விவசாயத்தை தலைமுறை தலைமுறையாக பேணிக் காக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
பொதுவாக நாம் உண்ணும் பழங்களின் விதைகளையும், கொட்டைகளையும் சிலர் தூக்கி எறிவதும் உண்டு. சிலர் அதை செடி, மரமாக பராமரித்து அதன் மூலம் பலன் காண்பவர்களும் உண்டு. காய், பழம் போக அதிகபட்சமாக அந்த மரத்தின் இலையை கூட எவ்வாறு பயன்படுத்தலாம் என யோசிப்பவர்களும் உண்டு. அதுபோல தங்கள் தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்களை விற்பனை போக எஞ்சியதை வீணாக்காமல் எவ்வாறு பிறருக்கு பயன்படும் வகையில் கொடுக்கலாம் என்பதனை யோசித்து அதனை நடைமுறைப்படுத்தி வருவதோடு, வெளி நாடுகளில் உள்ள ‘‘pick your own fruits’’ என்ற முறையினை நம்ம ஊரில் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மக்களின் மனதிற்கு நல்ல தெரபியாகவும், மேலும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தங்களின் தோட்டத்தை கடந்த 25 வருடமாக ‘அருவி ஈகோ பார்ம்ஸ்’ எனும் பெயரில் நடத்தி வருகின்றனர் திருப்பூரை சேர்ந்த கலைச்செல்வி மற்றும் அவரின் குடும்பத்தினர்.
‘‘எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தது, ஆனால் எங்க அப்பா வேறு துறையில் தொழில் செய்து வந்தார். இருந்தாலும் அவருக்கு விவசாயம் மீது தனி ஈடுபாடு எப்போதும் உண்டு. அதனாலேயே அவருக்கு பிடித்த பல மரக்கன்றுகளை எல்லாம் வாங்கி வந்து எங்களின் சொந்தமான நிலத்தில் நட்டு வைப்பார். அவர்தான் அதனை பராமரித்தும் வந்தார். நாங்களும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்று அங்கேயே வேலையும் பார்த்து வந்தோம்.
அப்பாவுடைய ஒரே எண்ணம் எவ்வளவு படிச்சு, பெரிய வேலைக்கு போனாலும், பிற்காலத்தில் விவசாயம் செய்யணும் என்பது தான். அதன் பேரில் சில வருடங்களுக்கு பிறகு எங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும் போது எங்க அப்பா வைத்த மரங்கள் எல்லாம் அதோட விளைச்சலை துவங்கி இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான விளைச்சல் கொடுத்திருந்தது. அதை பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு கொடுத்து விற்கலாம்னு நாங்க எல்லாரும் முடிவு செய்ேதாம்.
என்தான் நாம ஒரு விஷயம் நினைத்தாலும் அதை செயல்படுத்தும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனவே வெளிநாடுகளில் கடைபிடிக்கும் ஒரு பழக்கத்தை அதாவது, மக்களையே அவர்களுக்கு தேவையான பழங்களை அவர்களே பறித்துக் கொள்ளுமாறு (pick your own fruit) சொன்னோம். இந்த யோசனையும் அப்பாதான் குடுத்தாரு. அவர்களும் ஆர்வத்துடன் வந்து பழங்களை பறித்து அதற்கேற்ற பணத்தை குடுத்துடுவாங்க. சாதாரண கடைகளில் விற்கும் பழங்களை விட எங்கள் தோட்டத்தில் பறிக்கும் பழங்களுக்கு அதிகபட்சமாக 50% விலையை குறைத்துதான் குடுப்போம்’’ என்ற கலைச்செல்வி, எவ்வாறு நெல்லிக்காய் மதிப்பு கூட்டலில் தங்களின் தரத்தை உயர்த்தினார் என்பதனையும் அதற்காக தாங்கள் பட்ட இன்னல்களையும் கூறுகிறார்.
‘‘சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு பழங்கள் விற்பனை ஆகாமல் இருக்கும். அதனை எப்படி விற்பது என எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இருந்தது. எவ்வளவுதான் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தாலும், அதிகபட்சமான பழங்கள் குறிப்பாக நெல்லிக்காய்கள்தான் வீணானது. இப்படியே வீணாக்குவது நல்லதல்ல, இதனை வேறு ஏதேனும் செய்யனும் என யோசிக்கும்போது தான் அதிக மதிப்புகூடிய பொருட்களாக மாற்றலாம் என தோன்றியது.
ஆனால் அதற்கான எந்த ஒரு ஆரம்ப புள்ளியும் தெரியாமல் இருந்த எங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள KVK (Krishi Vigyan Kendra) என்ற அமைப்பு விவசாயிகளின் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் வகையில் அமைந்துள்ளது. அங்கு உள்ள உணவு அறிவியல் ஆய்வாளர் கவிதா அவர்களை சந்தித்தோம். எங்களின் பிரச்னைகளை அவரிடம் கூறினோம்.
