விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-5)
கை கொடுத்த இந்திய கடற்படை… இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை. இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது. 2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது. உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன. அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும். உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.
இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் – இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.
மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்ுத விட்டோம்.
ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.
இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.
இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.
(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)
Average Rating