வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
பணமில்லாத பரிவர்த்தனைகள் உலகெங்கும் பெருமளவில் நடைபெறும்போது விவசாயிகள் வங்கிக்கு ஒவ்வொரு முறையும் சென்று தங்களின் தொழிலுக்கும், சுய சேவைகளுக்கும் பணம் பெற்றுவரும் சூழ்நிலை தொடர வேண்டுமா? நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள், விற்பனையாளர்கள் பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாறி வருகிறார்கள்.
அப்படி இருக்கும் போது விவசாயிகள் தங்களது வேளாண் தேவைகளுக்கு வங்கியில் கடனாகப் பெறும் தொகையை தங்களின் தனிநபர் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு அந்தக்கணக்கின் அட்டை மூலமே செலவிட வேண்டுமா ? விவசாயிகள் தங்களின் வேளாண் கடன் தொகையை பணமில்லாத பரிவர்த்தனையாக செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி கிசான் கிரெடிட் கார்டு – விவசாயி கடன் அட்டை திட்டத்தை 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் விவசாயிகளின் தேவைக்கேற்ப பயனளிக்கவும், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்பவும் அவ்வப்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு
இந்த திட்டத்தினை வர்த்தகம், சிறுநிதி மற்றும் கூட்டுறவு வங்கிகள் அறிமுகப்படுத்தி செயல்படுத்துகின்றன. விவசாயிகள் இதன் மூலம் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், ஆகியவற்றை வாங்கலாம். முதலீடு கடன் தேவைகள் மற்றும் பண்ணைசாரா பணத்தேவைகளுக்காகவும் இந்த கார்டு பயன்படுகிறது. பயிர்கள் சாகுபடி செய்ய குறுகிய காலக்கடன் மற்றும் அறுவடைக்குப்பின் நேரக்கூடிய செலவுகளுக்கான தொகையும் கணக்கிட்டு இந்த அட்டையில் வரவு வைக்கப்படும்.
இதனைப் பயன்படுத்தி விவசாயி பணம் செலுத்தி தேவையானவற்றை பெறமுடியும். விளைபொருட்களை சந்தைப்படுத்த ஆகும் செலவு மற்றும் வீட்டின் செலவுகளுக்காக பணத்தேவையும் விவசாயி பெறமுடியும். அட்டையின் மூலம் விவசாயி பெற்ற பணத்தை வங்கியில் திருப்பிச் செலுத்தவேண்டிய கால அளவு வங்கியின் கடன் அனுமதிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கிசான் கிரெடிட் கார்டு பெற தகுதிகள்
* விண்ணப்பிப்பவர்களின் பெயர் வாராக்கடன் பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
* சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளவர்கள்
* குத்தகை ஒப்பந்தம் மூலம் மற்றவரின் நிலத்தை பயிரிடுபவர்கள்
* கூட்டு சாகுபடியாளர்கள்
* சுய உதவிக்குழுக்கள்
* கூட்டாகப் பொறுப்பேற்கும் குழுக்கள்
கடன் வரம்பு
குறு விவசாயிகள் தவிர அனைத்து விவசாயிகளுக்கு முதல் ஆண்டிற்கு : ஒரு ஆண்டில் ஒரு பயிர் பயிரிடுவதற்கு உரிய பயிர் நிதி அளவீடு X சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பளவு + வரம்பில் 10% – அறுவடைக்கு பிந்தைய / வீட்டுத்தேவை / நுகர்வுக்கான தேவை + வரம்பில் 20% – விவசாய சொத்துக்களின் பராமரிப்பு செலவுக்காக + பயிர்க்காப்பீடு அல்லது விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் சொத்துக் காப்பீடு ஆகிய அனைத்துக்குமான மதிப்பீட்டுத்தொகை கடன் வரம்புத் தொகையாகும்.
* இரண்டாவது மற்றும் அதற்கடுத்த ஆண்டிற்கு முதலாம் ஆண்டு பயிர் சாகுபடிக்காக மேற்குறிப்பிட்டபடி கணக்கிடப்பட்ட வரம்பு + வரம்பில் 10% அதிகரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10% கடன் தொகை அதிகரிக்கப்படும். சாகுபடி செலவிற்காக / பின்வரும் ஒவ்வொரு ஆண்டும் (2, 3, 4, 5-ம் ஆண்டுகள்) 10% உயர்த்தி வழங்கப்படும். பயிர் நிதி அளவீட்டுக்காக மற்றும் கிசான் கிரெடிட் கார்டின் மதிப்புக் காலத்திற்கென திட்டமிடப்பட்ட கடன் தொகையை வங்கி தீர்மானித்து வழங்கும்.
* முதலாண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் சாகுபடி செய்ய முதலாமாண்டில் மேலே குறிப்பிட்டுள்ளபடியே சாகுபடி செய்யப்படும் பயிர்களின் வகைக்கேற்ப, வரம்பு நிர்ணயிக்கப்படும். அந்த வரம்புடன் கூடுதலாக 10% ஒவ்வொரு ஆண்டும் கடன் தொகை அதிகரிக்கப்படும். பயிர் நிதி அளவீட்டுக்காக. விவசாயிகள் அடுத்த 4 வருடங்களுக்கு அதே பயிர் சாகுபடி முறையை மேற்கொள்வதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை விவசாயி அடுத்த ஆண்டில் பயிரிடும் முறையை மாற்றினால், கடன் வரம்பும் மாறுபடும்.
குறுகிய கால பணக்கடனில் பணம் எடுக்கும் வரம்பு, பயிரிடும் முறையை பொறுத்து நிர்ணயிக்கப்படும். பயிர் உற்பத்தி, பண்ணைச் சொத்துக்கள் பழுது மற்றும் பராமரிப்பு, நுகர்வு ஆகியவற்றிற்கான தொகையை விவசாயி தன் வசதிக்கேற்ப எடுப்பதற்கு அனுமதிக்கப்படும். பொதுவாக 5 ஆண்டிற்கான வரம்பை நிர்ணயிக்கும்போது, தோராயமாக 10% உயர்த்தப்படும். ஒருவேளை மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு, ஒரு ஆண்டில், பயிர் நிதி அளவீட்டினை இதைவிடவும் அதிகமான அளவில் உயர்த்தித் திருத்தியமைத்தால், பணம் எடுக்கும் வரம்பு மாற்றியமைக்கப்படும். இவை அனைத்தும் வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு பெற்றவருக்குத் தெரிவிக்கப்படும்.
* முதலீட்டிற்கான காலக் கடன்விவசாயத்திற்குத் தேவையான இயந்திர சாதனங்கள், உபகரணங்கள், நிலச்சீரமைப்பு, நீர்பாசனவசதி, சிறுபாசன வசதி, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காக காலக் கடன் வழங்கப்படுகிறது. முதலீட்டுக்கு கடன் வரம்பைத் தீர்மானிக்கும்போது வங்கிகள் விவசாயியின் மொத்த முதலீட்டு செலவு, முன்பணமாக விவசாயியால் செலுத்தக்கூடிய தொகை, வரும் காலங்களில் விளைச்சல் பெருக்கத்தின் மூலம் விவசாயிக்குக் கிடைக்கக்கூடிய உயர்வருவாய், நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் அவற்றுக்குச் செலுத்தவேண்டிய தவணைத்தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு விவசாயிக்கு கடன்பெறத் தகுதி இருப்பின் அதன்படி காலக்கடன் வங்கியால் அனுமதிக்கப்படுகிறது.
குறுகிய காலக்கடன் வரம்பு மற்றும் நீண்டகாலக்கடன் வரம்பு ஆகிய இரண்டையும் சேர்த்து கிசான் கிரெடிட் கார்டுக்கான தொகை வரம்பு வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு கடன்தொகையை நிர்ணயித்து அனுமதித்த பிறகு வங்கி விண்ணப்பதாரருக்கு கடிதம் மூலம் தெரிவித்து ஒப்புதல் பெறுகிறது. குறுகிய மற்றும் நீண்டகாலக் கடனுக்காக வங்கியால் உப வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு விவசாயிக்கு வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு கால அளவில் கடன் வரம்பு குறுகிய மற்றும் நீண்டகால பணத்தேவைக்கேற்ப மாறுபடும் என்பதால் அதற்குரிய அட்டவணை விவசாயிக்கு வழங்கப்படுகிறது. விவசாயி அட்டவணையில் தெரிவித்துள்ளபடி கடன் தொகையை வரம்புக்குள் வைத்து வரம்பைவிடக் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட தொகையை வங்கியில் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்
தற்சமயம் ரூ.3 லட்சம் வரையுள்ள குறுகியகாலப் பயிர்க் கடன்கள் இந்திய அரசாங்கத்தின் வட்டிக் குறைப்புத் திட்டம் / காலத்தில் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து வங்கியில் திருப்பிச் செலுத்தினால் விவசாயிக்குக் கிடைக்கும் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் உள்ளன. மேலும், கடனைத் திருப்பித் தருவதற்கான அட்டவணை மற்றும் கட்டளைகள், குறுகிய காலக்கடனுக்கும் நீண்ட காலக்கடனுக்கும் வேறுபடுகின்றன. அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் வங்கியின் கடன் அனுமதிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
குறு விவசாயிகளுக்காக சொந்தமான நில அளவு, பயிரிடும் பயிர்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரூ.10,000-லிருந்து ரூ.50,000 வரை வரம்புடன் கூடிய நெகிழ்வுத் தன்மையுடைய கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அறுவடைக்கும் பிந்தைய கிடங்கு சேமிப்பு தொடர்பான கடன் தேவை, மற்றும் பிற பண்ணை செலவுகள், நுகர்வு தேவை, சிறு பால்பண்ணை / வீட்டுக் கோழிப் பண்ணை, பண்ணை உபகரணங்கள் கொள்முதல், ஆகியவற்றிற்கு நிலத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் வங்கிக் கிளை மேலாளரின் மதிப்பீட்டின்படி இந்த கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதே அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான ஒட்டுமொத்தக் கடன் அட்டை வரம்பு நிர்ணயிக்கப்படும்.
