பிரபாகரன் புதுமாத்தளனில்.. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு.. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பொது மக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோருடன் இடம் பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது:- எனது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள இரு நாட்டு தூதுவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுடனும் நீண்ட நேரம் பேச்சு நடத்தப்பட்டது. வட பகுதியில் இடம் பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. எதிர்வரும் காலங்களில் எவ்வாறு மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வட பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து எமது அரசின் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இடம் பெயர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் என்பன குறித்தும் எமது சந்திப்பில் ஆராயப் பட்டது. பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புலிகள் 6 சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதோடு அம் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் கடந்த தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்ற உள்ளோம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு மேலதிக வசதிகள் அளிப்பதற்காக 2.5 மில்லியன் பவுண் உதவி வழங்க பிரித்தானிய முன்வந்துள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளுடன் இணைந்ததாக சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரபாகரன் புதுமாத்தளனில்
பிரபாகரன் இன்னும் புதுமாத்தளனிலா இருக்கிறார் அல்லது தப்பி விட்டாரா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்;
பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலே மறைந்திருக்கிறார். இது தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.
பாதுகாப்பு வலயத்திற்குச் செல்வதற்கு ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சில நாடுகள் கோரியிருப்பது குறித்து வினவியதற்கு பதிலளித்த அமைச்சர்; ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், 16 அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன வவுனியாவில் இயங்கி வருகின்றன. பல நாடுகள் மருத்துவ உதவிகள் அளித்துள்ளன. பாதுகாப்பு வலயம் அடங்கலான ஏனைய பகுதிகளில் சென்று பணியாற்றுவது தொடர்பில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
சுவீடன் அமைச்சரின் வருகை
இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தொடர்பிலான ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க கால அவகாசம் தேவை. அதனாலேயே சுவீடன் வெளியுறவு அமைச்சரின் வருகை தாமதமானது. அடுத்த வாரம் இலங்கை வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சொன்னார்.
Average Rating