ங போல் வளை- யோகம் அறிவோம்!(மருத்துவம்)
மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி ஜெருசலத்தில் அவருடைய கல்லூரிக்கு அருகில் யோகம் பயிலச் செல்கிறார். அங்கிருந்த யோக ஆசிரியர் யோக மரபின் பெருமைகளைப் பேசி, இது அனைத்தும் நம்முடைய மதத்திலிருந்து வந்தது. யூத மதம்தான் யோகத்தை உலகுக்கு வழங்கியது என்று யோகத்தின் உலகளாவிய பெருமதிப்பைத் தன் மத அல்லது நாட்டின் பெருமையாக அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதன் பின் நான் அந்த யோக மையத்துக்குச் செல்வதே இல்லை என யுவால் குறிப்பிடுகிறார்.
இப்படித்தான் பெருமதிப்பு மிக்க விஷயங்களையும் புனிதமாகவும், பெரும்பான்மைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களையும், மனிதர்கள் தங்களோடும் தங்கள் இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு. அதே போல எங்கள் முன்னோர்கள் என்கிற பெயரில் பத்தாயிரம் வருடம், இருபதாயிரம் வருடம் எனக் காலத்தால் பின்னோக்கி சொல்வதைப் பெருமை என கருத்துவதுமுண்டு. இதில் பெரும்பாலும் ஆதாரமற்ற தரவுகளே நிறைந்திருக்கும்.
அப்படித்தான் யோகாவிலும் தவறான அல்லது ஆதாரமற்ற தகவல்களும் புனிதப்படுத்தல்களும் நிறைந்திருப்பதைக் காண முடியும். இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இது போன்ற போலித் தகவல்கள் மற்றும் போலிப் புனிதங்களால் யோகத்தின் உண்மையான பலன்களும் மேன்மைகளும் வெளியே தெரிய முடியாமல் போய்விடும். மேலும், குறிப்பிட்ட இனத்துக்கு மட்டுமே யோக மரபு மற்றும் பயிற்சிகள் உதவும் என்கிற தவறான எண்ணமும் தோன்றிவிட வாய்ப்புண்டு. ஆகவே, யோகம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் நம்முடைய முயற்சியில் அதன் சாதக பாதக அம்சங்களையும், உண்மை தன்மையையும் கவனத்தில்கொண்டே யோக முறையை முன்வைக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, சில யோக பள்ளிகளில் யோகப் பயிற்சிகளை செய்பவர்கள் தங்கள் பயிற்சிகளை பற்றி உயர்வாகச் சொல்லவேண்டும் என்பதற்காக, காலத்தால் எவ்வளவு பின்னால் சென்று வைக்க முடியுமோ அதைச் செய்வார்கள். சூரிய நமஸ்காரம் எனும் பயிற்சி ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே இருப்பதாகவும், ஆறாயிரம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளைச் செய்து பலனடைந்ததாகவும் சொல்வார்கள். அதில் எவ்வித உண்மைத்தன்மையும், ஆதாரமும் இல்லை என்பதே நிதர்சனம்.
மராட்டிய மன்னர்களின் குருவான ‘சமர்த்த ராம்தாஸ்’ எனும் துறவிதான், சூரிய வழிபாட்டை மேம்படுத்தி அதையொட்டி சில உடற்பயிற்சிகளை வடிவமைக்கிறார். அது படை வீரர்களுக்கு போர்த் தொழிலில் ஈடுபடுவோருக்குமான ஒரு பயிற்சியாக மாறுகிறது. இது அனைத்தும் 17ம் நூற்றாண்டில்தான் புழக்கத்துக்கு வருகிறது. ஆக, சூரிய நமஸ்காரம் எனும் ஆசனப் பயிற்சி ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பயிற்சி செய்யப்படவில்லை.
சூரிய வழிபாட்டில் இருந்த ஒன்று ஆசனங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதே நம்மிடமுள்ள சான்று. அதே வேளையில் இந்தப் பயிற்சியில் இருக்கும் சாதகமான மற்றும் பலன்களை நாம் எவ்வகையிலும் மறுக்கவே முடியாத அளவுக்கு கடந்த நூறு வருடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக, MET என்பது நமது ஆரோக்யத்தை மதிப்பிடும் அளவுகோல்களில் முக்கியமான ஒன்று. அதாவது, MET {METABOLIC EQUIALENT OF TASK} இதன்படி 18 வயது முதல் 65 வயது வரை இருக்கும் ஒருவர் வாரத்தில் ஐந்து நாட்கள் ஒவ்வொரு நாளும் இருபது நிமிடம், மூச்சுடன் இணைந்த ஒரு உடற்பயிற்சியை செய்வதன் மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபட முடியும். அப்படிப் பயிற்சி செய்யும் போது 3 முதல் 6 என்கிற அளவில் நம்முடைய வளர்சிதை மாற்றம் {MET} குறிக்கப்படுகிறது.
இதுவே சூரிய நமஸ்காரம் போன்ற ஒரு முழுமையான பயிற்சியின் போது இந்த அளவீடு 3 முதல் 7 வரை அதிகரித்து, ஆற்றல் மிக்க ஒருவராக நம்மை மாற்றுகிறது. ஏனெனில், இதில் பன்னிரண்டு வகையான அசைவுகள், ஆசனங்கள் இணைந்து ஒரு சுற்று சூரிய நமஸ்காரம் என வரையறுக்கப்படுகிறது. வெறும் ஐந்து முதல் பன்னிரண்டு சுற்று பயிற்சி ஒரு நாள் பொழுது முழுமைக்குமான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் அதனை சரியான விதத்தில் சேமித்தும் வைப்பதால், காலையில் பத்து நிமிட சூரிய நமஸ்காரப் பயிற்சியின் தாக்கம் மாலை வரை நம்மில் செயல்படுகிறது.
எனினும் சூரிய நமஸ்காரப் பயிற்சியை, சிலர் வேகமாகச் செய்வதை, நூற்றியெட்டு முறை செய்து சாதனை படைப்பதை, முன் அனுபவமே இல்லாமல் நேரடியாக சூர்ய நமஸ்காரப் பயிற்சிகளைச் செய்வதை, சூரிய நமஸ்காரப் பயிற்சிக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டியவை, தவிர்க்க வேண்டியவை போன்ற பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் பயிற்சியை மேற்கொள்வது எவ்வகையிலும் நன்மை பயக்காது.
உதாரணமாக, மரபார்ந்த குருகுலங்களில் இந்தப் பயிற்சி சிகிச்சையாக, மனம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக, ஆரோக்கியமான நீண்ட கால உடலமைப்பை பெறுவதற்கான ஆன்மீக சாதனைக்காக என ஏழு நிலைகளில் வடிவமைத்து வைத்துள்ளனர். உதாரணமாக, குருகுலங்களில் மந்திர சப்தங்களுடன் இணைத்து இப்பயிற்சியை வழங்குவது ஒரு ஆன்மீக சாதகனுக்கானது.
இதே பயிற்சியை மிகச்சரியான மூச்சுடன் இணைக்கும் பொழுது தனது ஆளுமை சார்ந்த நிலைகளில் ஒருவர் சமநிலைகொள்ள முடியும்.
பயமும் கோபமும் இயல்பாக கொண்ட ஒருவருக்கு இப்பயிற்சி சரியாக கற்றுத்தரப்படும் பட்சத்தில் அந்த குணங்களில் அவருக்கு மிகப்பெரிய கட்டுப்பாடும், ஆளும் திறனும் உண்டாகிறது என்பது அனுபவமாகவும் நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.மராத்திய மன்னர்களின் படை வீரர்களுக்கான களப் பயிற்சியாக இருந்த இந்த பத்து அல்லது பன்னிரண்டு ஆசனங்களைக் கொண்ட சூரிய நமஸ்காரம் எனும் பயிற்சிக்கு முழுமையான தரவுகள் இல்லாவிட்டாலும் , 1924ல் திருமலை கிருஷ்ணமாச்சாரி அவர்கள்தான் இன்றைய வடிவிலான முழுமையான பாடத்திட்டத்தைத் தயாரிக்கிறார்.
அவருடைய கருத்துப்படி சூரிய நமஸ்காரப் பயிற்சிகள் உடல் சார்ந்த தளத்திலிருந்து உயர்வான ஆன்மிக சாதனை வரை அனைத்துக்கும் இந்தப் பயிற்சியை பயன்படுத்தலாம். அவர் இதை காயத்ரி மந்திரத்துடன் இணைத்தும், மூச்சுடன் இணைத்தும் பலவாறு பயன்படுத்தி அவருடைய அடுத்த தலைமுறை சீடர்களான, பட்டாபி ஜ்யோஷ், பி கே எஸ் அய்யங்கார், போன்றவர்களுக்கு வழங்கி மைசூர் யோக பரம்பரையில் இந்தப் பயிற்சியை முக்கியமான அங்கமாக உருவாக்கியிருக்கிறார்.
பீஹார் யோக மரபில் சூரிய நமஸ்காரத்தை ‘பீஜ’ மந்திரத்துடன் இணைத்து, கற்றுக்கொடுக்கும் முறையைத் தொன்மையான சூரிய வழிபாட்டு முறையான ‘த்ரிசா கல்ப நமஸ்கார’ எனும் வடிவத்திலிருந்து பெற்று, உடலாற்றல், தைரியம், ஆளுமைத்திறன், தர்க்கம், புத்திகூர்மை மற்றும் புரிந்து கொள்ளும் திறன் எனப் பலவகையான மனித மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் விதத்தில் மிகத்திறம்பட வடிவமைத்துள்ளனர்.
எனினும் ஆர்வத்தில் அவசரமாகக் கற்றுக்கொள்வதைவிட, சரியான மரபை, ஆசிரியரைக் கண்டு தேர்ந்து இவ்வகைத் தொன்மையான பயிற்சிகளைக் கற்று முழுமையான பயனை அடைய முடியும். நம் ஆழத்தில் சென்று பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல பாடத் திட்டம் என்பது நமக்கு வழங்கப்படும் ஆசிகள். அவற்றை முறையாகப் பெற்றுக்கொள்வோம்.
உஷ்ட்ராசனம்
இந்தப் பகுதியில் உஷ்ட்ராசனம் எனும் பயிற்சியைக் காணலாம், இது சுவாச மண்டலம் முழுவதையும் சீராக்குவதும் நீண்ட கால அளவில் உடலில் தேங்கிவிட்ட இறுக்கங்கள் மற்றும் பெருங்குடல் உணவு செரிமான மண்டலத்தில் தேங்கியுள்ள விஷத்தன்மையையும் நீக்குவதில் மிக முக்கியமான பயிற்சியாக, சிகிச்சை சார்ந்த முறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. மூன்று மாத காலம் முயன்று பார்த்து முழு பலனையும் அடையலாம்.
மூட்டுக்கால்கள் இரண்டிலும் நின்றபடி, படிப்படியாக பின்புறம் சாய்ந்து பின்னங்கால், குதிகால் பகுதியைத் தொட முயலலாம். முடிந்தால் தொட்ட நிலையில் மேற்கூரை அல்லது வானம் பார்த்த நிலையில், உடலை இலகுவாக்கி நிறுத்தி மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடவும். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து சுற்றுகள் வரை மட்டுமே செய்தால் போதுமானது.