கிரெடிட் கார்டு பயன்பாடும் பணம் வழங்குவதும் கிசான் கிரெடிட் கார்டு வரம்பில் குறுகியகாலக் கடன் பகுதிக்குரிய வரம்பு என்பது சுழற்சிப் பணக்கடன் வசதி தன்மையைக் கொண்டுள்ளது. பற்றுகள் மற்றும் வரவுகளின் எண்ணிக்கைக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நடப்பு காலத்திற்கான பணம் எடுக்கும் வரம்பிற்குள் கிளை வழியாகவோ, காசோலையைப் பயன்படுத்தியோ, ஏடிஎம் / டெபிட் கார்டு மூலமாகவோ, வங்கி வர்த்தக முகவர்கள் மற்றும் வங்கி முகப்புகள் வழியாகவோ, வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்கள் உள்ள விற்பனை மையங்கள் மூலமாகவோ, IMPS / IVR உடன் கூடிய கைபேசி வங்கியியல் கிசான் கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்ட தொகையை கார்டு அனுமதி பெற்றவர் பயன்படுத்தலாம். முதலீட்டு நோக்கங்களுக்காக நீண்ட கால கடன்கள் நிர்ணயிக்கப்பட்ட தவணைகளில் எடுக்கப்படலாம்.
மின்னணு கிசான் கிரெடிட் கார்டு
கிசான் கிரெடிட் கார்டுகள் ஸ்மார்ட் அட்டைகளாகவோ பற்று அட்டைகளாகவோ வழங்கப்படுகின்றன. குறுகிய கால கடன் வரம்பு மற்றும் நீண்டகாலக் கடன் வரம்பு என்ற இரு வேறு
கூறுகள் அடங்கியுள்ளதாலும், அவற்றுக்கான கடன் தொகையின் உச்சவரம்பும் கால அளவீடுகளும் வேறுபடும் என்பதாலும் அவற்றிற்கேற்றவாறு மென்பொருள் கொண்ட மின்னணு கிசான் கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டு மென இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
கிசான் கிரெடிட் அட்டை செல்லுபடியாகும் காலம்அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை அந்தந்த வங்கியே தீர்மானிக்கும். பயிர் சாகுபடியின் நிலப்பரப்பு / பயிர் வகை மற்றும் கடனாளியின் செயல்பாடு இவற்றைப் பொறுத்து அட்டையின் கடன் தொகை வரம்பும் காலமும் தெரியப்படுத்தப்படும். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, கடன் சீரமைப்பு வசதி வங்கியால் அளிக்கப்படுகிறது. விவசாயியின் கடன் கணக்கின் செயல்பாடு வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை வங்கி கண்காணித்து அட்டையின் கால நீட்டிப்பு அல்லது புதுப்பித்தலை வங்கி முடிவு செயகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்
எந்தப் பயிருக்காகக் கடன் வழங்கப்பட்டதோ அதற்கான உத்தேச அறுவடைக் காலம் மற்றும் சந்தைப்படுத்தும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தீர்மானிக்கப்படுகிறது. முதலீட்டுக் கடனைப் பொறுத்தவரை, எந்த நடவடிக்கை / முதலீட்டிற்காக காலக் கடன் வழங்கப்பட்டதோ, அவை நடப்பிலுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பொதுவாக 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
கடனுக்காக அடமானம்
விளிம்புத் தொகை அந்தந்த வங்கியால் தீர்மானிக்கப்படுகிறது. பயிரிடப்படும் விளை பயிர் முதன்மைப் பிணையமாக வங்கியின் உரிமையில் இருக்கும். கடன் வரம்புத் தொகை அதிகமானால் விவசாயியின் பெயரிலுள்ள சொத்தினை வங்கியில் அடமானமாக வைக்கவேண்டும். குறுகிய மற்றும் நீண்டகாலக் கடனுக்காக வங்கியால் உப வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு விவசாயிக்கு வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிடப்படுகிறது.
