என் தயாரிப்பில் நோ சீக்ரெட்! (மகளிர் பக்கம்)
‘Fit & Food’ மும்தாஜ் அம்மா
‘‘நான் அம்மா பேசுறேன்பா…’’ என ‘பா’ சேர்த்து தாய் அன்போடு மும்தாஜ் அம்மா கொடுக்கும் ஃபிட் அண்ட் ஃபுட் யு டியூப் சேனலுக்கு ரசிகர்கள் ஏராளம். “இதை எப்படி செய்யுறதுன்னு இப்ப அம்மா சொல்லப் போறேன்பா… இதை இதில் சேர்த்துக்கணும்பா, இதை இதில் போடுறேன்பா” என்கிற அவரின் குரல் கேட்க மிகவும் நன்றாக இருப்பதுடன், அருகாமையில் அமர்ந்து அம்மாவே பேசுவது போன்ற உணர்வைத் தரும்.
மும்தாஜ் அம்மாவின் பெரும்பாலான வீடியோக்கள் ஹெல்த்தியான உணவை எப்படித் தயார் செய்வது என்பதோடு சரும பொலிவுக்கான மூலிகை பொடி மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகை எண்ணெய்கள் என மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரித்ததாகவே இருக்கிறது.
கம்பு, கேப்பை, சோளம், வரகு, தினை போன்ற சிறுதானியங்களை உணவாகப் பயன்படுத்துவதையே நாம் மறந்து வரும் நிலையில், இவற்றை முளைகட்டி அதிலிருந்து தயாராகும் உணவுகளையே பெரும்பாலும் செய்து காட்டுகிறார். அவர் போடும் 10 வீடியோவில் 7 சத்தான சிறுதானிய உணவு வகைகளை குடும்பத்தினருக்கு எப்படி தயாரித்து கொடுப்பது என்பதாகவே இருக்கும். மைதா சேர்க்காமல் கோதுமையில் எப்படி சமைப்பது? மேகி, பீட்சா போன்றவற்றை எப்படி ஹெல்த்தியாகத் தயார் செய்து உண்பது? சமையல் எண்ணெயை எப்படி குறைவாக பயன்படுத்தி சமைப்பது போன்ற டிப்ஸ்களையும் அவ்வப்போது வழங்குகிறார்.
‘‘பிட்னெஸ்காக இந்த சேனலை நானும் அம்மாவுமாகச் சேர்ந்து தொடங்கி 4 ஆண்டுகளை கடந்தாச்சு. தினம் ஒரு வீடியோ என்கிற முறையில் இதுவரை 1400 வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறோம். 8 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைத் தொட்டு சில்வர் பிளே பட்டனை வாங்கியாச்சு. அடுத்தது கோல்டு பிளே பட்டனும் கிடைத்துவிடும்’’ என்கிற மும்தாஜ் அம்மாவின் மகன் அப்துலிடம் “நான் அம்மா பேசுறேன்பா” என்கிற கான்செப்டை எங்கிருந்து பிடித்தீர்கள் என்றதற்கு?
‘‘எங்களுக்கு சொந்த ஊர் மதுரை. எங்கள் அம்மாவுடைய நேச்சுரல் வே ஆஃப் ஸ்பீக்கிங் எப்போதுமே ‘பா’ சேர்த்துத்தான். ‘பா’ சேர்க்காமல் அம்மாவுக்கு பேசவே வராது. அதாவது, எதிரில் இருப்பவர்களை வாப்பா, போப்பா, சொல்லுப்பா என்பதாகவே அது இருக்கும். அம்மாவின் தயாரிப்பு சேனல் பார்க்கிறவர்களுக்கு அறிவுரையாக அமைந்ததால் “அம்மா பேசுறேன்பா” என உரிமையோடு அழைத்து செய்து காட்டுகிற சேனலாகவே இருக்கட்டுமே என முடிவு செய்து, ‘பா’வை மாற்ற வேண்டாம் என முடிவு செய்தோம்.
எனக்கு விபரம் தெரிந்து அம்மா எப்போதுமே வொர்க்கிங் வுமன்தான். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சின்னதாக நாங்கள் ஒரு டெக்ஸ்டைல் ஷாப் வைத்திருந்தோம். அப்போதே அம்மா காலையில் எழுந்து எங்களுக்கு உணவு தயாரித்து சாப்பிட கொடுத்துவிட்டு அப்பாவோடு டெக்ஸ்டைல் ஷாப்பிற்கு கிளம்பிவிடுவார். உடல் நலமின்றி ஒருநாள் அப்பா திடீரென இறந்தபோது இஸ்லாமிய சமூகப் பெண்ணாய் அம்மா வீட்டிற்குள் உட்காரவில்லை. அப்போது நான் +2 மாணவன். எதிர்காலத்தை மனதில் வைத்து ஒழுங்காகப் படி. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் என கட்டளையிட்டு தனி ஆளாக நின்று கடையை நடத்தினார்.
