தரமே எனது தாரக மந்திரம் ! (மகளிர் பக்கம்)
கார்மென்ட் பிசினஸில் கலக்கும் மரியம் ஜமாலியா!
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அதை மெய்பிக்கும் வகையில் பெண்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக ஆடைகள் அளித்து அவர்களை அழகுபடுத்தி பார்ப்பதில்தான் தனக்கு முழு மனநிறைவு என்கிறார் கார்மென்ட் பிசினஸில் கலக்கிக் கொண்டிருக்கும் ‘ரிஹாம் பொட்டிக்’ உரிமையாளர் மரியம் ஜமாலியா. படித்தது டீச்சிங் துறை என்றாலும் தற்போது பயணிப்பது ஜவுளித்துறை என்பதில் அவருக்கு பெருமகிழ்ச்சி. கார்மென்ட் பிசினஸில் தனக்கென தனியிடம் பிடித்து தனி ஒரு பெண்மணியாக வெற்றிக்கொடி நாட்டி வரும் மரியம் நம்மிடம் பரிமாறியது…
*நீங்கள் கார்மென்ட் துறையை தேர்வு செய்தது எப்படி?
நான் எம்.சி.ஏ படித்து முடித்ததும் டீச்சிங் அல்லது ஐ.டி வேலைக்குதான் போக நினைத்தேன். எதிர்பாராத விதமாக மும்பையில் இருந்த என் உறவினர் ஒருவர் எனக்கு தரவேண்டிய பணத்திற்கு ஈடாக நிறைய உடைகளை எனக்கு அனுப்பி விட்டார். அப்படி வந்த உடைகளை என்ன செய்வதென யோசித்தபோது அதனை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்காக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தினை திறந்தேன். அதில் என்னிடம் இருந்த உடைகளை போட்டோ எடுத்து பதிவு செய்தேன்.
எதிர்பாராத விதமாக அனைத்து உடைகளும் விற்று தீர்ந்தது. அப்போதுதான் இதை தொடர்ந்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது. உடைகளை வாங்கி வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தேன். ஆர்டர்கள் குவிய உடைகளை வடநாட்டில் இருந்து வாங்கி ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்தேன். வியாபாரம் வளர வீட்டில் செய்ய முடியல. அதனால் கடை ஒன்றை திறந்தேன். அப்போது உதித்ததுதான் ரிஹாம் பொட்டிக். பொதுவாகவே நான் அணியும் உடைகள் சிறப்பாக இருப்பதாக நண்பர்கள், உறவினர்கள் கூறுவார்கள். அதுவே எனது தொழிலாக மாறும்னு நான் நினைக்கவில்லை.
*உங்கள் பிசினஸின் சிறப்பம்சம் என்ன?
பொட்டிக் என்று துவங்கினாலும் அனைத்து தரப்பினரும் வாங்கக்கூடிய விலையில்தான் கொடுத்து வருகிறேன். எங்கள் கடையின் முக்கிய தாரக மந்திரம் அதன்தரம்தான். அதில் ஒருபோதும் நான் சமரசம் செய்து கொள்வதே இல்லை. என் கடையில் விற்கப்படும் உடைகளை நானே நேரில் சென்றுஅதன் தரம் பார்த்துதான் வாங்குவேன். ஆன்லைன் பிஸினஸில் கூட என்ன ஆர்டர் செய்கிறார்களோ அதை பர்பெக்டாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என் உடைகளின் தரம், அழகியல், நேர்மை இந்த மூன்று விஷயம்தான் எனக்கான நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்று தந்திருக்கிறது. என்னிடம் ஒரு முறை உடை வாங்கியவர்கள் மீண்டும் என்னை நாடி வர இதுதான் காரணம்.
*விற்பனைக்கான ஆடைகளை எங்கெங்கு தேடி வாங்குவீர்கள்?
உடைகளுக்காக வட இந்தியா முழுக்க பயணித்திருக்கிறேன். டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், இந்தூர், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அழகான உடைகள் கிடைக்கும். அந்தந்த பகுதிக்கேற்ப உடைகளை தேர்வு செய்து கொள்முதல் செய்வேன். இதனை தவிர பாகிஸ்தான், கராச்சியில் இருந்தும் சுடிதார்களை அங்கிருந்து இம்போர்ட் செய்து விற்பனை செய்கிறேன். சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் புர்கா, ஷால் சிறப்பாக இருக்கும். அதனையும் இங்கே விற்பனை செய்கிறேன். ஆரம்பத்தில் என் கடையை சென்னையில்தான் துவங்கினேன்.
வியாபாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த போது சொந்த ஊரான காயல்பட்டினம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கு கடை ஆரம்பித்தேன். தற்போது அங்கு ஊருக்குள் ஒரு கடையும், சுற்றுலா பயணிகளுக்காக கடற்கரை பகுதியில் மற்றொரு கடை என இரண்டு கடைகளை நடத்தி வருகிறேன். இப்போது நாங்க கொச்சிக்கு செல்ல இருப்பதால் அங்கும் ஒரு கடையை ஆரம்பிக்க உள்ளோம். ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். சிலர் எங்களின் மொத்த விலையில் உடைகளை வாங்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்தும் வருகின்றனர்.
*இந்த துறையில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள்…
எந்த துறையில்தான் பிரச்னைகள் இல்லை. ஒரு முறை கொல்கத்தாவில் துணிகளை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். ஆனால் எனக்கு வந்ததோ நான் தேர்வு செய்யப்படாத துணிகள். திரும்ப விமானத்தில் பயணித்து நான் தேர்வு செய்த துணிகளை வாங்கி வாந்தேன். அதே போன்று பல இடங்களில் பணத்தை வாங்கி ஆட்கள் தலைமறைவான சம்பவங்களும் உண்டு. கொரோனா காலகட்டத்தில் விற்பனை செய்யமுடியாமல் நஷ்டமடைந்த சூழலையும் சமாளித்து வெளிவருவதெல்லாம் பெரும் சவாலாக இருந்தது.
*புதியதாக வரும் பெண் தொழில் முனைவோருக்கு உங்க அட்வைஸ்?
முதலில் சிறிய முதலீட்டில்தான் தொழில் துவங்க வேண்டும். அவர்கள் வசிக்கும் இடம், மக்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டும். குடும்பத்தின் ஆதரவு மிகவும் அவசியம். உடைகள் கொள்முதல் செய்ய பல ஊர்களுக்கு தயக்கம் இல்லாமல் பயணிக்க வேண்டும். அந்த விஷயத்தில் முழு ஆதரவு என் குடும்பம் எனக்கு தந்து வருகிறது. அதனால்தான் தனியொரு பெண்ணாக என்னால் இந்த தொழிலில் மிகச்சிறப்பாக இயங்க முடிகிறது.
*எதிர்கால லட்சியங்கள்?
இந்த துறையில் பல பெண்கள் மிளிர வேண்டும். அதற்காக என்னை நாடி வரும் பெண்களுக்கு புதிய தொழில் துவங்க ஆலோசனைகள், என்னுடைய சரக்குகளை தந்து விற்பனைக்கு உதவி செய்கிறேன். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர விரும்புகிறேன். என் கடையில் வேலை பார்ப்பது அனைவரும் பெண்கள்தான்.‘தரம்…’ அதற்காக நான் எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்வதில்லை’’ என்கிறார் மரியம்.