அவர் எங்களிடம் 1 கிலோ நெல்லிக்காயை துருவிக் கொண்டு வர சொன்னாங்க. பிறகு அதை எந்த முறையில் மதிப்புகூடிய பொருளாக மாற்றலாம் என நம்பிக்கை குடுத்தாங்க. அவங்களுடைய அறிவுரையின் பேரில் அங்கு இருந்த ட்ரையரில் நெல்லிக்காய்களை வைத்து அவர்கள் சொன்னது போல செய்தோம். பிறகுதான் எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அங்கு இருந்த ட்ரையரை வாடகை முறையில் பயன்படுத்தியே நெல்லிக்காய்களை பதப்படுத்தினோம். அது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
தேனி, பெரியகுளம் தோட்டக்கலை துறை மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இது போல நிறைய இடங்களுக்கு போய் அங்கு உள்ளவர்கள் மூலம் இந்த பழங்களை வேறு எந்த முறையில் உபயோகப்படுத்தலாம் என கற்றுக்கொண்டோம். அந்த இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் எங்கள் தோட்டத்திற்கு என ஒரு ட்ரயரை வாங்கினோம். எங்களின் இந்த மதிப்புகூடிய பொருட்களுக்கு நாங்கள் இரண்டு முக்கியமான விஷயங்களை கடைபிடித்து வருகிறோம். ஒன்று, பொருட்களை பதப்படுத்தும் போது அதில் எந்தவிதமான ரசாயனப் பொருட்களை சேர்க்காமல் இயற்கை முறையில் மட்டுமே பதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இரண்டாவது, வெள்ளை சர்க்கரை போன்ற ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பது. அவ்வாறு நாங்க தயாரித்த பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும், அதன் தரம் எந்த விதத்திலும் குறைவாக இருக்காது. நெல்லிக்காய்கள் உபயோகப்படுத்தி நாங்கள் முதலில் தயாரித்தது நெல்லிக்காய் மிட்டாய். சுத்தமான வெல்லம் மட்டுமே சேர்த்து இதனை தயார் செய்தோம். அடுத்து நெல்லிக்காயில் உப்பு, இஞ்சி, எலுமிச்சை என பல சுவைகளை பயன்படுத்தி பாக்கும் இல்லாமல், மிட்டாயும் இல்லாமல் ஒரு வகையான உணவுப் பொருளை உருவாக்கினோம். இதை சாப்பிட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அதிலிருக்கும் ஒவ்வொரு சுவையும் நம்முடைய நாவில் உணர முடியும்.
சிறியவர்கள் முதல் வயதானவர்கள் என அனைவரும் அதனை சாப்பிடலாம். நெல்லிக்காய் போக சப்போட்டா பழத்தினை உலர்த்தி விற்பனை செய்கிறோம். மேலும் நெல்லிக்காயில் டீ தூள், கொய்யா இலையில் டீ தூள் மற்றும் நெல்லி, முருங்கை கீரை பயன்படுத்தி சூப் மிக்ஸ் என பல வகைகளை தயாரித்து வருகிறோம். இவை அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. டீ தூள், சூப் மிக்ஸ் டிப் முறையில் மட்டுமில்லாமல் கிராம் கணக்கிலும் கிடைக்கும்.
மக்களுக்கும் எங்களுடைய தயாரிப்புகள் பிடித்து போக அவர்களிடையே எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. தற்போது நாவல் பழம் அதிகம் கிடைக்கும் காலம் என்பதால், அதன் விதைகளை பயன்படுத்தி பொடி செய்து புது வகை தேநீர் ஒன்று தயாரிக்கிறோம். அதில் வேறு தயாரிப்புகளை கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவர், இயற்கை உரங்களை மட்டுமே தன்னுடைய பழத்தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.
‘‘இதுவரை நாங்க ரசாயனம் கலந்த எந்த ஒரு உரங்களையும் எங்களின் செடிகளுக்கு தெளித்தது கிடையாது. மாடு மற்றும் ஆட்டின் சாணம் என இயற்கை உரங்களைதான் பயன்படுத்துகிறோம். மேலும், மரங்களில் இருந்து விழும் இலை, குச்சிகள் என அனைத்தும் சேகரித்து குழி போன்ற அமைப்பை உருவாக்கி அதில் போட்டு மூடி வைப்போம். அது மழை நீரை எளிதாக பூமிக்குள் செல்ல உதவும்.
மதிப்பு கூட்டல் தயாரிப்புகள், பழங்களை பராமரிப்பது, விற்பனை செய்வது என அனைத்தையும் நானும் என் குடும்பத்தினரும்தான் பார்த்துக் ெகாள்கிறோம். எங்கள் தலைமுறை மட்டும் இல்லாமல் இது அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டும் என்பதால், எங்களின் பசங்களையும் நாங்க விவசாயத்தில் ஈடுபடுத்தி வருகிறோம். விடுமுறை காலங்களில் அவர்கள்தான் தோட்டத்தினை பராமரித்துக் கொள்கிறார்கள்’’ என்று பெருமையுடன் பதிலளித்தார்.