‘18 வகையான சத்து தானியங்களை இணைத்துப்பா… நன்றாக வறுத்து சத்துமாவை தயாரிக்க வேண்டும்பா’ என, காலை உணவுக்கு எங்களுக்கு அம்மா தயாரித்துக் கொடுத்த சத்துமாவை முதல் வீடியோவாக யு டியூப் சேனலில் வெளியிட்டோம். வீடியோவைப் பார்த்து என்கொயரிகள் அம்மாவுக்கு தொடர்ந்து வரத்தொடங்கியது. வந்த அழைப்புகள் அனைத்துமே சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி என்றே இருந்தது. அதற்கு முன்புவரை அம்மாவின் தயாரிப்புகளை விற்பனையாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லைதான். எங்களின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தது அம்மாவின் சத்துமாவுதான்.
தொடர்ந்து சிறுதானியத்தில் பல்வேறு தயாரிப்பு உணவுகளை அம்மா செய்து காண்பிக்கத் தொடங்கினார். ஓட்ஸ், பார்லி, நட்ஸ், அக்ரூட், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, பூசணி விதை, சூரிய காந்தி விதை எல்லாம் சேர்த்து புரோட்டீன் பவுடர் தயாரித்துக் காண்பித்தார். முருங்கைக் கீரைப் பொடி, முளை கட்டிய சிறுதானிய மாவு உணவுகள் என வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டோம். அவர் சொல்லும் அத்தனை பொருட்களையும் எங்கிருந்து வாங்கி சேகரிப்பது என்பதே பலரின் கேள்வியாக கமென்ட் செக் ஷனில் இருந்தது.
உணவுப் பொருட்களைத் தொடர்ந்தே, குளிப்பதற்கான நலுங்கு மாவு பவுடர் தயாரிப்பு வீடியோவை அம்மா வெளியிட்டார். ஹெல்த்தி ஃபுட்டில் தொடங்கிய சேனல், மூலிகை குளியல், நலுங்கு மாவு என மாறியபோது, இந்த வீடியோ சரியாகப் போகுமா? என்கிற கேள்வி இருந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக பதிவேற்றிய மூன்றே நாளில் 1.5 மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளியது. இந்த வீடியோவுக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. மக்கள் இயற்கை மீது ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இந்த வீடியோ எங்களுக்கு உணர்த்தியது.
நலுங்க மாவைத் தொடர்ந்து, மூலிகை சீயக்காய் பவுடர், ஹோம் ஹேர் ஆயில் என சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக வெளியாகும் வீடியோக்களுக்கு வியூவர்ஸ் 1 முதல் 2 மில்லியனைத் தொட்டது. அம்மாவின் தயாரிப்பு வீடியோவை பார்ப்பவர்கள், இத்தனை பொருட்களை எங்கிருந்து நாங்கள் வாங்கி சேகரித்து நிழலில் உணர்த்தி அரைப்பது. எங்களால் இதெல்லாம் முடியாத காரியம் என்றனர். அதன் பிறகே இவற்றை செய்து காட்டுவதுடன், தயாரிக்க முடியாதவர்களுக்கு நானே தயாரித்துத் தருகிறேன். வாட்ஸ் ஆப்பில் நீங்கள் ஆர்டர் கொடுத்து என்னிடம் வாங்கிக் கொள்ளலாம் என அம்மா சொல்ல ஆரம்பித்தார். இது முழுக்க முழுக்க அம்மாவின் கான்செப்ட். அவரின் விருப்பத்திற்காக சரியென அவரின் தொடர்பு எண்ணை இறுதியில் போடத் தொடங்கினேன்.
எங்கள் தயாரிப்பில் எதுவுமே நோ சீக்ரெட். உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள் தயாரிப்பு சூட்சுமத்தை வெளியிட மாட்டார்கள். நாங்கள் விதிவிலக்காக எந்தெந்த பொருட்களை இணைத்து எப்படித் தயாரிப்பது என்கிற வீடியோவை ஒளிவு மறைவு இன்றி அப்படியே எங்கள் யு டியூப் சேனல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றுகிறோம். வருகிற ஆர்டர்களை தனி நபராக அம்மாவால் சமாளிக்க முடியவில்லை என்பதால் பெண்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கி இன்று அம்மாவின் கீழ் 5 பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் என மொத்தம் 9 பேர் வேலை செய்கிறார்கள். எனது மனைவியும் அம்மாவோடு இணைந்து, வாட்ஸ் ஆப்பில் வரும் ஆர்டர்களை சேகரிப்பது, வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்லும் வேலைகளை கவனிப்பது என செயல்படுகிறார்.
