கேபி கைதாவதற்கு முன்னர் தயாமோகனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும்பிலுள்ள ரசகியமான இடமொன்றில் வைத்து கே.பி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். கே.பி. கைதிற்குப் பின்னணியில் இருந்த செயற்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் தான் இந்த கபில ஹெந்த விதாரண. பாதுகாப்பு அதிகாரிகள் கேட்ட முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்த்த கே.பி. அவை எல்லாவற்றையும் பொட்டம்மானின் தலையில் சுமத்தி இருந்தார். ஆனால், இறுதியில் பல்வேறு விடயங்களை கே.பி. வெளிப்படுத்துவார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள். முன்னர் ஒரு தடவை செப்.11 2007இல் தாய்லாந்து அரசாங்கத்தால் கே.பி.கைது செய்யப்பட்ட போதும், சர்வதேச சட்ட விதிகளையும், குடிவரவு குடியகல்வு சட்டங்களையும் காட்டி அவரை நாடு கடத்த தாய்லாந்து அரச அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். ஆனால் இம்முறை இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை வெற்றியளித்து விட்டது. கேபியிடம் விசாரணைகள் நடைபெற்று வரும் அதேவேளையில் கே.பியின் கைது குறித்து ஏராளமான கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் கே.பி.கைது குறித்து தத்தமது கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அவர்களுடைய சொந்தக் கற்பனைகளாகும். தமது அனுமதியின்றி கே.பி தொடர்பான எந்தச் செய்தியையும் எழுதவோ பிரசுரிக்கவோ வேண்டாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசாங்கம் அரச ஊடகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. கே.பி தொடர்பான எந்தச் செய்தியையும் பிரசுரிப்பதாயின் அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் செய்தியாக இருக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தி இருந்தது. மலேசியாவில் வைத்து கே.பி. கைது செய்யப்பட்ட போது கே.பிக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளிவந்திருந்தன. அது மலேசியாவில் தற்போது உள்ள விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தயாமோகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பே என்று இவ்விடயங்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கே.பி. உண்மையிலேயே எம்.எஸ்.பி. (MSB ) எனப்படும் மலேசிய விசேட பொலிஸ் பிரிவினராலேயே (Malaysian Special Bureau) கைது செய்யப்பட்டிருந்தார். இது மலேசிய பொலிஸின் (Malaysian Royalist Police) கீழ் இயங்கும் ஒரு விசேட பிரிவாகும். ஓகஸ்ட் 5ஆம் திகதி கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியிலிருந்த ஜலான் தாங்கு அப்தல் ரகுமான் றோட்டிலிருந்த பெஸ்ற் ரியூன் ஹோட்டலில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசனின் மகனையும் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நடேசனின் உறவினர் ஒருவரையும் சந்திக்கச் சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார். பெஸ்ற் ரியூன் ஹோட்டலைச் சூழ இருந்த அனைத்து வீதிகளும் கடும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. இறுதியாக வந்த தொலைபேசி அழைப்பின் 15வது நிமிடத்தில் கே.பி. கைது செய்யப்பட்டார். அவரோடு கூடவே அவரின் வாகனச்சாரதியான அப்புவும் கைது செய்யப்பட்டு அங்கிருந்து பாங்கொக் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நடவடிக்கை இலங்கையின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஓருவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா. இவர் மலேசியாவுக்கான இலங்கையின் துணைத் தூதராக இருக்கிறார். (இவர் முன்னர் இலங்கை இராணுவத்த்pன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்தவர்.) மற்றவர் தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரண.
ஓகஸ்ட்; ஐந்தாம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் இருப்பவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா. அவர் கே.பி கைது செய்யப்பட்ட செய்தியை முதன் முதலில் சொல்கிறார். தாம் அவரை பாங்கொக்கிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
அந்த வட்டாரங்களின் தகவல்களின்படி கேபி எம்.எஸ்.பி. (MSB ) எனப்படும் மலேசிய விசேட பொலிஸ் பிரிவினருடன் தொடர்பு பட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றைப் பெறுகிறார். (இதற்கு முன்னதாக அவர் தயாமோகனிடமிருந்து கிடைத்த அழைப்பிற்குப் பதிலளித்து இருந்தார். அந்நபர் கேபியுடன் 14 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொலைபேசி அழைப்பின் 15வது நிமிடத்தில் அவர் கைது செய்யப்படுகிறார்.
உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சால் விசேட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒழங்குபடுத்தப்படுகிறது. அதனைச் செலுத்த விமானப்படை விமானிகளும் ஒழுங்குபடுத்தப்படுகிறார்கள். கேர்ணல் சார்லி தலைமையிலான சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவினர் கேபியை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காகப் பறப்படுகிறார்கள். கேபியையும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட அப்புவையும் இலங்கைக் குழுவினரிடம் கையளிப்பதற்காக எம்.எஸ்.பி. (MSB) எனப்படும் மலேசிய விசேட பொலிஸ் பிரிவினர் பாங்கொங்கில் காத்திருந்தார்கள்.
ஏன் இவர்கள் கோலாலம்பூரிலிருந்து பாங்கொக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்? இதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது மலேசிய அரசாங்கம் தான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்பியது. மற்றையது இலங்கை விமானப்படை விமானிகள் ஏற்கெனவே பலதடவைகள் பாங்கொக்கிற்குச் சென்று வந்திருக்கிறார்கள் என்பது. இந்நிலையில் மூன்று அரசாங்கங்களும் பாங்கொக் விமான நிலையத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பியை கையளிப்பது என்ற முடிவில் உடன்பாட்டிற்கு வந்திருந்தன. எவ்வாறிருந்த போதும் தாய்லாந்து அரசாங்கம் தனது மண்ணில் வைத்து கேபி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை மறுத்திருந்தது. மலேசிய அரசாங்கம் கூட கேபி கைது விவகாரத்தில் தனது சம்பந்தம் குறித்து மௌனம் சாதித்தது. மலேசியத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஹிண்ராப் என்ற அரசியல் கட்சியுள் நுழைய கேபி முயற்சி மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் சில மலேசிய அரசாங்கத்திற்குக் கிடைத்திருந்தன. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மலேசிய அரசாங்கம் நம்பியது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படலாம் என்றும் அது அஞ்சியது. மலேசியாவின் பிரதான வருவாய்களிலொன்று சுறு;றுலாத்றை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் பலிகள் இயக்கத்தை மீளவும் ஒருங்கிணைப்பதற்காக கேபி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அமைப்பின் புதிய நபர்களை தொடர்புபடுத்துவதிலும் உள்வாங்குதலிலும் அவருடைய இயல்பு காரணமாக அவர் முக்கியமான பல தவறுகளை இழைத்திருக்கிறார். அவர் தனது வலைத்தளத்தில் பல விடயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். அவர் பல்வேறு ஊடகப் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார். அதேபோல ஏராளமான நபர்களுடன் அவர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டுள்ளார். இன்ரபோலாலும் இந்தியாவாலும் பிடிவிறாந்த பிறப்பிக்கப்பட்ட நபரைப் போலன்றி ஒரு சாதாரண நபர் போலவே அவர் பணியாற்றினார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் மிக இலகுவாக அவரைப் பின்தொடர உதவியது.
இன்ரபோலும் இந்தியாவும் கேபியைக் கைது செய்வதில் தோல்வியடைந்திருந்தன. எந்;த வெளிநாட்டு புலனாய்வு நிறுவனமும் விசாரணைக்காகக் கேபியை தம்மிடம் தருமாறு இதுவரை உத்தியோகபூர்வமாகக் கோரவில்லை. ஆனால் சீனா மட்டும் அதிர்ச்சியடைந்துள்ளது. சீன அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய செய்திகள் வெளிவருவது இலங்கையுடனானதும் இந்தியாவுடனானதுமான உறவகளைப் பாதிக்கும் என்று அது கருதுகிறது.
கேபியை உயிரோடு பிடிப்பதில் இரண்டு முக்கிய விடயங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. முதலாவது அவருடைய தொடர்பாடலில் உள்ள இயல்பு காரணமான பலவீனம். இரண்டாவது கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த கேர்ணல் ராம். கேபி பற்றிய ரகசியங்களை அறிவதற்கு அவர் ஒரு கருவியாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளார். அக்கரைப்பற்றில் வைத்து கேர்ணல் ராம் இலங்கைப் படையினரிடம் சரணடைந்தார். முன்னதாக அவர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் சரணடைந்த செய்தி பாதுகாப்புப் படையினரால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் வெளிநாட்டிலுள்ள ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக ஏராளமான பயனுள்ள தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் சேகரிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இதுவரை கேபிக்கு தெரியாது இலங்கை இராணுவத்திடம் தான் ராம் சரணடைந்திருக்கிறார் என்று.
களத்தில் இலங்கைப் படையினர் புலிகளைத் தோற்கடித்து விட்டார்கள் என்பது உண்மை தான். இதனால் புலிகளின் பழைய அத்தியாயம் முற்றாக முடிவடைந்து விட்டது. எனினும் புலிகளின் முழு வலையமைப்பும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டதா என்பதை இப்போதைக்குக் கூற முடியாது.
Average Rating