விடியற்காலை சுடச்சுட தயாராகும் காஞ்சிபுர இட்லி! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 47 Second

தமிழ்நாடு முழுக்கவே நம் உள்ளங்கை அளவிற்கு மட்டுமே இருக்கும் இட்லியைதானே பார்த்திருப்போம். ஆனால் காஞ்சிபுரத்திலோ மந்தாரை இலைகளால் மூடி மூங்கில் குடலைகளில் இட்லி தயார் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு இந்த வகை இட்லியைதான் காலம் காலமாக நைவேத்தியம் செய்கிறார்கள். அதனால்தான் அங்கு கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் இட்லிக்கு காஞ்சிபுர கோவில் இட்லி என பெயர் வந்தது.

இட்லி மட்டுமில்லாமல் தோசையுடன் வடையும் சேர்த்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. வரதராஜ பெருமாளுக்கு இரண்டு இட்லிகள் நைவேத்தியம் செய்யப்படும். அதன் பிறகு ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

15-ம் நூற்றாண்டில் கோயிலில் தாயார் சந்நதிக்கு எதிரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், இறைவனுக்குப் படைக்கப்படும் தோசைக்குத் தேவையான பொருட்கள், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்களை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், அதற்குத் தேவையான தானத்தை கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கிரந்தமும் தமிழும் கலந்த மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி நைவேத்தியம் செய்தவர், கிருஷ்ணரின் எட்டு பக்தர்களில் ஒருவரான வல்லபாச்சார்யர் என்று சொல்கிறார்கள். அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த மந்தாரை இலையில் வைத்து நைவேத்தியம் செய்திருக்கிறார். அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேகவைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது. பல வருடங்களாக இறைவனுக்கு படைக்கப்படும் இந்த காஞ்சிபுரம் இட்லியினை கடந்த இரண்டு தலைமுறைகளாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார் காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன்.

‘‘கோயிலில் பெருமாளுக்கு பிரசாதமாக படைக்கப்படும் அதே இட்லியை கோவிலில் கொடுத்தாலும் நாங்க மக்களுக்கு தினசரி காலை நேரத்தில் விற்பனை செய்து வருகிறோம். என் அப்பாதான் முதன் முதலில் இந்த இட்லி தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு பிறகு நான் அதை தொடர்ந்து செய்து வருகிறேன். நான் இதை முழு நேரமாக செய்வதில்லை. காலை ஒரு வேளை மட்டும் தான் நாங்க அந்த இட்லியினை தயாரிக்கிறோம். அதுவும் என் மனைவிதான் இந்த தொழிலை விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். மூங்கில் குடலையில் தயாராகும் இந்த இட்லியை சாப்பிடவே பல பேர் இங்கு வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் கோவில் இட்லி கடைகள் அதிகமாக இருக்கின்றன. நாங்கள் அதிகமாக இப்போது இட்லி செய்வதில்லை. ஆர்டர் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கோவில் இட்லி செய்து தருகிறோம். அதுவும் ஒரு நாள் முன்பே இட்லி வேண்டும் என எங்களிடம் ஆர்டர் சொல்லிவிட வேண்டும்.

அவர்களுக்கு மட்டுமே மறுநாள் காலையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். அதிகாலை மூன்று மணிக்கு இட்லி தயார் செய்ய ஆரம்பித்தால் காலை 6 மணிக்கு இட்லி தயாராகிடும். இந்த இட்லி இரண்டு நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த இட்லியை நம்முடைய வீடுகளில் காலை நேர உணவாக செய்யலாம்’’ என்றவர் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற குறிப்பும் வழங்கினார்.

‘‘பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் எல்லாம் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து ரவை மாதிரியான பதத்தில் அரைத்து வைக்க வேண்டும். அரைத்த மாவில் மிளகு, சீரகம், சுக்கு தூள், பெருங்காயம், உப்பு, எண்ணெய் விட்டு கலந்து விட வேண்டும். மூங்கில் குடலையில் 2 மந்தாரை இலைகளை உள்ளே வைத்து தயாரித்து வைத்திருக்கும் மாவினை அதில் ஊற்றி அதற்குண்டான இட்லி குண்டாவில் வைத்து வேக வைத்து எடுத்தால் காஞ்சிபுரம் இட்லி தயார்.

இந்த இட்லியை மூங்கில் குடலையிலும் மந்தாரை இலையிலும் செய்தால் மட்டுமே அதற்குண்டான தனி சுவை கிடைக்கும். இப்படி செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்பதால் பெரிதாக வெளி மாவட்டங்களில் செய்வதில்லை. காஞ்சிபுரத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இதனை விற்பனை செய்தால் கண்டிப்பாக மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இது மாறும்’’ என்று சொல்கிறார் கண்ணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நகைப் பெட்டிக்குள் இனிப்பு வகைகள்!! (மகளிர் பக்கம்)