உணவுகளை பாரம்பரிய முறையில் பதப்படுத்துவதே எங்களின் யு.எஸ்.பி!!! (மகளிர் பக்கம்)
ஊரில் பத்தாயத்தில் இருக்கும் அந்த பெரிய பீங்கான் ஜாடி. அதை திறந்தால் அந்த இடம் முழுதும் கடுகு பொடி எண்ணெயுடன் கலந்த ஊறுகாயின் மணம் வீசும். இது போன்ற மணம் வீசும் ஊறுகாய்களை பாட்டி வீட்டில்தான் நாம் சாப்பிட்டு இருப்போம். இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாட்டில் ஊறுகாய்களுக்கு நாம் பழகிவிட்டோம். ஆனால் திருப்பூரில் இன்றும் எந்தவித இயந்திரங்கள் மற்றும் ரசாயன முறையில் பதப்படுத்தாமல், அதே பாரம்பரிய முறையில் ஊறுகாய், ெதாக்கு, பொடி, ஜாம் வகைகளை தயாரித்து வருகிறார் காயத்ரி. உணவு மேல் இருந்த ஆர்வம் காரணமாக இந்த தொழிலை ஆரம்பித்தவர் தற்போது தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் இவரின் ‘காயுஸ் ஹோம் ஃபுட்ஸில்’ தயாராகும் உணவுப் பொருட்களை ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறார்.
‘‘நாங்க எல்லா உணவுப் பொருட்களையும் வீட்டில் பாரம்பரிய முறையில் செய்வது போலதான் செய்கிறோம். இரும்பு மற்றும் பித்தளைப் பாத்திரம்தான் பயன்படுத்துகிறோம். இயந்திரங்கள் பயன்படுத்துவதில்லை. இயற்கை முறையில் எங்களின் தோட்டம் மற்றும் ஆர்கானிக் கடைகளில் உள்ள பொருட்களைக் கொண்டு எங்களின் அனைத்து உணவுப் பொருட்களும் தயாராகிறது. இதில் எசென்ஸ் அல்லது பதப்படுத்த பயன்படுத்தும் பிரிசர்வேடிவ்கள் இருக்காது. ஜாம்கள் செய்யக்கூட பழங்களின் கூழ் கொண்டுதான் செய்கிறோம்’’ என்ற காயத்ரி இந்த தொழிலுக்கு வந்த காரணம் பற்றி விவரித்தார்.
‘‘எனக்கு சமையல் மேல் தனிப்பட்ட விருப்பம் உண்டு. ஆனால் அதுவே எனக்கான அடையாளமாக மாறும்னு நான் நினைக்கல. சொல்லப்போனால் எனக்குள் சமையல் கலை இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. ஒருத்தர் மூலமாக ஒருத்தர் வாங்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு என் மேல் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது. முதலில் நெல்லிக்காய் ஊறுகாய் மட்டும்தான் போட்டேன். இப்போது ஜாம், பொடி, ெதாக்கு என 60 விதமான உணவுகளை விற்பனை செய்து வருகிறேன்.
இவை அனைத்துமே பாரம்பரிய முறையில் தயாரிக்கிறோம். நான் இந்த துறைக்குள் நுழைவதற்கு முன் இந்த உணவுகள் குறித்து பல ஆய்வுகள் செய்தேன். எல்லா பொருட்களையும் வாங்கி அதில் என்னென்ன பொருட்களை சேர்த்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அப்படிப் பார்க்கும் போது ஊறுகாய், தொக்கு போன்ற பொருட்கள் கெடாமல் இருக்க வினிகர் மற்றும் சில பிரிசர்வேடிவ் பொடிகளை கலப்பார்கள். இவை எதையுமே சேர்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். பாட்டி காலத்தில் ஊறுகாய்க்கு என தனிப்பட்ட பிராண்டுகள் எல்லாம் கிடையாது.
வீட்டில்தான் செய்வார்கள். அது பல மாசம் கெடாமல் இருக்கும். அந்த முறையை கடைப்பிடிக்க விரும்பினேன். எங்க வீட்டில் உள்ளவர்களிடம் பாரம்பரிய முறையில் ஊறுகாய் போடுவது குறித்து தெரிந்துகொண்டேன். அடுத்து என்ன இயற்கை பொருட்களை சேர்த்தால் உணவு கெடாமல் இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டு அதன்படி தயாரிக்க ஆரம்பித்தேன்.
என்னைப் பொறுத்தவரை கீரையில் தொக்கு செய்தால் அந்தக் கீரையின் தன்மை நாம் சாப்பிடும் போது சுவையில் தெரியவேண்டும்’’ என்றவர் பிசினஸ் துறையில் கால் பதித்தது பற்றி விவரித்தார்.‘‘எங்களுடையது பிசினஸ் குடும்பம். என் மாமனார் திருப்பூரில் உள்ளாடை நிறுவனம் ஒன்றை கடந்த 50 வருடமாக நிர்வகித்து வருகிறார். என் கணவர் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கார். ஆரம்பத்தில் நாங்களும் கடையில் விற்கும் பொருட்களைதான் வாங்கினோம். அதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது.
பிறகுதான் வீட்டில் கலப்படம் இல்லாத உணவுகளை செய்யலாம்னு முடிவு செய்தேன். அந்த சமயத்தில் எங்க தோட்டத்தில் நெல்லிக்காய் நிறைய காய்த்து இருந்தது. அதை கொண்டு என்ன செய்யலாம்னு யோசித்த போதுதான் என் உறவினர் ஊறுகாய் போடலாம்னு ஐடியா சொன்னார். என் உறவினர்கள், நண்பர்களுக்கு என கொடுத்தேன். அவர்கள் மூலமாக பலர் கேட்க ஆரம்பித்தார்கள். நான் முதன் முதலில் போட்ட நெல்லிக்காய் ஊறுகாய் கிட்டத்தட்ட 450 பாட்டில்கள் வரை விற்பனையானது.
