இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்

Read Time:6 Minute, 15 Second

indonesia.jpgஇந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள்.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.2 என்று கணக்கிடப்பட்ட இந்த நில நடுக்கம், 6.3 ஆக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஜாவாவின் பழைமையான சுற்றுலா நகரமான யோக்ய கர்தா, பண்டுல் நகரங்கள் உள்பட பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமப்பகுதிகள்தான், இந்த பூமி அதிர்ச்சியினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

இது வரை 5 ஆயிரம் பேர் பூகம்பத்துக்கு பலியாகி உள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது பண்டுல் நகரம் ஆகும். அங்கு மட்டும் 2 ஆயிரத்து 400 பேர் இறந்துள்ளனர். நகரில் உள்ள 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி விட்டன. பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அச்சம் காரணமாகவும், தொடர்ந்து நீடித்த பின் அதிர்வுகள் காரணமாகவும் நேற்று முன்தினம் முழுவதும் பொது மக்கள் யாரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பாமல், மைதானங்கள் மற்றும் ஆலய வளாகங்களில் தங்கி இருந்தனர்.

அதிகாலையில் தாக்கிய பூகம்பத்தை தொடர்ந்து மொத்தம் 450 தடவை தொடர் பின் அதிர்வுகள் ஏற்பட்டன. அதிகபட்சமாக 5.2 வரை இந்த நில நடுக்கங்கள் பதிவாகி இருந்தன. நேற்றுதான் பூகம்ப பாதிப்பு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பயன்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளதா? என்று தேடினார்கள்.

பூகம்பத்தில் இறந்தவர்களின் உடல்கள், இஸ்லாமிய சம்பிரதாயப்படி உடனுக்குடன் ஆங்காங்கே மொத்தமாக புதைக்கப்பட்டுவிட்டன. யோக்ய கர்தா நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் காயம் அடைந்த நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஏராளமான பேர் மருத்துவ மனைகளுக்கு வெளியே திறந்த வெளியில் பாய், பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் செய்தி தாள்கள் மீது படுத்தபடி பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மரங்களில் குளுகோஸ் பாட்டில்கள் தொங்கவிடப்பட்டு அவர்களுக்கு டிரிப் ஏற்றப்படுவதை காண முடிந்தது.

பூகம்ப பாதிப்பு பகுதியில் மவுண்ட் மெராபி அருகே கடந்த சில வாரங்களாக எரிமலை குமுறிக்கொண்டு இருக்கிறது. தீப்பிழம்புகளையும் எரி சாம்பல் மற்றும் எரிவாயுவை அது கக்கி வந்தது. பூகம்பத்தினால் இந்த எரிமலையின் குமுறல் அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே அதன் சுற்று வட்டார கிராமங்கள் காலி செய்யப்பட்டுவிட்டதால் அந்த பகுதியில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பூகம்பத்தின் தாக்கத்தினால், இந்த எரிமலை வெடித்துச்சிதறும் ஆபத்து இருப்பதாக வல்லுனர்கள் கருதுவதால், அந்தப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யோக்ய கர்தா நகரில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனையின் ஒரு பகுதி சேதம் அடைந்ததுடன், பிரம்பனன் பகுதியில் உள்ள இந்துக் கோவிலும் பூகம்பத்தினால் சேதம் அடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வரும் சரித்திரப் புகழ் வாய்ந்த போரோபுதூர் புத்தர் கோவிலுக்கு இந்த பூகம்பத்தால் பாதிப்பு எதுவும் இல்லை.

யோக்ய கர்தா நகரில் பெரும்பாலான வீடுகள் அனைத்தும் கற்கள் போன்ற கனமான பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததே பெரும் உயிர் இழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டாக்டர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பல கிராமங்களில் சிறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கிராம மக்களே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் நேற்று பிற்பகலில் தான் பூகம்ப பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் லாரிகளில் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் குவியத்தொடங்கி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார
Next post கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு