விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை -சரணடைந்துள்ள தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ்
விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் அல்ல என்றும், புலிகளிடம் ஒரு மொழிபெயர்ப்பாளராகச் சம்பளத்துக்குப் பணியாற்றியதாகவும் ஜோர்ஜ் கூறியதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின்போதும் சரி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போதும் சரி, புலிகள் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டிருக்கவில்லை என்று விசாரணைகளின்போது ஜோர்ஜ் கூறியதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகளை அக்கறையுடன் செயற்படச் செய்வதற்கு நோர்வே கடுமையாக முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், எனினும், புலிகள் அதற்கு இசைந்து கொடுக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு நோர்வே புலிகளைக் கேட்டுக் கொண்டதுடன், ‘கொடுப்பதைக் கொடுத்துப் பெறுவதைப் பெறவேண்டும்‘ என்று ஆலோசனை கூறியபோதும், புலிகள் அவற்றைச் செவிமடுக்கவில்லை என்றும் ஜோர்ஜ் கூறியதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விடுதலைப் புலிகள் இவ்வாறு நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ளாத காரணத்தினால், சர்வதேச சமூகம் புலிகள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுகுறித்துப் பரிசீலிக்கத் தயார் என்று புலிகள் ஏற்றுக்கொண்டபோதும், பின்னர் தமது அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் விலகியே இருந்தனர்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு, கிழக்குத் தமிழர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்காத புலிகள், ரணில் விக்கிரமசிங்காவைத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் சமாதான முயற்சிகளிலிருந்து விலகுவதற்கான தந்திரோபாயத்துடன் செயற்பட்டனர்.
பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் பெரும் இழுபறிக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கிய புலிகள், ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர். எனினும், அதன் பின்னர் நோர்வேயில் ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக்குச் சென்ற போதும், கடைசி நேரத்தில் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
சமாதான முயற்சிகளின் ஏற்பாட்டாளரும், நோர்வே அமைச்சருமான எரிக் சொல்ஹேய்ம் பல மணி நேரமாக முயன்றும், புலிகள் தமது பிடிவாதத்தைக் கைவிடாததுடன், பேச்சுக்களில் கலந்துகொள்ளாமலே நாடு திரும்பியிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடனான ஜெனீவா மற்றும் நோர்வே பேச்சுவார்த்தைகளில், புலிகளின் முன்னாள் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் அன்ரன் பாலசிங்கம் கலந்துகொள்ளாத நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் புலிகள் தரப்புக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating