்திருக்கும் அவர் இதன்மூலம் மட்டுமே இலங்கை மக்கள் சமாதானத்தை வென்றெடுக்கும் முயற்சியில் முன்னோக்கி நகர முடியுமெனத் தெரிவித்திருக்கிறார். அங்கு உரையாற்றிய நோர்த் கரோலினாவைச் சேர்ந்த எம்.பி.யான பிராட் மில்லர்வ் இலங்கையிலுள்ள தமிழ்ச் சமூகத்தின் நிலைமை குறித்து கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கையில் பாரம்பரிய தமிழ்ப் பிராந்தியமானது அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்தே தமிழ்மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கைத் தீவில் தமிழ்மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் பகுதியானது அவர்களில்லாமல் கிட்டத்தட்ட வெற்றிடமாகக் காணப்படுகிறது என்றும் டான்னி கூறியுள்ளார்.
Average Rating