மலிவான மீன் என்றாலும் அதன் மதிப்பு அதிகம்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 5 Second

உலகம் முழுவதுமே அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு மீன். உணவுகளில் கடல் உணவுகளுக்கு என்று தனி சுவை மற்றும் மணம் உண்டு. தினமும் மீனவர்கள் கடலுக்குள் சென்று பல வகையான மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கிறார்கள். மீன்களை பொதுவாக குழம்பு, பொரித்து, புட்டு அல்லது கருவாடு என பல விதமாக சமைத்து சாப்பிடலாம். அதிலும் எந்தெந்த மீன்களை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரியாது. மீன்களை எவ்வாறு சமைக்கலாம்… அதில் உள்ள வகைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பொதுவாக மீன் உணவுகளை நிறைய மசாலா சேர்த்துதான் சமைக்கிறோம். குழம்பு, வறுவல் எதுவாக இருந்தாலும் அதில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவைதான் அதிகமாக இருக்கிறதே தவிர மீனுடைய அசல் சுவை நமக்கு தெரியாமலே போய்விடுகிறது. மீன்களை சிறு மீன்கள், பரு மீன்கள் என இரு வகையாக பிரிக்கலாம். மீன் பிடிப்பதிலும் மூன்று முறை உள்ளது. ஆழ்கடல், கரைவலை மற்றும் தூண்டில். ஆழ்கடல் மீன் பிடித்தல், 10 நாட்களுக்கும் மேல் நடக்கும்.

கடலில் தங்கியிருந்து பிடிக்கும் மீன்களை ஐஸ்கட்டிகளில் போட்டு பதப்படுத்தி கரைக்கு கொண்டு வருவார்கள். ஐஸ்கட்டிகளில் வைக்கப்படும் மீன்களில் சுவை குறைந்து விடும். சுவை மாறாமல் இருக்க மீனை பிடித்தவுடனேயே சாப்பிட வேண்டும். அப்படிப்பட்ட ஃப்ரெஷ் மீன்கள் தூண்டில் மற்றும் கரைவலையில் கிடைக்கும். கரைவலை, கரையிலிருந்து கடலின் ஒரு பகுதி வரை சென்று வலையை வீசுவார்கள். சில மணி நேரம் கழித்து, கரையிலிருந்து கூட்டாக சேர்ந்து வலையை இழுப்பார்கள். வலை கரைக்கு வந்த அடுத்த நிமிடமே அதனை வியாபாரம் செய்திடுவார்கள். இவை ஃப்ரெஷ்ஷாக இருப்பதால் சுவையும் நன்றாக இருக்கும்.

இது போலவேதான் தூண்டில் மீன்களும். தூண்டிலில் பிடிக்கக்கூடிய மீன்கள் பெரும்பாலும் பரு மீன்களாகவே இருக்கும். அதாவது, இதன் எடை மட்டுமில்லை, விலையும் அதற்கு ஏற்ப மாறுபடும். வஞ்சிரம், பாறை, கோலா, தடியன், சூரை போன்ற மீன்கள் பெரும்பாலும் தூண்டிலில் பிடிக்கக்கூடிய மீன்கள். சில நேரம் பால் சுறா மீன்களையும் கூட தூண்டிலில் பிடிப்பார்கள். அவ்வாறு பிடிக்கக்கூடிய மீன்கள் 5 கிலோவுக்கு மேலே இருக்கும்.

கடற்கரையோரம் இருக்கக்கூடிய கிராமங்களில் பெரும்பாலும் கரைவலை மீன்பிடி தொழில் அதிகமாக இருக்கும். அவ்வாறு வலையில் சிக்கக்கூடிய மீன்களின் அளவை பொறுத்து அதன் சுவை மற்றும் விலையும் மாறுபடும். சில இடங்களில் ஒரே மீனுக்கு அதன் அளவை வைத்து பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு அவுளி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தால் சுண்டு என்றும், அதுவே கொஞ்சம் பெரியதாக வளர்ந்தால் அவுளி என்றும், ஒரு கிலோவுக்கு மேல் என்றால் காளை என்றும் அழைக்கிறார்கள். அவுளி மீன் கருப்பாக இருந்தால் அதனை மடவா என்று கூறுகிறார்கள். ஊழி மீனும் அதே மாதிரி, அளவை பொறுத்து பென்சில், ஊழி, ஊழா, தடியன் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

சிலர் வஞ்சிரம் மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அதில் நடு முள் மட்டுமே இருக்கும். ஆனால் பொடி மீன்களில் முட்கள் அதிகமாக காணப்படும். பெரும்பாலான பொடி மீன்களை குழும்பு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். முள் உள்ள மீன்கள் முள் இல்லாத மீன்கள் என இரு வகைகள் இருக்கிறது. முள் உள்ள மீன்கள்தான் குழம்பு வகைகள் செய்வதற்கு ஏற்றது.

குறிப்பாக வாலை மீன். இதனை நீளமான துண்டுகளாக வெட்டினால்தான் முள்ளை எளிதாக எடுத்துவிட்டு சாப்பிட முடியும். குழந்தைகளுக்கு முள்களை எடுத்துவிட்டு சாப்பிட தெரியாது. அதே நேரம் அவர்களுக்கான சத்தும் கிடைக்க வேண்டும். அதில் கிழங்கா, நெத்திலி, வவ்வால், சீலா, விலாமீன், வஞ்சிரம் போன்ற மீன்கள் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றவை. அதே போல பெண்களின் உடல் வலுவிற்கும், தாய்மார்கள் சாப்பிடுவதற்கும் உகந்தது, காரல் மற்றும் பால் சுறா. திருக்கை மீனும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது. உடுப்பாத்தி மீன், நம்மூர் மாசிக் கருவாட்டை போல் காய வைத்து கருவாடாக சாப்பிடலாம். புரதங்களும் ஏகப்பட்ட விட்டமின்களும் உள்ள மீன்.

டூனா ஃபிஷ், நமது கடலில் இருக்கும் சூரை மீன். உலக மீன் வர்த்தகத்தில் நம்பர் ஒன் இடம் கொண்ட மீன். இந்த மீன் எந்த அளவு சுவையானதோ அதே அளவு சமைப்பதில் சவாலான மீனும் கூட. மற்ற மீன்களை போல தவாவில் வறுத்தாலோ, குழம்பு வைத்தாலோ நன்றாக இருக்காது. இதனை சுத்தம் செய்வதே சவாலான வேலை. இதனை கோழிக்கறி வைப்பது போல் கிரேவி செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும். இதனை முயல் பாறை, முசங்கு பாறை, மொசப்பாறை என்றும் அழைப்பார்கள். இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஆழ்கடலில் வசிக்கும் இந்த வகை மீன் அதிக அளவில் வலையில் சிக்காது. அப்படியே சிக்கினாலும் மீனவர்களே தங்களின் வீட்டில் சமைக்க எடுத்துக் கொள்வார்கள்.

காரணம், மீன் வகைகளிலேயே மிகவும் சுவையான மீன். இதன் எலும்புகளும் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் அப்படியே அதனை கடித்தும் சாப்பிடுவார்கள். குழம்பு, வறுவல் இரண்டுமே செய்யலாம். தென் கடல்களில் அதிகமாக பிடிக்கக்கூடிய மீன்களில் முதன்மையானது கட்டா. இந்த மீன் கடலுக்குள் கூட்டமாக வசிப்பதால், அப்படியே கூட்டமாக வலையில் சிக்கிக் கொள்ளும். இந்த மீன் கருவாடு செய்ய மட்டுமே ஏற்றது. தமிழகத்தில் இருந்து கேரளா, கோவா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரியதாக கிடைக்கக் கூடிய மீன் காரா மீன். சிறு மீன் வகைகளில் மிகவும் சுவையானது.

சுறாக்களில் பட்டை சுறா, பறவை சுறா, கொம்பு சுறா என பல வகையுண்டு. அதில் மிகவும் சுவையானது தாழம் சுறா. குரங்கு சுறா, மிகமிக அரிதாகக் கிடைக்கக்கூடியது. விலையை பொறுத்தவரை மற்ற மீன்களைவிட சுறா மீன்களின் விலை குறைவு. சந்தையில் மீனைப் பற்றி அறியாதவர்களுக்கு மலிவானதற்கு மதிப்பு இருக்காது. ஆனால் அதன் மகத்துவம் அறிந்தவர்கள், பார்த்தவுடன் வாங்கிச் சென்று விடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 30 வருட தாபா! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)