ஐடியா இருந்தாலே ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 40 Second

தொப்பி வாப்பா பிரியாணி வென்ற கதைபிரியாணி என்று உச்சரித்தாலே சிலருக்கு பசிக்கத் தொடங்கிவிடும். உண்ணும் உணவில் பல்வேறுவிதமான வகைகள் இருந்தாலும் பிரியாணிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. பிரியாணி தயாரிப்பில் பல நிறுவனங்கள் பல்வேறு சிறப்புகளோடு போட்டி போட்டு வரும் நிலையில், தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனமும் பல்வேறு தரப்பினரின் உள்ளம் கவர்ந்து இன்று உலகம் முழுதும் கிளைகளை பரப்பி வருகிறது. இதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை.

‘‘எங்கள் கடைக்கு பிரியாணி சாப்பிட வரும் ஒவ்வொருவரையும் நண்பர்களாகப் பார்க்கிறோம். குறைந்தபட்சம் நாங்கள் வாழும் பகுதியில் பசியால் வாடுபவர்களின் பசி தீர்க்கிறோம். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொடுத்து, வீரியம் மிக்கவர்களாக அவர்களை மாற்றும் முன்னெடுப்பில், வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வரும் விஆர் யுவர் வாய்ஸ் (We are your voice) அமைப்புடன் கைகோர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கும் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறோம்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர், தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சையத் உமர் முக்தார்.

‘‘தொப்பி வாப்பா என்பது கார்ப்பரேட் அல்ல கம்யூனிஸ்ட்’’ என்றவர், ‘‘சமூக அரசியலுக்காக ஒன்றிணைந்த நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் இது. பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதற்காகவே இந்தத் தொழிலைத் தொடங்கி, ஒரு சிஸ்டமாக மாற்றியுள்ளோம். முதலாளியே இல்லாத பெரு நிறுவனம். பணம் சம்பாதிப்பது மட்டுமே இதில் குறிக்கோள் இல்லை. குறிப்பிட்டுச் சொன்னால் முதலீடே இல்லாமல் முன்னேறியவர்கள் நாங்கள். நான் முதலாளி என்று யாரும் இதில் லாபத்தை எடுக்க முடியாது. அனைவருமே இதில் ஊழியர்கள், அனைவருமே இதில் முதலீட்டாளர்கள். அந்த மாதிரியான திட்டத்துடனான கட்டமைப்பாக உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார் உமர் அழுத்தமாக.

‘‘நிறைய நிறுவனங்கள் தங்கள் வெற்றிக் கதைகளை பேசியபோது… நாங்கள் இரு மடங்கு தோல்விகளை சந்தித்து, அதில் இருந்து வெற்றிகளை கற்றுக்கொண்ட கதைகளை பேசினோம். இன்று நாங்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்போடு கேரளாவையும் உள்ளடக்கி தமிழ்நாட்டில் 26 கிளைகள், ஐக்கிய அரபு நாடுகளில் 4 கிளைகள் என மொத்தம் 30 கிளைகளுடன் உலகம் முழுவதும் எங்களின் நிறுவனத்தை கிளை பரப்பி இருக்கிறோம்.

தமிழகத்தில் மட்டுமே 100 கிளைகளை தொடங்கும் எண்ணத்தில் முன்னேறிக் கொண்டும் இருக்கிறோம்.சொந்த முதல் இருந்தால்தான் தொழில் பண்ண முடியும் என சிலர் இங்கு நினைக்கிறார்கள். ஐடியா இருந்தாலே ஜெயிக்கலாம். தேவை உங்களிடம் நல்ல டீம், உங்களைச் சுற்றி நல்ல மனிதர்கள், கூடவே நல்ல ஐடியாலஜி. வெற்றி நிச்சயம்.மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல் என்கிற சிந்தனையில் எங்கள் நிறுவனத்தில் பல்வேறு விதமான பாதிப்புகளை கொண்ட மாற்றத்திறனாளிகளை பணியில் அமர்த்தி வருகிறோம். அவர்கள் நம்மிடம் கேட்பது வாய்ப்புகள் மட்டுமே. அவர்கள் பாதிப்புக்கு தகுந்த மாதிரி என்ன பணி செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறோம்.

