கோவை மாநாட்டில் சிவத்தம்பியும் பங்கேற்கிறார் -கருணாநிதி

Read Time:7 Minute, 42 Second

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியும் பங்கேற்கிறார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010, ஜுன் திங்களில் நடைபெறவிருக்கின்ற, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு பத்திரிகையிலும்; வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக இன்னொரு பத்திரிகையிலும்; வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு அந்த அறிஞர்கள் தெரிவித்துவிட்டார்கள் என்று மற்றொரு பத்திரிகையிலும்; தமிழ்-ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி ஒருமித்த உணர்வுடன், அவர்கள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன்(!) நாள்தோறும் தமிழகத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். தி.மு.க.வினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழி-இன முன்னேற்றத்திற்காக, எந்தவொரு நற்செயலில் ஈடுபட்டாலும், அதனை நையாண்டி செய்கிற நச்சு நாக்கினர், தமிழகத்தில் ஆண்டாண்டுக் காலமாக தங்களின் திருவிளையாடல்களை நடத்தியே வந்திருக்கிறார்கள்! அந்த விளையாட்டுகள் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாமல் போய்விட்டக் கதைகளை காலம் காலமாகத் தமிழ் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டுவிடாமல், விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றிமுகடு சிகரங்களைத் தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக் கருதியிருக்கின்றார்கள். அந்தச் சந்ததியினர் முழுமையாகப் பட்டுப்போகவில்லை என்பதற்கு சான்றாக, இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தலைதூக்கித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடையாளம் தான், நமது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள `நெடுமரங்கள்’ சில பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றார்கள். அவையெல்லாம், மழை பொழியும்போது, மழலையர் மணலைக் குவித்துக் கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்துவிடுகிற காட்சியைக் காணமுடியும். ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பதுபோன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிடுகின்ற அந்தத் தமிழ் – ஆங்கில ஏடுகள், எவ்வளவு ஜீரணிக்க முடியாதப் பொய்யை விழுங்கி விட்டு, அதனை மக்கள் மத்தியிலே வாந்தி எடுத்துள்ளன என்பதை, இதோ சில உதாரணங்கள் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறேன்!… எந்த தமிழறிஞர் சிவத்தம்பி மாநாட்டிற்கு வரமாட்டார் என்று கூறுகிறார்களோ, அந்த சிவத்தம்பி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக முன்னதாகவே வருவதாகத் தெரிவித்திருப்பதோடு; விவாதிக்கக் கூடிய கருத்துகள் என்ற தலைப்பில் ஐந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வழங்கியிருக்கிறார். அவையாவன: 1. செம்மொழிகள் பற்றிய கொள்கைகள் மற்றும் தமிழ் அல்லாத உலக செம்மொழிகள் பற்றிய கொள்கைகள் (சைனீஸ், கிரீக், சமஸ்கிருதம், லத்தீன் மற்றும் ஹீப்ரு) 2. இந்திய செம்மொழிகளின் சட்டப்பூர்வமான நிலைகள். 3. இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகம்; சமேரியன் மொழியும் தமிழும், தமிழும் ஜப்பானிய மொழியும், இந்தோ-ஆரியன், முண்டாரி, இந்தோ ஆரியனும் திராவிடமும், இந்திய பழங்குடியின மொழிகளுடன் தமிழுக்குள்ள தொடர்புகள். 4. செம்மொழியாக தமிழ்; இலக்கிய நடை, இலக்கியம் [^] அல்லாத வகை – மருத்துவம், வான சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் மேற்கத்திய ஆட்சிக்கு முன்பு நிர்வாகத்தில் தமிழ், கல்வெட்டு தமிழ், நிர்வாக மொழியாக தமிழ், 1. இந்தியாவில் 2. இலங்கையில் 3. சிங்கப்பூரில் மலேசியாவில் தமிழின் பயன், தென்னாப்பிரிக்கா, மொரீஷியசில் தமிழின் பயன். மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழ் 5. இங்கிலாந்து [^], அமெரிக்கா [^], ரஷியா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய கண்டங்களில் தமிழ் கல்வி. தொடக்கத்தில், அவர் எழுதிய கடிதத்தில், மாநாட்டிற்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியமாகும் என்றும் எழுதியிருந்ததை ஏற்றுக்கொண்டுதான்; முதலில் 2010 ஜனவரி 21 முதல் என்று குறிப்பிட்டிருந்த தேதியை, 2010 ஜுன் 24 முதல் 27 வரை என்று மாற்றியமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தைப் படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா; இனியேனும் திருந்தப் போகிறார்களா; அல்லது அடடா, பொய் கூறி அவமானப்பட்டுவிட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்பு
Next post இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக ஆஸிசென்ற 260அகதிகள் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர்.