ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்
எரிமலை வெடித்ததால், ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. இந்தியாவில், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை, இன்று முதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை, கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. இதிலிருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அப்பகுதி முழுவதும் பரவியதுடன், அதிலிருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அப்பகுதியின் வான்வெளியில் பரவியது.
இதன் காரணமாக, பல விமான நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துவிட்டன. இதனால், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள், தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாமல், விமான நிலையங்களிலேயே பரிதவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
விமானப் போக்குவரத்து முடங்கியதையடுத்து, பொருளாதார ரீதியில் விமான நிறுவனங்கள் மட்டுமின்றி அதை சார்ந்த நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில், எரிமலைச் சாம்பலின் தாக்கம் லேசாகக் குறைந்து வருவதால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல விமான நிறுவனங்கள், ஆறு நாட்களுக்கு பின், தங்களது சேவையை நேற்று முதல் துவங்குவதாக அறிவித்தன. இதையொட்டி, பிரிட்டன் விமானப் பாதை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
இது குறித்து ஐரோப்பிய விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமான சேவை ரத்து செய்யப்பட்ட பகுதிகளில், முதல் பகுதியாக சில விமானங்கள் இயக்கப் படும். வரும் திங்கட்கிழமை முதல் 14 ஆயிரம் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும்’ என்றனர்.ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று முதல் தனது விமான சேவையை துவங்கவுள்ளதாக அறிவித்தது.
பின்லாந்தும், மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவை தொடரும் என தெரிவித்துள்ளது. ஜெர்மனி, இந்த விவகாரத்தில் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை.விமானப் போக்குவரத்து ரத்தானதால், ஐரோப்பிய யூனியனுக்கு, நாள் ஒன்றுக்கு 1,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ரெடி: ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று முதல் விமான சேவை மீண்டும் துவங்கும் என, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை அறிவித்துள்ளன. இதையொட்டி, பிரிட்டன், பிராங்பர்ட், டொரன்டோ நகரங்களுக்கு இன்று விமானங்கள் இயக்கப்படும். டில்லி – லண்டன், மும்பை – லண்டன், டில்லி – பிராங்பர்ட் நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்.
பிராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று டில்லி புறப்பட்டது.ஜெட் விமான நிறுவனமும் பிரிட்டனுக்கு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான நேரப்படி, இன்று முதல் விமானங்கள் இயக்கப்படும். ஏர் பிரான்சும் நேற்று பாரீஸ் மற்றும் முனிச் நகரங்களுக்கு விமானங்களை இயக்கியது. ஆனால், கிங் பிஷர் விமான நிறுவனம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
விசாவை நீட்டிக்க வேண்டும்:கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 1,500 ஐரோப்பியர்களின் விசா காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கோவா சுற்றுலாத் துறை கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து கோவா சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து ரத்தானதால், விசா காலம் முடிந்து, தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாமல், கோவாவில் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள், தங்களை போலீசார் கைது செய்து விடுவரோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, அவர்களது விசா காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். இது தொடர்பாக, மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கோவா சுற்றுலாத் துறை கூறியுள்ளது.
Average Rating