ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி

Read Time:5 Minute, 5 Second

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே எண்ண வேண்டும், ஈழம் என்ற சொல்லும் கருத்தும் அவர்களிடமிருந்து மறைய வேண்டும்; அரசு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) வலியுறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் தயசிறி ஜெயசேகர தெரிவித்த கருத்துகள் வருமாறு:   “ராணுவரீதியாக விடுதலைப் புலிகளை வென்று விட்டோம், பிரபாகரனைக் கொன்று விட்டோம். இனி அரசியல்ரீதியாகத் தமிழர்களை வெற்றி கொள்ள வேண்டும். இலங்கையின் வடக்கும், கிழக்கும் இணைந்த ஈழம்தான் தங்களுடைய தாயகம், அது தங்களுக்கே உரிய பகுதி என்று தமிழர்கள் மனதாலும் உணர்வாலும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் வாழ்ந்தாலும் அந்த இடங்களும் இலங்கையைச் சேர்ந்தவைதான், அதில் எல்லா இலங்கையர்க்கும் பங்கு உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதே சமயம், இலங்கையின் பிற பகுதிகளும் தங்களுக்கு உரியவையே என்று தமிழர்கள் நினைக்கும் அளவுக்கு அரசு அவர்களை அரவணைத்துச் செயல்பட வேண்டும். தமிழர்களுடைய அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் ஈழம் என்ற பெயரைத் தாங்கியுள்ளன. அவற்றையெல்லாம் நீக்குமாறு அரசு உத்தரவிட வேண்டும். (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -இபிடிபி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -ஈபிஆர்எல்எப், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் -புளொட் ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார்.) அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள ஈழம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த எண்ணத்தை அனைவருடைய மனங்களிலும் ஆழ விதைத்து விட்டது.

 

 ஐ.நா. தீர்மானம்: ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு வெற்றி கிடைத்தது அளவற்ற மகிழ்ச்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்தது. இலங்கை அரசு பெற்ற வெற்றியைப் பாராட்டுகிறோம். இந்தத் தீர்மானத்தை சில ஐரோப்பிய நாடுகள் மட்டும் எதிர்த்தது ஏன் என்று அரசு ஆராய வேண்டும். அந்த நாடுகளையும் நமக்கு ஆதரவாகத் திருப்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

 அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நம்முடைய முக்கிய வியாபாரக் கூட்டாளிகள். அந்த நாடுகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம்’ என்றார் தயா சிறி.

 

 இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அனைத்துக்கட்சிகள் கூடி விவாதித்து கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன. அதே நடைமுறையை இலங்கையிலும் கையாள வேண்டும் என்றும் தயாசிறி கேட்டுக்கொண்டார்.

 

 ரணில் விக்கிரமசிங்க:  இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை வந்து பாருங்கள் என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் திறந்து விட்டுவிடுங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம்கூட பேட்டியில் வலியுறுத்தியிருந்தார்.

 

 தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்ட தமிழர்களில் 90 சதவீதம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் வீடுகளில் அரசு குடியமர்த்திவிட வேண்டும் என்றும் ரணில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி

  1. When our own Tamil traitors dig Eelam Tamil’s grave and help GOSL do what they have done in the last few years why not?? It is 100% possible.
    GOSL+India+China+Pakistan+Tamil Traitors= No More Eelam
    Job well done Tamil Traitors. Rot in hell!

Leave a Reply

Previous post பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை!!
Next post பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு