இலங்கை (ஜீ.எஸ்.பி பிளஸ்) தொடர்பான விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றயிம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளமையை தமது புலன்விசாரணைகளில் கண்டடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக ஐரோப்பாவிற்கான 100 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக தனது முக்கியமான ஏற்றுமதியை அது இழக்கவுள்ளது என்றும் ஐரோப்பிய யூனியன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான கடந்த 25வருட யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மீறியுள்ளமை தொடர்பாக கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட புலன்விசாரணை முடிவுகளை திங்களன்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ளது. இலங்கை மனிதஉரிமைகள் தொடர்பான தனது கடப்பாட்டினை மீறியுள்ளதாக அந்த அறிக்கையின் இறுதி முடிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் தரப்பின் வன்முறைகள், சித்திரவதை, தொழில் சட்டங்கள் மீறப்பட்டமை, குறிப்பாக வயது குறைந்த சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டமை ஆகியவற்றை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாக ஐரோப்பிய யூனியனின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜி.எஸ்.பி. பிளஸ்க்கான நிபந்தனைகளான அடிப்படை மனித உரிமைகள் எவற்றையும் இலங்கை பின்பற்றவில்லை என்பதற்கான ஆதாரங்கள் மிகத் தாராளமாகக் காணக்கிடைக்கின்றன எனவும், பல ஏழ்மையான உலக நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைந்த நிலையிலும் சிலவேளைகளில் பூச்சியமாகவும் கூட காணப்படுகிறது எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் ஐப் பெறுவதாயின் 27 சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை பூர்த்தி செய்யவேண்டும் என புரூசல்ஸ் தொடர்ந்தும் எச்சரித்து வந்தது. தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் நிறுத்தப்படுவதானது இலங்கையின் புடவைக் கைத்தொழில் துறையை பாரியளவில் பாதிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும். ஐரோப்பிய யூனியனே 2008ல் இலங்கையின் பாரியளவிலான ஏற்றுமதி பிராந்தியமாக இருந்தது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அதிகளவான 36வீதம் ஐரோப்பிய யூனியனுக்கே மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக அமெரிக்கா இருந்தது. அது 24வீதமாக இருந்தது. ஐரோப்பிய யூனியன் சந்தையால் ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதி மூலம் இலங்கை 3.47 பில்லியன் டொலரைப் பெற்றுக்கொண்டது. இது அந்நியச் செலாவணி ஈட்டலின் பெரும் சந்தையாக இருந்துள்ளது. அதற்கடுத்து பணவருவாய் 3பில்லியன் டொலர்களாக இருந்தது. தேயிலை ஏற்றுமதிமூலமான அந்நியச் செலாவணி வருமானம் 1.2 பில்லியன் டொலர்களாக இருந்துள்ளது. இன்று இந்த அறிக்கை குறித்து விவாதிக்கும் ஆணைக்குழு நவம்பர் இறுதியில் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ்ஐ தற்காலிகமாக நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தும். இந்த முடிவு அடுத்த வருடம் ஜுன் வரை அமுலில் இருக்கும். பெரும்பாலான ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் மார்க் அன்ட் ஸ்பென்ஸர் போன்ற பெரும்பாலான பிரித்தானிய இறக்குமதியாளர்கள் தமது கொள்வனவுச் செலவை அதிகரிக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating