ஆசிரியர்களை கவுரவித்த வெள்ளி விழா மாணவர்கள்!!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 41 Second

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்றெல்லாம் கூறுவதை அடிக்கடி கேள்விப்பட்டாலும், அதை கேட்கும் பொழுது நமக்குள் பெருமையுடன் கூடிய மரியாதை ஏற்படத்தான் செய்கிறது. காலங்கள் மாறிவிட்டன. பிள்ளைகளின் கல்வியில் ‘கொரோனா’ காலத்திற்கு பின் உத்வேகம் வந்ததாக நினைக்க முடியுமா என்றெல்லாம் வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, படித்து முடித்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நோக்குவது என்பது, இன்றைய பிள்ளைகளுக்கும் வழிகாட்டி பாலமாகத்தான் அமையும். ‘குருகுல’ கல்வி காலத்தில், குருவுக்கு தொண்டு செய்வதே தங்களின் கடமையாக சீடர்கள் நினைத்தனர். அந்தக் காலம் மாறிப்போய், பெற்றோர் கண்டிப்பும், ஆசிரியர் கண்டிப்பும் சேர்ந்து பிள்ளைகளை தலைநிமிரச் செய்தது. இன்றைய காலகட்டம் இடைவெளி குறைந்து, ஆசிரியர் – மாணவர் நட்புணர்வோடு பழகும் காலகட்டம்.

எப்படியெல்லாம் மாற்றங்கள் வந்தாலும், ஒவ்வொருவருக்கும் கடந்து வந்த பாதை என்பது வாழ்க்கையின் முதற்படியாக இருக்கலாம். பொதுவாக பள்ளிகளில் பழைய மாணவர் கூட்டம் நடைபெறுவதுண்டு. அந்த சமயம் சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் கலந்து கொள்வார்கள். பழைய மாணவர்கள் கலந்து பேசி அப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதும் அருமையான ஒரு செயலாகும். அப்படியாக ஒரு பள்ளியில் 25 ஆண்டுகள் பள்ளி முடித்தவுடன் மாணவர்கள் விழா நடத்துகிறார்கள். யாராவது ஒருவர் ஆரம்பித்து வைப்பார். அவரின் வகுப்பு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிறப்புற ஏற்பாடு செய்து விடுவார்கள்.

javascript:false

javascript:false

javascript:false

javascript:false

சமூக ஊடகங்களின் வசதியால் அனைத்தும் சாத்தியமாகிறது. அதே சமயம் அவர்கள் படித்த காலத்தில், சொல்லித் தந்த ஆசிரியர்களை மறக்காமல், தேடிச் சென்று அழைத்து கௌரவப்படுத்துவது என்பது ஆசிரியருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் என்று சொல்லலாம். இன்று இந்திய மாணவர்கள் உலகம் முழுவதிலும் சென்று படித்து, வேலையும் பார்க்கிறார்கள். பள்ளி முடித்து 25 ஆண்டுகள் – வெள்ளி விழா காலமென்றால், வாழ்க்கையில்தான் எத்தனையெத்தனை மாற்றங்கள்!

ஒருநாள், ஒரு மணி நேரம் அல்லது ஓரிரு நிமிடங்களில் நாம் நினைக்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தப் பிள்ளைகள், படித்து முடித்து 25 ஆண்டுகளுக்குப் பின் உலகத்தின் மூலைகளிலிருந்து, விடுமுறைக்கு வந்து ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் தோற்றம், குடும்பம், பெற்றோராக அவர்களின் நிலை போன்ற அனைத்தையும் அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல்தான்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ‘யூனியன் கிறித்துவ மேல்நிலைப்பள்ளி.’ அங்கு 1998ல் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துச் சென்றவர்கள், 25 ஆண்டுகள் கழித்து வெள்ளி விழா காலத்தில் ஒன்று கூடினார்கள். ஒவ்வொருவரும் உலகத்தின் வெவ்வேறு மூலைகளிலிருந்து வந்து சேர்ந்து கொண்டது மிகவும் அற்புதமான விஷயம். அமெரிக்கா, மலேசியா, கனடா, துபாய், இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வாழும் பிள்ளைகள் தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து வெள்ளி விழாவினை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் அவர்களுக்குள் நட்பைத் தொடர்ந்தாலும், நேரடியாக சந்தித்து பழைய நினைவுகளை பகிர்வது, அவரவர் வாழ்க்கை பற்றி அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் போது அது ஒரு ருசிகரமான நிகழ்வாக மாறுகிறது. அதிலும் நம் பிள்ளைகள் திறமைமிகுந்த மருத்துவராகவும், உலக வங்கிகளில் பணிபுரிபவராகவும், பல்வேறு கம்பெனிகளில் மேனேஜராகவும், படத் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்கள் என்று கேட்கும் பொழுது நம்மால் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

90-ம் ஆண்டுகளில் வகுப்பில் சிறு பிள்ளைகளாக நாம் பார்த்தவர்கள், இன்று குழந்தைகளின் பெற்றோராக காணப்படுகிறார்கள். பெற்றோராகி தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொழுதும், அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் பொழுதும் தங்கள் ஆசிரியர்களை நினைப்பதாக பெருமிதத்துடன் கூறுகிறார்கள். “எப்படித்தான் நீங்களெல்லாம் 40 பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தந்தீர்களோ?” என்று இப்பொழுது வியக்கிறார்கள்.

அன்றைய மாணவர்கள் அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அதிலும் படித்த அதே பள்ளியில், அதே அறையில் மீண்டும் ஒரு சந்திப்பு என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. கட்டட வடிவங்கள் மாறியிருந்தாலும், அவரவருக்குப் பிடித்த இடம், சாப்பிட்ட இடம், விளையாடிய இடம், குறும்புகள் செய்து மாட்டிக் கொண்ட இடம் என அனைத்தையும் தங்களுக்குள் பேசி பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.

பத்து நாட்களுக்கு முன்தான் முடிவெடுத்து அவரவர் வசதிக்கேற்றவாறு நிகழ்வு நிச்சயிக்கப்பட்டது. 1998ல் அவர்கள் படித்துச் சென்றபின் ஆசிரியர் சிலர் ஓய்வு பெற்று விட்டதாகவும் சிலர் வேறு இடங்களுக்குச் சென்று விட்டதாகவும், என அனைத்து ஆசிரியர்கள் குறித்து அலசி ஆராய்ந்து செயல்பட்டனர். அவர்கள் பள்ளி முடிக்கும் வரை, சொல்லித் தந்த ஆசிரியர்களை விழாவிற்கு அழைத்துப் பெருமை சேர்த்தனர். ஒவ்வொரு ஆசிரியரையும் வீட்டிற்கே வந்து அழைத்துச் சென்று, முடிந்தவுடன் கொண்டு விடுவதாகவும் ‘வாட்ஸ் அப்’யில் செய்தி வந்தது. அதன்படி சரியான நேரத்திற்கு ஒவ்வொருவர் வீட்டிற்கும் வண்டி அனுப்பப்பட்டு மாணவர்களுடன் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.

17 வயதில் நாங்கள் பார்த்த பிள்ளைகள்தான். இன்று அனைவருக்கும் 40க்கு மேல் வயதானாலும், இரண்டு குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோராக இருந்தாலும், எங்களின் கண்களுக்கு குழந்தைகளாகத்தான் தெரிந்தார்கள். “யாரைப் பார்த்தாலும் பயப்படாத எங்களுக்கு, எங்கள் ஆசிரியர்களிடம் மட்டும் பயம் கலந்த பக்தியும், மரியாதையும் ஏற்படுகிறது” என்றார்கள். இதுவல்லவா ‘குரு-சிஷ்ய’ பந்தம் என்பது.

ஒவ்வொருவரும் அன்றைய நிகழ்வுகளைச் சொல்லி, “மலரும் புதிய நினைவுகளாக” மாற்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் செயல்களைப் பாராட்ட, குறும்புத்தனங்களைப் பேசி குதூகலிக்க நேரம் செல்வதே தெரியாமல் பொழுது கழிந்தது. பிரிய மனமில்லாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் வெள்ளி விழா சந்திப்பு நடந்தது. ஆசியர்களை கௌரவித்த விதம் புல்லரித்தது. நன்றியுணர்வும், கடமை உணர்ச்சியும் நம் மண்ணின் புனிதம் என்றும் கூறலாம்.மாறிவரும் காலகட்டத்தில், இன்றைய மாணவர்கள் இதே போன்ற பெரியவர் வழிகாட்டுதலை மேற்ெகாண்டாலே போதும்! நாளைய சமூகம் சிறப்படையும். “எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நியுயார்க் மிஷுலான் ஸ்டார் உணவக மெனுவில் ‘மோர் களி’!! (மகளிர் பக்கம்)
Next post கரும்புள்ளிகள் மறைய…!! (மருத்துவம்)