இன்னும் இன்னும் அதிக வேலை வாய்ப்புகளை அவர்களுக்காக உருவாக்க வேண்டும் என்பதும் எங்களின் திட்டமாக இருக்கிறது. பிரியாணி கடையை ஒட்டி கசாப்புக்கடை என்கிற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளோம். இதில் பிரியாணி தயாரிப்புக்கான கசாப்பு களை நாங்களே சுத்தப்படுத்தி, உணவு தயாரிப்புக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நேரடியாகக் கொண்டு வந்து, அதில்தான் பிரியாணி மற்ற கசாப்பு உணவுகள் தயாராகிறது. காய்கறிகளுக்காக விவசாய சந்தை என்கிற நிறுவனத்தையும் தொடங்கி அதில் விவசாயம் தொடர்பாக படித்த மாணவர்களை பணியமர்த்தி தரமான காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். அதேபோல் வாப்பா டிரேடர்ஸ் என்கிற பெயரில் மளிகை பொருட்களுக்கான நிறுவனத்தையும் உருவாக்கி அதிலும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மேல் படிப்பு படிக்கின்ற மாற்றுத்திறனாளிகள், விளையாட்டில் சாதனை புரிந்து மெடல் வெல்கிற மாற்றுத்திறனாளி நண்பர்களும் இருக்கிறார்கள். நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இவர்களின் உத்வேகத்தை வியந்து பார்ப்பேன். எனக்கான தன்னம்பிக்கை அவர்கள்தான்’’ என்ற உமர் முக்தாரை தொடர்ந்து நம்மிடம் பேசியவர் தொப்பி வாப்பா நிறுவன மேலாளர் பிரதீபா ராஜகுமாரி.

‘‘ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டில் கிடைத்த ஸ்பார்க்தான் தொப்பி வாப்பா பிரியாணி. எல்லா வேலைகளையும் நண்பர்கள் இணைந்து பகிர்ந்து செய்யத் தொடங்கி, இன்று மிகப்பெரிய நிறுவனமாக வேர் பிடித்து கிளை பரப்பியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 10 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு என்கிற அடிப்படையில் பணி வாய்ப்பை வழங்குகிறோம். சில நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளிடம் உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்பதை நேரடியாகச் சொன்னால்கூட தாங்கிக் கொண்டு வெளியில் வந்துவிட முடியும். ஆனால் எதுவுமே சொல்லாமல் புறக்கணிப்பார்கள். அவமதிப்பை விட புறக்கணிப்பே வலி நிறைந்தது.

மாற்றுத்திறனாளிகளிடத்தில் என்ன மாதிரியான திறமை இருக்கு என்பதை அறிந்து பயிற்சி வழங்கி பணி அமர்த்துகிறோம். இதில் எச்.ஆர். ரெக்ரூட்டர், குவாலிட்டி அஷூரென்ஸ் எக்ஸிக்யூட்டிவ், ப்ரான்சைஸ் ரிலேஷன்ஸ் எக்ஸிக்யூட்டிவ், டேட்டா மேனேஜ்மென்ட், சிசிடிவி சர்வைலன்ஸ், லீகல் அட்வைசர் என மாற்றுத்திறனாளிகள் பேக் ஆபீஸில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். பி.எச்டி முடித்த இருவர் கிரியேட்டிவ் சைடில் வேலை செய்து வருகிறார்கள். ஒருவர் மட்டுமே பிரியாணி பிளேட்டர் ஆபரேஷனில் இருக்கிறார்’’ என்று முடித்தார்.

