அரக்குப்பூச்சி வளர்ப்பில் பெண் விவசாயிகளுக்கு உதவும் வேளாண் விஞ்ஞானி! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 57 Second

ஈரோடு, பாலதொழுவு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு மீது ஏற்பட்ட ஆர்வம் காரணத்தால், விலங்கியல் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் ‘ஆய்வியல் நிறைஞர்’ மற்றும் முனைவர் பட்டமும் பெற்று, தற்போது கேரளாவில் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் ஆராய்ச்சியாளராக பணி ஆற்றி வருகிறார், டாக்டர் முத்துக்குமார். இந்த நிறுவனத்தின் பல திட்டங்களில் ஒரு திட்டமாக தமிழ்நாடு பெண் விவசாயிகளுக்கு பெரும் லாபம் தரும் அரக்குப்பூச்சி தயாரிப்பு பணியில் உதவி செய்து வருகிறார். அதன் துவக்கமாக தமிழ்நாட்டின் பெண் விவசாயி ஒருவருக்கு அரக்குப்பூச்சி வளர்ப்பு குறித்து சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லாமல் அவர் மூலமாக பல பெண் விவசாயிகள் பயன்பெற திட்டமிட்டு வருகிறார்.

*அரக்குப்பூச்சி வளர்ப்பு?

அரக்குப்பூச்சி (கொம்புருக்கி) என்று அழைக்கப்படும் ஒரு சில மில்லிமீட்டர் நீளமுள்ள பூச்சியில் இருந்து வெளியாகும் சுரப்பு அரக்கு சார்ந்த பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே விவசாயம் மிகவும் கடினமான பணி. அப்படியிருக்கும்போது இந்த புதுவித அரக்குப்பூச்சி விவசாயத்தைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பதில் பெரும் சவால்கள் உள்ளன. இதை எவ்வாறு பயிரிட்டு செடியில் படர விட வேண்டும். இவை வளர்வதற்கான பருவ நிலைகள், எந்த மாதிரியான மண்ணில் இவை வளரும் போன்ற பல கேள்விகளுக்கு என் ஆராய்ச்சி மூலம் முதன்மைப்படுத்தினேன்.

விவசாயிகள் குறுகிய பயிர்களை பயிர் செய்யத்தான் விரும்புவார்கள். அப்போது தான் லாபம் பார்க்க முடியும். அரக்குப்பூச்சி விவசாயம் குறைந்தது 4 முதல் 8 மாதங்கள் ஆகும். ஓம்புயிர் என்ற ஒரு வகை செடியில்தான் இந்த பூச்சிகள் வளரும். மேலும் இவை தானாக வளரக்கூடியது கிடையாது. அதை நாம் தனியாக வளர்த்து பிறகு செடியில் படர செய்ய வேண்டும். அதன் பிறகு பூச்சி மெதுவாக செடியில் படர செய்யும். அந்த செடியின் கிளைக் கொம்பில் அவை வளர்ந்ததும் அறுவடை செய்யலாம். ஒருமுறை ஒரு பூச்சி அந்த செடியினில் படர்ந்துவிட்டால், அவை வாழ்நாள் முழுதும் அந்த செடியில் ஒட்டுண்ணியாக வாழும்.

*அரக்குப்பூச்சி விவசாய நிலத்தில் பிற பயிர்களையும் விளைவிக்கலாமா?

அரக்குப்பூச்சி செடி வளர ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். அதுவரை விவசாயிகள் காத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரக்குப்பூச்சி பயிரிட்டு அவை வளர்வதற்குள் மற்ற பயிர்களான தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை போன்றவற்றை பயிர் செய்யலாம். இதனால் மற்ற பயிர்களுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது. இதன் மூலம் அரக்குப்பூச்சி வளரும் காலத்தில் மற்ற காய்கறிகள் மூலம் லாபத்தைப் பார்க்க முடியும்.

மேலும் அரக்குப்பூச்சி செடியினை ஒருமுறை நட்டுவிட்டால் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் வரை இதில் நீங்கள் லாபத்தைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். எட்டு ஆண்டுகள் வரை இந்தச் செடிகள் வளர்ந்து கொண்டே இருப்பதால், ஒரு தென்னை மரத்தை நடலாம். ஒரு தென்னை மரம் வளர 5 முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். இந்தச் செடிகளை முழுமையாக அறுவடை செய்த பிறகு அடுத்த அறுவடை காலம் வரை தென்னை மரம் உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும்.

*அரக்குப்பூச்சியின் பயன்?

அரக்குப்பூச்சியில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களில் மரத்திற்கு செய்யப்படும் வார்னிஷ், உதட்டுச்சாயம், கண் மை, கண் கண்ணாடி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியில் பயன்படுகிறது. மருத்துவத்துறையில் பல்தட்டம், வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்துறையில் மின்விளக்கு உற்பத்தியில் அடைப்பானாகவும், மின்தட்டுகளில் மேற்பூச்சு சாதனங்களிலும் உபயோகப்படுகிறது. இதன் மூலம் எடுக்கப்படும் மெழுகு, ஆப்பிள், சாக்லெட் மேற்பூச்சு செய்வதன் மூலம் அவை கெடாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.

