புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் 2ம் கட்ட நடவடிக்கை: 3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள எஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 14ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கம் இறுதியாக அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து நேற்றுக்காலை பெருந்தொகையான பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததாகவும் இவர்களை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணம் உள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார். கரையாமுள்ளி வாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தை உள்ளடக்கிய மிகவும் குறுகிய பிரதேசத்திற்கு படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக பிரபாகரனையும் அவரது சகாக்களையும் முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வட்டுவாக்கல் பிரதேசத்தின் ஊடாக கடந்த இரு தினங்களாக புலிகளின் பாரிய மண் அணைகளை தகர்த்த வண்ணமும், கைப்பற்றிய வண்ணமும் வேகமாக முன்னேறிச் சென்ற 59வது படைப் பிரிவினர் பொதுமக்கள் சிக்குண்ட பிரதேசத்தை அண்மித்திருந்தனர். நேற்றுக் காலை தொடக்கம் குறித்த சில மணிநேரத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து அதனை பொருட்படுத்த முடியாத புலிகள் தப்பிவரும் சிவிலியன்களை தடுக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர். புலிகளின் கடும் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் வர ஆரம்பித்ததை அடுத்து இராணுவத்தினர் புலிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதிய பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்த பிரதேசத்திற்குள்ளும் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளை நோக்கி பொதுமக்கள் வருகைதந்த வண் ணம் உள்ளதாகவும் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பிரி கேடியர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை பாதுகாத்து சிகிச்சை அளிக்கும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் கட மையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
முள்ளியாவளை பிரதேசத்திற்கு அவசர அவசரமாக விரைந்த ஹெலிகள் அநுராத புரத்தை நோக்கி காயமடைந்தவர்களை அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் விமானப் படை ஹெலிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
புலிகளின் பிடியிலிருந்து இதுவரை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினர் மிகவும் சிறந்த முறையில் திட்டமிட்டு கடந்த மாதம் 20ம் திகதி புலிகளால் அமைக்கப் பட்டிருந்த பாரிய மண்அணையை கைப்பற்றி தகர்த்ததன் மூலம் சுமார் 10 நாட்களுக்குள் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்களை மீட்டெடுத்தனர்.
தற்பொழுது இரண்டாம் கட்ட மீட்பு பணியும் வெற்றியளித்துள்ளதாக பாது காப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
Average Rating