வாங்கிய அனைவரும் இதையே பிசினசா செய்தா நல்லா இருக்கும்னு சொன்னார்கள். எனக்கும் உணவு மேல் ஈடுபாடு இருந்ததால் நார்த்தங்காய், முடக்கத்தான் கீரை தொக்கு, வல்லாரை கீரை தொக்கு என செய்ய ஆரம்பித்தேன். நாங்க இது ஆரம்பிச்சு இரண்டு வருஷமானாலும் கடந்த நான்கு மாதமாகத்தான் ஜாம்களை அறிமுகம் செய்து விற்பனை செய்கிறோம். நான் செய்யும் பொருட்களை பிரபலப்படுத்த @gayushomefoods என்ற பெயரில் இன்ஸ்டா பக்கம் துவங்கினேன். அதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. சிலர் அவர்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.
அதற்கு ஏற்பவும் செய்து தருகிறோம். ஒருவர் தன்னுடைய உணவில் கொய்யா இலையினை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். அவருக்காக கொய்யா பருப்பு பொடியினை தயாரித்து கொடுத்தோம். அதேபோல் முருங்கை இலையில் இட்லிப் பொடி, நாவல் பழ சீசன் போது அதில் ஜாம் என செய்து தருகிறோம். நாங்க பெரிய அளவில் எதையுமே தயாரிப்பது இல்லை. எங்களின் அதிகபட்சமே பத்து கிலோதான். அதுவும் ஆர்டரின் பேரில் செய்வதால், எதுவுமே எங்களிடம் அதிக நாட்கள் ஸ்டாக்கில் இருக்காது’’ என்றவர் இயற்கை முறையில் எவ்வாறு பதப்படுத்துவது குறித்து விவரித்தார்.
‘‘நாங்க எல்லாமே தோட்டத்தில் குறிப்பாக இயற்ைக முறையில் விவசாயம் செய்யும் பொருட்களைதான் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் பெரும்பாலான பொருட்களை எங்களின் தோட்டத்தில் இருந்தே எடுத்துக்கொள்வோம். நார்த்தங்காய், நெல்லிக்காய், முடக்கத்தான் கீரை, வல்லாரைக் கீரை, கொய்யாப்பழம், அத்திப்பழம், இஞ்சி, மிளகு போன்றவை எங்க தோட்டத்தில் விளைகிறது. வடுமாங்காய் திருமூர்த்தியிலும், மாகாலிக் கிழங்கை கொல்லிமலையில் இருந்தும் கொண்டு வருகிறோம்.
ஊறுகாய், ெதாக்குகளுக்கு செக்கு எண்ணெய் மட்டும் பயன்படுத்துகிறோம். இப்படி ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து தயாரிக்கிறோம். அதேபோல் அதனை பதப்படுத்துவதிலும் நம்முடைய முன்னோர்கள் பாணியை கடைபிடிக்கிறோம். பொதுவாக எந்த உணவுப் பொருட்களையும் உப்பில் ஊற வைத்து வெயிலில் நன்கு காய வைத்தால் அது அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். இதுவே இயற்கையான பிரிசர்வேடிவ்.
அதேபோல் கடுகு பொடி மற்றும் எண்ணெயும் உணவுகள் கெடாமல் பார்த்துக் கொள்ளும். ஜாம் பொறுத்தவரை ஒரு பழத்தை வேகவைத்து அதை கூழாக்கி கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் மெல்லிய தணலில் கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அது திக்கான அல்வா பதத்திற்கு வரும். அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்தால் கெடாமல் கடையில் கிடைக்கும் ஜாமுடைய பதத்தில் இருக்கும்.
முதலில் வீட்டிலேயேதான் தயாரிச்சோம். ஆர்டர் அதிகமாக வீட்டின் பின்புறம் ஒரு கிச்சன் அமைத்து அதில்தான் தயாரிக்கிறோம். உணவுப் பொருட்களை விற்பனை செய்ய FSSI அங்கீகாரம் அவசியம். அதற்கு தனிப்பட்ட கிச்சன் வேண்டும். எனக்கு அதிக அளவில் தயாரிக்க விருப்பமில்லை. அவ்வாறு செய்யும் போது இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் செய்ய முடியாது.
இப்போது வரும் ஆர்டர்களே நிறைந்து இருக்கு. என்னைப் பொறுத்தவரை அதிக அளவில் தயாரிப்பதற்கு பதில், வேறு புதிய பொருட்களை அறிமுகம் செய்யலாம். அதன் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பானங்கள், சிறுதானிய இன்ஸ்டன்ட் மிக்ஸ் மாவுகள் போன்றவை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. எங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களும் கொஞ்சம் வித்தியாசமானவை.
குறிப்பாக மாகாலிக் கிழங்கு ஊறுகாய், கேரட், தாமரைத் தண்டு, பச்சை மிளகு ஊறுகாய்கள், இஞ்சி புளி தொக்கு, புளிக்காய்ச்சல், செவ்வாழைப்பழ ஜாம், அத்தி, பேரீச்சை, ஆப்பில், நாவல்பழம், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் இவை மற்ற இடங்களில் கிடைப்பதில்லை சீசனுக்கு ஏற்ப செய்வதால், எங்களிடம் எப்போதுமே உணவுகள் ஃபிரெஷ்ஷாக கிடைக்கும்’’ என்றவர், கூடிய விரைவில் உணவுப் பொருட்களுக்கான இணையம் ஒன்றை துவங்கி அதன் மூலம் தன் தொழிலை விரிவுப்படுத்த உள்ளார்.