இ-மெயில் மூலம் பார்வதி அம்மாள் கோரிக்கை: சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி பரிந்துரை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனின் தாய் பார்வதி அம்மாள் சார்பில் தமிழகத்தில் சிகிச்சை பெற அனுமதி கோரி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை பெற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார். இத் தகவலை சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் ஒரு அறிக்கையை சமர்பித்தார் ஸ்டாலின். அதன் விவரம்:
மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய நிகழ்வு குறித்து சட்டப்பேரவையில் கடந்த 19ம் நாளன்று விவாதிக்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய முதல்வர் கருணாநிதி, இந்தச் செய்தி முறையாக உரிய வகையில் தமக்குச் சொல்லப்படவில்லை என்றும், அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை என்றும், அதன் காரணமாக அவர் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர் மலேசியாவிற்கே- அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார். அவர் அங்கே வைத்திய வசதி பெறுவாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் அறிவிப்பார்களேயானால், அதைப்பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதை பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விண்ணப்பம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் வழக்கறிஞர், மாநில அரசுக்கு மருத்துவ சிகிச்சை கோரி மனு ஏதும் அளித்தால் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தக்க முன் மொழிவுகள் அனுப்பப்படும் என்ற கருத்தை முன் வைத்தார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பார்வதி அம்மாளின் மருத்துவ சிகிச்சை குறித்த முறையீட்டை மனுதாரரோ அல்லது பார்வதி அம்மாள் தரப்பிலோ கொடுக்க வேண்டும் எனவும், அப்படி கொடுக்கப்பட்ட மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் பார்வதி அம்மாளின் பெருவிரல் ரேகை பதித்த கடிதம் ஒன்று, தனது வைத்தியத்திற்காக கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி தமிழக முதல்வரை வேண்டி 30ம் தேதி அன்று முதல்வரின் தனிப் பிரிவுக்கு இ-மெயில் மூலமாக பெறப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்ததிற்கிணங்க, பார்வதி அம்மாள் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, மருத்துவச் சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதற்கு- சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்ற பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறைச் செயலாளருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
விசாவை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு:
இந் நிலையில் பார்வதி அம்மாள் சென்னை சென்று சிகிச்சை பெற வசதியாக அவரது விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்க மறுத்து குடியுறுமை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இந் நிலையில் பார்வதி அம்மாள் செனனையில் சிகிச்சை பெற அனுமதி கோரியுள்ளதையடுத்து அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க 4 வாரங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பார்வதி அம்மாளுக்கு மலேசிய அரசு வழங்கிய விசா வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் 16ம் தேதிக்குள் சென்னை செல்ல அனுமதி கிடைக்காவிட்டால், அவருடைய விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Average Rating