ஃபீட்பேக் டீம்

‘‘நாங்கள் இதில் குவாலிட்டி டீமில் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் சாப்பிட வரும் கஷ்டமர்களின் ஃபீட்பேக் கலெக்ட் செய்து அந்த ரிப்போர்ட்டை சப்மிட் செய்வதே எங்கள் பணி. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை இருக்கும். பணியில் இருப்பது போல் இல்லாமல் குடும்பம் போல இருந்து மகிழ்ச்சியாக வேலை செய்கிறோம்.பார்வை சவால் உள்ளவர்களுக்கு நிறுவனங்கள் வேலை மட்டுமே கொடுப்பார்கள். நாங்களும் தட்டுத் தடுமாறி இரண்டு பேருந்து ஏறி சாலைகளை கடந்து வேலை செய்யும் இடம் நோக்கி வரும் சூழல் சென்னை மாதிரியான நகரங்களில் சவால் நிறைந்தது.

தொப்பி வாப்பா நிறுவன டீம் எங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறார்கள். நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து பணிக்கு வந்து செல்ல காருடன் ஓட்டுநரே எங்களை அழைத்து வந்து, சாலையை கிராஸ் செய்து காரில் ஏற்றி இறக்கி அழைத்துச் செல்கிறார். வீல்சேர் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ப கழிவறை, சாய்தள நடைபாதை போன்றவையும் அலுவலகத்தில் வசதியாக இருக்கிறது’’ என்கின்றனர் பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளான அந்தோணி மற்றும் ஆரோக்கிய கண்மணி.

மாற்றுத்திறனாளிகளுக்காக…

‘‘மாற்றுத்திறனாளிகளுக்காக இதுவரை 15 மெகா ஜாப் ஃபேர்களை சென்னை, பெங்களூர், கவுகாத்தி போன்ற பெரிய நகரங்களிலும், சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் நடத்தியுள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். ஐ.டி, உற்பத்தி, ரீடெய்ல் என 15,500க்கும் மேற்பட்டோர் இதில் பணி வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

ஒருசில நிறுவனங்கள் தானாகவே முன்வந்து மாற்றத்திறனாளிகளை தேர்வு செய்து எங்களை தரச் சொல்வார்கள். இவர்களுக்கென எக்ஸ்குளூசிவ் ஜாப் டிரைவ் செய்து கொடுக்கிறோம். ஜாப் டிரைவ் மூலமாகவே பல்வேறு பாதிப்புள்ள 10 மாற்றுத்திறனாளிகள் தொப்பி வாப்பா நிறுவனத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் பார்வை சவால் உள்ளவர்களும் அடக்கம். இந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வாய்ப்பை மட்டும் வழங்கவில்லை. அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து சுதந்திரமாக செயல்பட ஊக்கப்படுத்துகிறார்கள்.

இன்குளூசிவ் என்பது ஃபேன்ஸி வார்த்தையாக மாறிவிட்ட இன்றைய சூழலில், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னையின் அடிநாதத்தை புரிந்து வேலை கொடுக்கும் நிறுவனங்கள் இங்கே மிகமிகக் குறைவு. அதற்கான விழிப்புணர்வு வேலை தரும் நிறுவனங்களுக்கு இன்றும் இல்லைதான். ‘‘நாங்கள் இப்படித்தான், உன்னால் முடிஞ்சா எங்களோடு கலந்துக்க’’ என்பதான மனநிலையாகவே அது இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தடையின்றி பணியாற்றுவதற்கான இலகுவான சூழல், கட்டமைப்பு இவற்றை நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதைத்தான் தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்து கொடுத்து அவர்கள் பணியாற்றும் சூழலை எளிமைப்படுத்தியுள்ளது’’ என்கிறார் வி ஆர் யுவர் வாய்ஸ் நிறுவனர் காஷிம் பாஷித்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் தயாரிப்பில் நோ சீக்ரெட்! (மகளிர் பக்கம்)
Next post சுவாசத்தை சீராக்கும் நொச்சி இலை! (மருத்துவம்)