9 ஆண்டாக வளர்த்த நாய் குட்டி மாயம் : போஸ்டர் அடித்து தேடிய வக்கீல் :சேலத்தில் நெகிழ வைத்த சம்பவம்
சேலம் மாநகரில் காணாமல் போன தன் நாய் குட்டியை தேடி, வக்கீல் ஒருவர் மாநகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி தேடியுள்ளார். நான்கு நாட்களுக்கு பிறகு அந்த நாய் குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான மன நிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. நாய்க்குட்டிக்கும், மனிதனுக்கும் ஆதி காலத்தில் இருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. நாயை செல்லப்பிராணியாக மட்டும் அல்லாமல் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே வளர்த்து வருகின்றனர்.
மனிதர்களால் மனித இழப்பை மட்டும் அல்லாமல் தங்களது செல்லப்பிராணிகளின் இழப்பையும் தாங்கி கொள்ள முடிவதில்லை. பல ஆண்டாக தங்களது அன்பின் பிடியில் வசிக்கும் உயிரினங்களுக்கு தீங்கு நிகழும் போது, அதை வளர்ப்பவரின் நெஞ்சம் பதறிவிடுகிறது. கால இடைவெளிக்கு பிறகு அந்த உயிரினம் சிக்கல் எதுவும் இல்லாமல் மீட்கப்படும் போது எல்லையில்லாத மகிழ்ச்சி கிடைக்கிறது.சேலம் மாநகரில் அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் கீர்த்தி கணேசன்(34); வக்கீல். அவரது மனைவி தங்கம், மகன் சுசிந்தானு(2). ஒன்பது ஆண்டுக்கு முன் நண்பர் ஒருவர், திருநெல்வேலியில் இருந்து பொமரேனியன் ரக நாய் குட்டி ஒன்றை கீர்த்தி கணேசனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.கீர்த்தி கணேசன் அந்த நாய்குட்டிக்கு, ‘ஸ்னோயி’ என்று பெயர் சூட்டினார். நாய் குட்டியை அவரது குடும்பத்தார் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். கீர்த்தி கணேசன் திருமணத்துக்கு பிறகும் ஸ்னோயியை அன்போடு கவனித்துள்ளார்.கடந்த மே 9ம் தேதி கீர்த்தி கணேசன், ஸ்னோயி நாய் குட்டியுடன் சத்திரம் லாரி மார்க்கெட்டில் உள்ள அவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸுக்கு சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்னோயி காம்ப்ளக்ஸ் அருகில் விளையாடி கொண்டிருந்தது. அப்பகுதியில் ஒரு சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.பயந்து போன ஸ்னோயி காம்பளக்ஸ் இருந்த இடத்தில் இருந்து வழிதவறி வேறு பகுதிக்கு சென்றுவிட்டது. அப்போது கீர்த்தி கணேசன் அவரச வேலையாக சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், ஸ்னோயியை காணவில்லை.அருகில் எங்காவது இருக்கும் என்று நினைத்த கீர்த்தி, காம்பளக்ஸ் காவலாளியிடம் ‘ஸ்னோயியை வீட்டில் விட்டு விடுமாறு’ கூறி விட்டு சென்னை புறப்பட்டு சென்றார். காம்ப்ளக்ஸுக்கு அருகில் காவலாளி, ஸ்நோயியை தேடியுள்ளார். ஸ்நோயி கிடைக்கவில்லை. உடனே காவலாளி இந்த தகவலை கீர்த்தி கணேசனுக்கு தெரிவித்துள்ளார்.
ஒன்பது ஆண்டாக வளர்த்து வந்த நாய் குட்டியை காணவில்லை என்ற தகவலை கேள்விப்பட்டதும் கீர்த்தி கணேசன் அதிர்ச்சியடைந்தார். மறுநாளே சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு வந்தார். சேலம் மாநகரின் பல இடங்களில் ஸ்நோயியை தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை.பிறகு, ஸ்நோயி புகைப்படத்துடன், ‘ஸ்நோயி என்ற நாயை காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்ற வாசகத்துடன் போஸ்டவர் அச்சடித்து, சேலம் மாநகரத்தின் பல இடங்களில் ஒட்டினார். நோட்டீஸில் கீர்த்தியின் மொபைல் ஃபோன் எண் அச்சடிக்கப்பட்டிருந்தது.நான்கு நாட்களாக ஸ்நோயி பற்றி எந்த தகவலும் இல்லை. மே 13ம் தேதி அரிசிப்பாளையம் பகுதியில் இருந்து தொலைபேசி மூலம் ஒருவர் கீர்த்தியை தொடர்பு கொண்டுள்ளார். ‘உங்கள் நாய் குட்டியை போன்று தோற்றமுடைய நாய் குட்டி இந்த பகுதியில் உள்ளது’ என்று தெரிவித்தார்.
கீர்த்தி குடும்பத்துடன் நாய் குட்டியை பார்க்க அரிசிப்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஈஸ்வரன் என்பவரது வீட்டில் மூன்று நாட்களாக சாப்பிடாமல் ஸ்நோயி மயக்கத்தில் இருந்துள்ளது. கீர்த்தி கணேசனின் குரலை கேட்டதும் ஓடி வந்து அவரை பற்றி முத்த மழை பொழிந்தது. தன் செல்லப்பிராணி கிடைத்த மகிழ்ச்சியில் கணேசன், ஈஸ்வரன் என்பவருக்கு பரிசு பொருட்களை கொடுக்க முன் வந்துள்ளார். அவர் வாங்க மறுத்துவிட்டார்.
Average Rating