உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)
நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம் பெற்றுவிட்டன. அன்று விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் – கடந்த வருடம் கே.பியை காட்டிக் கொடுத்தவர்கள்- கடந்த மாதம் தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தவர்கள் – இன்று நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்வதற்காக அல்லது அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்- மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது ஒற்றுமை என்று நடித்துக்கொண்டு உள்ளிருக்கும் அழிக்கும் சக்தி ஒன்று புலம்பெயர் தமிழர்களிடத்தில் தோற்றம் பெற்றுள்ளது. அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது தலைவனின் வழிநிற்கும் எம் எல்லோரினதும் கடமையாகும்.
கடந்தமுறை நான் எழுதிய பத்தியில் நாடு கடந்த அரசவையில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக – உருத்திரகுமாரைப் புறந்தள்ளுவதற்காக- சில நபர்கள் தங்களது வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த நபர்கள் யார் அவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் உருத்திரகுமாரை ஏன் புறந்தள்ள நினைக்கின்றார்கள் என்பவற்றை இங்கு விரிவாக ஆராய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இதன் மூலம் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களை விழிப்படையச் செய்ய முடியும் என்று நான் நினைக்கின்றேன்.
அந்த நபர்கள் கொண்ட குழு நோர்வேயைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றது. முகம் தெரியாத இவர்கள் – தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மிரட்டல்கள் என்பவற்றின் மூலம் ஒரு சிலரைத் தம்வசம் இழுத்து வைத்துள்ள இந்த நோர்வேக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசவையில் கூடுதலான ஆசனங்களைப் பெறுவதன் மூலம் உருத்திரகுமாரைப் புறந்தள்ள முடிவுசெய்தது. அதற்காக பல இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அவர்கள் சார்பானோர் தில்லுமுல்லுச் செய்யவும் தயங்கவில்லை.
குறிப்பாக, தெற்மேற்கு லண்டனில் நடைபெற்ற வாக்களிப்பின்போது கடுமையான முறைகேடுகள் செய்யப்பட்டமையால் அந்த வாக்களிப்பு ரத்துச் செய்யப்பட்டமை எல்லோருக்கும் தெரிந்ததே.
அதுபோலவே கனடா பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற சில வாக்களிப்புகளின் போதும் நோர்வேக்குழு தனது கைவண்ணத்தைக் காட்டி முன்னிலை பெறுவதற்கு முயற்சி எடுக்கப் பின்னிற்கவில்லை.
நோர்வேக்குழு சார்பாகப் போட்டியிட்ட சில வேட்பாளர்களுக்கு தாங்கள் ஏன் போட்டியிட நிறுத்தப்பட்டோம் என்ற உண்மைகூட தெரிந்திருக்கவில்லையாம் என்பது அவர்களுடன் நான் உரையாடும் போது அறியமுடிந்தது.
சில தமிழ் இணையத்தளங்களை தன்வசம் வைத்திருக்கும் இந்த நோர்வேக்குழு அவற்றில் நாடு கடந்த தமிழீழ அரசையும் அதன் இணைப்பாளர் உருத்திரகுமாரையும் குற்றம் சுமத்தி-வசைபாடி எழுதிவருகின்றமையும் புலம்பெயர் தமிழர்களால் கடும் விசனத்துடன் பார்க்கப்படுகின்றது. உருத்திரகுமாரின் உன்னத பணிக்கு எப்படியாவது ஆப்புவைத்து – அதன்மூலம் தங்களின் இருப்பை பலமாக்கிக்கொள்ள நெடுமையானவர்களின் நோர்வேக்குழு கடுமையாக முயற்சித்துவருகின்றது.
புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்திற்கு கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு மற்றும் போராட்டத்தின் அழிவுக்கு தாங்கள்தான் காரணம் போன்ற இன்னபிற குற்றச்சாட்டுகளிலிருந்து தங்கள் தலைகளைக் காப்பாற்றிக்கொள்ள உருத்திரகுமாருக்கு துரோகி பட்டத்தைக் கொடுத்திருக்கின்றது அந்த நோர்வேக்குழு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோகராக – புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபையின் வரைவைத் தயாரித்தவர்களில் ஒருவராக – தலைவர் பிரபாகரனின் நம்பிக்கையுள்ள ஒருவராக – நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் உருத்திரகுமாரை ஒரு துரோகி என்று பட்டம் சூட்டிக்கொள்ள அந்த நோர்வேக்குழுவுக்கு என்ன உரிமையிருக்கின்றது?
எப்படியாவது நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்வது என்று முடிவுசெய்து களமிறங்கிய நோர்வேக்குழு வாக்களிப்பின்போது காட்டிய பாச்சா பலிக்கவில்லை. இப்பொழுது தமிழீழ அரசவையின் முதலாவது கூட்டத்தொடரைக் குழப்புவதற்குத் திட்டமிட்டுள்ளது என்ற இன்னொரு அதிர்ச்சி வெளியாகியுள்ளது. இதனால் ஜெனீவாவில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த முதலாவது கூட்டத் தொடரை அவசர அவசரமாக அமெரிக்காவுக்கு மாற்றியமைத்துள்ளது நாடு கடந்த தமிழீழ அரசவையின் இணைப்பாளர் குழு.
அதேவேளை நோர்வேக்குழு சார்பாக களமிறக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உண்மையை நிலையை அறிந்துகொண்டு தற்போது உருத்திரகுமாருக்குப் பின்னால் அணி திரண்டு வருகின்றமையைக் கண்டு நெடுமையானவர்கள் மிரண்டு நிற்கின்றார்கள். நாடு கடந்த தமிழீழ அரசவையில் புகுந்து தமது செல்வாக்கை ஏற்படுத்த முயன்ற பாரிய சதித்திட்டம் தோல்வியில் முடிவடைய தற்பொழுது விழிபிதுங்குகின்றது அந்த நோர்வேக்குழு.
இறுதியில் ஏதோ காரணங்களை சொல்லி நாடுகடந்த அரசு மீதும் மதியுரைஞர் குழுக்கள் மீதும் தமது கட்டுப்பாட்டு இணையத்தளங்கள் மூலம் சேறடிக்க முயற்சிக்கின்றது அந்தக் குழு. எனினும் தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் எப்பொழுதும் வெல்ல முடியாது.
ஒரு சில இணையத்தளங்கள் அவர்களுக்காக ஒத்தூதினாலும் ஈழத்தமிழன் என்றுமே சோரம் போகதவன் என்பது அவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.
நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்யுத் துடிக்கும் அந்த நோர்வேக்குழுவை இயக்குவது யார்? அந்தக் குழுவின் திட்டம் பலிக்குமா? அடுத்த பத்தியில் பார்ப்போம்……………
நெதர்லாந்திலிருந்து ஆர்.தர்சானா…
[email protected]
Average Rating