இதுவரை நலுங்கு மாவை மட்டும் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் வாங்கி பயனடைந்துள்ளார்கள். மற்ற உணவுப் பொருள் விற்பனையும் சேர்த்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நலுங்கு மாவை ஒருமுறை பயன்படுத்தியவர்கள் திரும்ப திரும்பக் கேட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நலுங்கு மாவில் சேர்க்கப்படும் பொடுதலை, முதியார் கூந்தல் என அரிதாகக் கிடைக்கு மூலிகை இலைகளை வாரச்சந்தையில் ஆர்டர் செய்து மொத்தமாகக் கொள்முதல் செய்கிறோம். இளம் நரை தடுப்பு எண்ணெயில் 14 மூலிகையும், முடி கொட்டுவதை தடுக்க 9 மூலிகையும் இணைக்கிறோம்.
எடை அதிகரிக்காமல் இருக்கவும், எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் முருங்கைப் பொடி, சத்துமாவு, கவுனி அரிசி மாவில் கஞ்சி, புரோட்டீன் பவுடர், புரோட்டீன் டிரிங்ஸ் என்று எங்களிடம் பலவிதமான உணவுப் பொருட்களும், சருமத்தைப் பாதுகாக்க நலுங்கு மாவு, மூலிகை சீயக்காய், முடி கொட்டுவது, இளம் நரையை தடுக்கும் ஹேர் ஆயில் எனவும் விற்பனைக்கு உள்ளது. நாங்கள் செயல்படுவது மதுரையில்.
ஆனால் சென்னை ரெட்ஹில்ஸ் தொடங்கி ஓஎம்ஆர் சாலை வரை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக ஆர்டர் தொடர்ந்து வருகிறது. எங்களின் தயாரிப்புக்காக காத்திருப்போர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று அதிகம். இலங்கை மற்றும் மலேசியா நாடுகளில் வாழும் தமிழர்களும் எங்களின் மூலிகை தயாரிப்பு நலுங்கு மாவை மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.
வாட்ஸ்ஆப்பில் ஆர்டர் கொடுப்பவர் களுக்கு, அவர்கள் கேட்கும் பொருட்களின் தயாரிப்பு லிங்கை இணைத்து, எப்படி இதனை பயன்படுத்த வேண்டும், விலை போன்றவற்றை செட்டாக அனுப்புவதுடன், ஆர்டர் உறுதியாகி கூகுள் பே செய்த ஐந்து நாளில் வாடிக்கையாளர் கரங்களில் ஆர்டர் கிடைக்கும்’’ என்கிறார் அப்துல்.
ஹெல்த்தி உணவை தேடித்தேடி சமைப்பேன்…
‘‘18 வயதில் எனக்கு திருமணம். என் வீட்டுக்காரர் வைத்திருந்த ஜவுளிக்கடைக்கு நானும் அவரோடு சென்று, பர்ச்சேஸ், சேல்ஸ் என எல்லாவற்றிலும் இணைந்து செயல்படுவேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ‘இது உனக்கு நல்லா இருக்கும்பா, இது ரொம்ப நல்லா உழைக்கும்பா, இந்த கலர் உனக்கு நல்லா எடுக்கும்பா’ என பேசிப் பேசி அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. அவர் இறந்து 10 ஆண்டுகள் கடந்துருச்சு. அவருக்கு பின்னும் தனியொருத்தியாக ஜவுளிக்கடையை நடத்திக்கொண்டுதான் இருந்தேன். அப்போதும் என்னிடம் 5 பேர் வரை கடையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் சின்ன மகனிடம் ஜவுளிக் கடையை ஒப்படைத்துவிட்டேன்.
யு டியூப் சேனல் பிரபலம் அடைந்த நேரம். இதில் நாம் என்ன செய்யலாம் என யோசித்தபோது, ’ஃபிட் அண்ட் ஃபுட்’ போடலாம் எனத் தோன்றியது. ஏனென்றால் ஹெல்த்தியான உணவுகளை தேடித்தேடி சமைப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஜவுளிக்கடையை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், பள்ளி கிளம்பும் என் குழந்தைகளுக்கு காலையில் சத்துமாவு உணவு தயாரிப்பது சுலபமாக இருந்தது. குழந்தைகளுக்கும் பிடிக்கும். இன்று எனது பேரக் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதேபோல் வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளித்தாலே உடலில் வித்தியாசம் நன்றாகத் தெரியும்.
கண்களும் குளிர்ச்சி பெறும். தூக்கம் நன்றாக வரும். என் அம்மாவும் சின்ன வயதில் இருந்தே நலுங்கு மாவு போட்டுக் குளிக்க என்னைப் பழக்கப்படுத்தி இருந்தார்.இதையெல்லாம் மனதில் வைத்து, சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் என் பெரிய மகனின் உதவியோடு இன்று வெற்றிகரமாக யு டியூப் சேனலை ஃபிட் அண்ட் ஃபுட் என்கிற பெயரில் நடத்தி வருகிறேன். என் தயாரிப்புகள் சேனல் மூலம் பிரபலமானதும், விற்பனையும் ஆன்லைன் வழியாக படு ஜோராக நடைபெறுகிறது…’’ என்கிறார் மும்தாஜ் அம்மா.