கடல் கொந்தளிப்பால் பாறை மீது தூக்கி வீசப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது

Read Time:3 Minute, 33 Second

Schiff.jpgஅரபிக்கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, பாறை மீது தூக்கி எறியப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது. கப்பல் டேங்கர்களில் இருந்து எண்ணையை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே அதிகாரிகளின் தீவிர முயற்சியால் கப்பலில் இருந்து கடலில் எண்ணை கசிவது நின்று விட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா, கோவா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக, அரபிக்கடலில் கடுமையான கொந்தளிப்பும், ராட்சத அலைகளும் காணப்படுகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த “ஓசன் செரியா” என்ற கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை 650 டன் எண்ணையுடன் அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று மற்றும் ராட்சத அலைகளில் சிக்கி கப்பல் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. இதில் கப்பலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கேப்டன், அவரது மனைவி உள்பட 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவரை மட்டும் காணவில்லை.

இதனிடையே கடுமையான கடல் கொந்தளிப்பில் எண்ணை கப்பல் அடித்துச் செல்லப்பட்டது. கடைசியில் கோவா மாநிலத்தை ஒட்டிய கார்வார் கடற்கரையில் உள்ள ஓய்ஸ்டர் பாறைகளின் மீது தூக்கி எறியப்பட்டு, தலைகீழாக தொங்கியபடி நின்று விட்டது. கப்பலின் முன்புறம் கடலில் கவிழ்ந்த நிலையிலும், பின்பகுதி பாறை மீதும் உள்ளது.

இதில் கப்பலின் வலது அடிப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் எண்ணை டேங்கர்களில் ஓட்டை ஏற்பட்டு எண்ணை கசிந்து கடலில் கலக்க ஆரம்பித்தது.இதையடுத்து கடலோர காவல்படையினர், துறைமுக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து சென்றனர். முதலில் எண்ணை கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், கப்பலைச் சுற்றி 400 மீட்டர் சுற்றளவுக்கு, டன் கணக்கில் தேங்காய் நார் மெத்தைகளை கொண்டு வந்து கொட்டினர். மேலும் மணல் பைகள், தென்னை ஓலைக் குச்சிகளையும் கொட்டி வேலி போல அமைத்தனர்.

பின்னர் கப்பலின் டேங்குகளில் இருந்து எண்ணையை அகற்றும் பணி நடைபெற்றது. எனினும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பினால் எண்ணை கப்பல், டைட்டானிக் கப்பல் போல 2 ஆக உடைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே புலிகளுடன் பேச்சு: ஜே.வி.பி.
Next post சென்னை கடற்கரையில், கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்