விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)
கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை. புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது. கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால். ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது. இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு. இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது. இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை. ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர். இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது இந்தியா கடுப்பாக்கியது.
இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் – இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.
இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.
ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.
ஆனால் இலங்கை க்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.
(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)
Average Rating