விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஜெயரட்ணம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்!
விடுதலைப் புலிகளினால் சுமார் 4வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்ஸை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக சேவையாற்றிய ஜெயரட்ணம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரியவருகையில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி தமது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் இரவு கல்கிஸ்சையில் உள்ள உணவகம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் இராபோசனத்திற்கு சென்றிருந்த வேளையில் அப்போது விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து புளொட் அமைப்பில் ஊடுருவியிருந்;த புளொட் மனோ என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட மனோ என்ற புலி உறுப்பினர் என்பவரால்; ஜெயரட்ணம் இரண்டு லட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையிலேயே இந்தக் கடத்தலை நடத்தியுள்ளார். கடத்தப்பட்ட ஜெயரட்னம் வான் ஒன்றின் மூலம் கற்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பின் அங்கிருந்து கடல் வழியாக படகொன்றின் மூலம் வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தக் கடத்தல் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானின் நேரடிக் கண்காணிப்பினால் விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டடுள்ள புலிச் சந்தேகநபர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெயரட்னம் முதலில் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பில் பாதுகாப்பாக இருக்ககூடிய தகவல்களை பொட்டம்மான் அவரிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஜெயரட்ணம் தற்கொலைப் படையில் பயிறிசிபெற சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் நட்புறவாகிய நிலையில் இரண்டு முறை தப்பித்து செல்ல முற்பட்டதாகவும் இரண்டு முறையும் அவர் புலிகளின் ஆயுதப் பிரிவினரிடம் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதன் காரணமாக அவரை கிளிநொச்சியில் உள்ள புலிகளின் சிறையில் தடுத்து வைத்ததுடன் அதில் தன்னை விடுதலை செய்யமாறு கோரி ஜெயரட்ணம் உண்ணாவிரதம் இருந்ததாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். இதன்பின்னர் புலிகளின் தலைமையின் உத்தரவிற்கிணங்க அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இத்தகவல்களை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஜெயரட்ணம் பல்வேறு பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தியதுடன் வெடிப்பொருட்களுடன் புலிகளின் சந்தேகநபர்களை கைது செய்திருந்தார். கொழும்பின் பாதுகாப்புக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டிருந்தார். 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை அடுத்து ஜெயரட்ணத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடதக்கது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய இவரது சகோதரரான ராஜரட்ணம் என்பவரும் விடுதலைப்புலிகளால் 1990ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating