நலம் தரும் வெந்தயக் கீரை! (மருத்துவம்)
இன்றைய சமூகத்தினர் மாறுபட்ட உணவுப்பழக்கம், இராசயனம் கலந்த உணவுப் பொருட்கள், வேறுபட்ட பணி நேர சூழல் போன்ற காரணங்களால் பல்வேறு நோய்களை இலவசமாக பெற்றுக் கொள்கிறார்கள். நோய்களை தடுக்க நவீன மருத்துவத்தில் பல வசதிகள் இருந்தாலும், பெரும்பாலானோர் இயற்கை வழிமுறையில் குணம் பெற விரும்புகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. நமது உடல் இயல்பாகவே நோயினை எதிர்க்க சர்வ வல்லமையுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொண்டுள்ளது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்படுத்த அனைத்துச் சத்துகள் உள்ளடங்கிய உணவு முறையை பின்பற்றுவது மிக அவசியம். குறிப்பாக பாரம்பரிய உணவு முறை. பாரம்பரிய உணவு முறையினை பற்றியும், அவற்றை பயன்படுத்திய விதத்தைப் பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது கட்டாயமாக உள்ளது.
குழந்தைகளில் பெரும்பாலானோர் தீமை விளைவிக்கும் துரித வகை உணவுகளை உட்கொள்ளவே விரும்புகிறார்கள். தவிர கீரையை உட்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால், கீரைகள் ஊட்டச்சத்துகள் நிறைந்தவையாகவும், மருத்துவக் குணங்கள் கொண்டவைகளாகவும் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக வெந்தயக்கீரை ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெந்தயத்தை பயிரிட்டு வெந்தயக்கீரையை பெறலாம்.
இது சுமார் 60.செ.மீ. உயரம் வரை வளரக்கூடியவை. இதன் தாயகம் இந்தியா மற்றும் வட ஆப்பிரிக்கா. இருப்பினும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, எகிப்து, அர்ஜென்டினா மற்றும் தெற்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெந்தயக்கீரை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
வெந்தயக்கீரை நோய் தீர்க்கும் மூலிகையாகவும் உணவாகவும் சிறப்பாகச் செயல்படக் கூடியது. எனவேதான், தற்போது சர்வதேச அளவில் வெந்தயக் கீரை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உலகத்தேவையில் 80 சதவீதத்தை பூர்த்திசெய்கிறது. வெந்தயக்கீரையின் தண்டு மற்றும் இலைகளில் பல்வேறு மருத்துவப் பண்புகள் காணப்படுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வெந்தயக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி, இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை சமநிலைப்படுத்தி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும, உடல் வெப்பமடைவதினால் ஏற்படக் கூடிய வயிற்றுச் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி போன்றவற்றை சரிசெய்யவும் பயன்படுகிறது. அதுபோன்று, உடல் உறுப்புகளில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும்.
வெந்தயக்கீரையை அரைத்து வீக்கத்தின் மீது தடவினால், விரைந்து குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக் கட்ட, காயம் ஆறும். மேலும், நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யமுடியாமல் இடுப்பு வலியுடன் இருப்பவர்கள், வெந்தயக்கீரையுடன் நாட்டுக்கோழி முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேகவைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி நீங்கும்.
இதுமட்டுமில்லாமல் புற்றுநோயை தடுக்க, ரத்தசோகை வராமலிருக்க, குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாக, கண்பார்வை குறைபாடு மற்றும் நரம்புத் தளர்ச்சியை சீர்செய்ய என பல்வேறு மருத்துவப் பண்புகளை வெந்தயக்கீரை கொண்டுள்ளது.பெண்களுக்கு மெனோபாஸ் நிலைக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவுவதாகவும் உள்ளது. வெந்தயக்கீரையின் தாவரவியல் பெயர், டிரிகோனெல்லா ஃபோனம் கிரேகம். தாவரக் குடும்பம் பேபேசியே ஆகும்.
வெந்தயக்கீரையில் காணப்படும் சத்துகள்
கார்போஹைட்ரேட் – 45-60 %
புரதம் – 20-30 %
லிப்…. – 5-10 %
வைட்டமின் மற்றும் கிளைக்கோ
ஸைடுகள் – 0.6 – 1.7 %
ஆல்கலாய்டுகள்- 0..5%
பிளேவோனாய்டுகள் – 0.09%
மேலும், தயமின்கள், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவிந், நியாசின், வைட்டமின் ஏ,பி6,கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள், செம்பு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பல தாதுப் பொருட்களும் நிறைந்தது.வெந்தயக்கீரையின் மருத்துவப் பண்புகளுக்கு அதில் உள்ளடங்கிய தாவர வேதிப்பொருட்களான ட்ரைகோநெலின், ஓரியன்டின், வைடெக்ஸின், ட்ரைகோகமாரின், ஜிஸோ ஓரியன்டின் போன்றவைகளேயாகும். மேலும் வெந்தயக்கீரை மருத்துவ சிறப்பினை பதார்த்த குணபாட நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வெந்தயக்கீரையின் குணம்
பொருமந்தம் வாயுகபம் போராடு கின்ற
விருமல் ருசியிவை யேருந்- தரையிற்
றீதி லுயர்நமனைச் சீறும் விழியணங்கே
கோதில் வெந்தயக்கீரை கொள்.
மேலும், பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள் யாவையும் இன்றைய ஆராய்ச்சி முடிவுகளோடு ஒத்துப்போவது சிறப்புக்குறியது. ஆகவே, இத்தகைய நன்மைகளையுடைய வெந்தயக்கீரையை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி வருமுன் காப்போம் என்ற சொல்வழி வாழலாம்.