செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
* அதிர்ச்சி
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட கையில் மொபைலோடுதான் போகிறார்கள். மொபைல், கிட்டத்தட்ட ஆறாவது விரல் ஆகிவிட்டது. மொபைலைக் காணவில்லை என்றால் இவர்களை பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளும் ஸ்மார்ட்போன், மனிதனின் பாலியல் வாழ்க்கையையே அழித்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலைச் சொல்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு.
ஸ்மார்ட்போன் காரணமாக பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக 60 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் செல்போன், ஆரோக்கியத்தை சீரழிப்பதாக ஆய்வுகள் பல எச்சரித்திருந்தாலும், தற்போது இவை மக்களின் பாலியல் வாழ்க்கையையும் அழித்து வருவதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
சர்வதேச பல்கலைக்கழக மருத்துவமனையின் பாலியல் சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் காரணமாக தங்கள் பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.இந்த ஆய்வின் அறிக்கையின்படி, பங்கேற்றவர்களின் பாலியல் செயல்பாட்டை சோதித்ததில், பங்கேற்பாளர்கள் 600 பேரும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தனர். அவர்களில் 92 சதவீதம் பேர் இரவில் அவற்றைப் பயன்படுத்துவதை கூறியுள்ளனர்.
இவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே, தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் போட்டு தங்கள் படுக்கையறைகளில் வைக்கின்றனர். இவர்களில் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடத்தில் ஸ்மார்ட்போன்கள் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் தங்களது பாலியல் செயல்பாட்டை தொந்தரவு செய்ததாகவும் கூறுகின்றனர்.
நேர்முகத் தேர்வாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் தங்களது மொபைல் பயன்பாட்டுக்கு ஒதுக்கும் நேரத்தைவிட, பாலியல் வாழ்க்கைக்கு ஒதுக்கும் நேரம் மிகமிகக் குறைவு என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய இன்னோர் சர்வேயின் அடிப்படையில், இளைய தலைமுறையினரில் 17 சதவீதம் பேர் தங்களது செக்ஸ் செயல்பாட்டுக்கு நடுவிலும் கூட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
ஏறக்குறைய முக்கால்வாசிப்பேர் இரவு தூங்கும்போது தலையணைக்கடியிலோ அல்லது படுக்கைக்கு பக்கத்திலோ தங்களது செல்போன்களை வைத்துக் கொண்டுதான் தூங்குகிறார்கள். அப்படி செல்போன் தங்களுக்கு அருகில் இல்லாவிட்டால், தங்களுக்கு ஒருவித பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்வதோடு தங்களது வாழ்க்கையில் ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதியும் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். துணையைக்காட்டிலும், ஸ்மார்ட்போன்கள் தங்களை கவர்வதாகவும் சொல்கிறார்கள்.இதில் இருக்கும் ஒரே ஆறுதலான, மகிழ்ச்சியான செய்தி… செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டால் தங்கள் பாலியல் செயல்பாடு உற்சாகமாக இருப்பதையும் பலர் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது மட்டுமே!