யுனானி மருத்துவத்தில் அழற்சி, பித்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடல் பருமன் குறைத்தல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகள், மூட்டுவலி, முன்கூட்டியே விந்துதள்ளுதல், தொழுநோய், இருமல், ரத்தக்கசிவு, கை-கால் வலிப்பு, புண்கள், புழுத்தொல்லை மற்றும் நெஞ்சு படபடப்பு போன்ற நோய்களுக்கும் மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.

*பூச்சியில் இருந்து எவ்வாறு அரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

இந்த பூச்சிகள் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் மிகுந்த பசியோடு இருக்கும். அந்த சமயத்தில் உணவைத்தேடி அலையும். அப்போது இதனை செடியில் படரவிட்டால் அதுதான் தன் உணவு என்று அந்த செடியினை பிடித்துக் கொள்ளும். இதன் வாய் நீள வடிவில் இருக்கும். அதனால் செடியில் உள்ள நீரை மட்டுமே அருந்திக் கொண்டு உயிர்வாழும். இந்த பூச்சிகளுக்கும் எதிரிகள் உண்டு. அதில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும். இந்தப் பூச்சிக்கு கண், காது, கால், இறக்கை எதுவும் கிடையாது. உடம்பு மட்டுமே இருக்கும். அதில் சுவாசிக்கவும் கழிவுகளை வெளியேற்ற மட்டுமே இரண்டு துளைகள் இருக்கும். பூச்சிகள் தன்னை பாதுகாத்துக் கொள்ள அமைக்கும் அரண்களே அரக்குகள்.

*பூச்சியின் வாழ்வியல் முறை?

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம். பட்டுப்புழுவின் வளர்ச்சி நிலையை போலவே இது வளரும். இதில் ஆண் பூச்சிக்கு மட்டும் கண், வாயிருக்கும். பெண் பூச்சிக்கு பிறக்கும் போது ஆண் பூச்சி போல் உறுப்புகள் இருக்கும். ஆனால் அவை வளர வளர அழிந்துவிடும். ஆண் பூச்சியின் வேலை இனப்பெருக்கம் மட்டும். ஒரு ஆண் பூச்சி 40-50 பெண் பூச்சுடன் இனச்சேர்க்கை செய்யும்.

குஞ்சு பொரிஞ்சதும் அவை ஆணா, பெண்ணா என்று தெரிய நாற்பது நாட்கள் ஆகும். ஆண் நீள வடிவிலும், பெண் வட்ட வடிவிலும் இருக்கும். ஆண் அரக்கை மிகக்குறுகிய அளவுதான் உற்பத்தி செய்யும். பெண் தான் அரக்குகளை நிறைய உற்பத்தி செய்யும். இதன் வாழ்நாள் 6-8 மாதம் ஆகும். இந்த பூச்சியின் தன்மை பருவ நிலைக்கு ஏற்ப ஆண்- பெண் பூச்சியாக மாற்றிக்கொள்ளும்.

*அரக்குப்பூச்சியினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம்?

ஒரு ஏக்கருக்கு 3500 முதல் 4000 செடிகள் வரை வளர்க்கலாம். ஒரு கிலோ அரக்கு எடுக்க 10 முதல் 20 கிராம் வரை போதும். ஒரு மீட்டர் உயரமுள்ள செடிக்கு ஒரு கிராம் அளவுள்ள தாய்ப்பூச்சியினை கட்டி வைத்தால் அதிலிருந்து 100 முதல் 150 கிராம் வரை அரக்குகளை உற்பத்தி செய்யலாம். இந்தியாவில் குஷ்மி மற்றும் ரங்கினி என இரண்டு விதமான பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குஷ்மி ரக அரக்கு ஒரு கிலோவிற்கு ரூ.550 – 600, ரங்கினி ரூ.450 – 500 வரை இன்றைய மார்க்கெட்டில் விற்பனை யாகிறது. விவசாயிகள் ஒரு செடியில் குறைந்தது அரை கிலோ அரக்கு என்றால், 3000 செடிக்கு 1500 கிலோ அரக்கு உற்பத்தி செய்யலாம். முதலீடு போக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் லாபம் பார்க்கலாம்.

*எதிர்காலத் திட்டம்?

இதன் உற்பத்தியை பல மடங்கு பெருக்க வேண்டும். காரணம், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதைப் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை வளர்க்க குறைந்த செலவுதான் என்றாலும், முறையாக பராமரித்தால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன் மூலம் கண்டிப்பாக உயரும். நிலையான வருமானத்தைக் கொடுக்கும்.

இந்த பூச்சிகள் வளரக்கூடிய செடிகளை நாங்களே கொடுத்து, அதனை பராமரிக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் முதன் முறையாக கோபி அருகே உள்ள கொளப்பனூர் அருகே பெண் விவசாயி ஒருவரின் நிலத்தில் செடியில் வளர்த்து வருகிறோம். தற்போது முதல் அறுவடையும் முடிந்துவிட்டது. பல தமிழக பெண் விவசாயிகளுக்கு அரக்குப்பூச்சி வளர்ப்பை கற்றுக்கொடுத்து அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் எதிர்கால லட்சியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதயம் காப்போம்!! (மருத்துவம்)
Next post விவசாயத்தை தலைமுறை தலைமுறையாக பேணிக் காக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)