மூன்றாம் நபரின் சொத்து அடமானமாக வைக்கப்பட்டால் சொத்தின் உரிமையாளர் பொறுப்புறுதி ஆவண ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். இரண்டாம் ஆண்டு அல்லது அதன்பிறகு கடன் தொகை உயர்த்தப்பட்டு அவற்றிற்குக் கூடுதலான பிணையம் தேவைப்படுகிறதோ அப்பொழுது வங்கிகள் அவற்றின் கடன் திட்டப்படி இணைப் பிணையம் பெறலாம். கடன்தொகை ரூ.3 லட்சம்வரை இணைப் பிணையம் தேவையில்லை. சில மாநிலங்களில் இணையத்தின் மூலம் நிலப்பதிவு அலுவலகங்களில் நில அடமானம் பதிவு செய்ய வசதிகள் உள்ளன. அடமானப் பதிவிற்கான கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்.
அட்டைகள் வெளியிடுதல்
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டை / பற்று அட்டை வழங்கப்படுகிறது. விவசாயி பற்றிய அடையாள விவரங்கள், சொத்து, நிலப்பரப்பு மற்றும் கடன் விவரங்கள் போதுமான அளவில் அட்டையில் பதிவு செய்யப்படும். காந்தப்பட்டையுடைய தனிநபர் அடையாள எண்ணுடன் பன்னாட்டு தர நிறுவனங்கள் அளிக்கும் பன்னாட்டு அடையாள எண்ணுடன் கூடிய அட்டை என்பதால் அனைத்து ஏடிஎம்-கள், மைக்ரோ ஏடிஎம்களில் இவற்றை பயன்படுத்த முடியும்.
சில வங்கிகள் ஆதார் அடையாள எண்ணை பையோமெட்ரிக் அங்கீகாரமாகப் பயன்படுத்தி காந்தப்பட்டையுடன் PIN மற்றும் ISO IIN-ஐ இணைத்து அளித்து ஆதார் அடையாளமும் பயன்படுத்தம்படி அட்டையை வெளியிடுகின்றன. வங்கிகள், EMV மற்றும் RUPAY உபயோகத்திற்கு ஏற்ற சிப் அட்டைகளாக, காந்தப்பட்டை மற்றும் PIN, ISO IIN உடன் வெளியிடும் வசதியும் உள்ளது. கொள்முதல் முகமைகளுடன் பரிவர்த்தனை நிகழ்த்துவதோடு அவர்களின் விளைபொருட்களைச் சந்தைகளில் விற்பனை செய்கையில் விற்ற தொகையை வரவு வைக்கவும் இந்த அட்டைகளை பயன்படுத்த முடியும்.
நிபந்தனைகள்
* கட்டாயமாக்கப்பட்ட பயிர் காப்பீடு தவிரவும், கடன் அட்டைதாரர் ஏதாவதொரு சொத்து, விபத்து, மருத்துவ காப்பீடு வசதிகளை பெறுவதற்கான வாய்ப்பினை அளித்து, அவற்றுக்
குரிய பிரீமியம் தொகையை கிசான் கிரெடிட் கார்டு கணக்கு மூலமாகவே செலுத்தலாம். திட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப காப்பீட்டுப் பிரீமியத் தொகையினை விவசாயி செலுத்தவேண்டும்.
* பரிசீலனைக் கட்டணம், ஆய்வுக்கான செலவுகள் மற்றும் இதர கட்டணங்கள் வங்கியால் தீர்மானிக்கப்பட்டு விண்ணப்பதாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.
* கைபேசி பயன்பாடு அடிப்படையிலான பரிவர்த்தனைகள் கிசான் கிரெடிட் அட்டையின்மூலம் செய்யும்போது அவை பாதுகாப்பாக இருக்க பயன்படுத்துவோருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒருமுறை பயன்படுத்தும்படியான எண்களை அனுப்பி அங்கீகரித்தல் ஆகியவற்றை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கென வங்கிகள் வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுக் கல்வியை வழங்குகின்றன.
வங்கிகள், குரல் வழி கேட்டு பதில் தரும் வசதி, மின்னஞ்சல் அடிப்படையிலான வங்கி வசதி, அடையாளக் குறியீட்டு எண்ணை சரிபார்க்க வங்கியிடமிருந்து அழைப்பு பெறும் வசதி ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பாக கைபேசியின் வழி குறுஞ்செய்தி அடிப்படையிலான கிசான் கிரெடிட் கார்டு பயன்பாட்டு வசதியை அட்டைதாரர்களுக்கு வழங்குகின்றன.